கடவுள் சமயத் திருக்கரம் திரு. A.Q. ஃபாய்ஸி அவர்கள் சொன்ன கதை
ஃஹஃபா நகரில் ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். இப்பொழுது அவர் ஒரு வயோதிகர். தாம் சிறுவனாக இருந்தபோது தெருக்களில் கோலி விளயாடியதாக அவர் கூறுகின்றார். கோலிகளைப் பயன்படுத்தி விளையாடுவதற்குப் பதிலாக காசுகளை வைத்து அவர் விளையாடினார். அந்த விளையாட்டின்போது, வட்டத்திற்கு வெளியே உள்ள காசுகளை யார் தட்டி விடுகின்றோரோ, அவருக்கு அந்தக் காசுகள் சொந்தம் என்பதுதான் விளையாட்டின் விதிமுறை. உண்மையில், ஒவ்வொரு நாளும் அவ்விளையாட்டில் அவர் ஈடுபட்டு வந்தார். ஒரு நாள் அவ்விளையாட்டின்போது காசுகளை அவர் ஒன்று திரட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது, யாரோ தனது காதைப் பிடித்து இழுப்பதை உணர்ந்தார். யாரென்று தலையை நிமிர்த்திப் பார்த்தபோது, அங்கு அப்துல் பஹா ஒரு சிறிய கோலியை தனது காதில் வைத்து அடைப்பதைக் கண்டார். அப்துல் பஹாவின் முன் தாம் இவ்வித சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக அவர் வெட்கித் தலை குணிந்தார்.

அப்துல் பஹா அவரை எழுப்பி காதைப் பிடித்துக் கொண்டு தெரு வழியே நடந்து சென்று 7’ஆம் எண் கொண்ட தமது வீட்டிற்கு அச்சிறுவனை அழைத்துச் சென்றார். அப்துல் பஹாவின் அந்த வீட்டில் யாத்திரிகர்கள் வந்து போவது வழக்கம். வீட்டின் வாசலை அடைந்தவுடன் அப்துல் பஹா அச்சிறுவனின் காதிலிருந்து தனது கையை எடுத்து விட்டார். வீட்டினுள் நுழைந்தவுடன் அப்துல் பஹா அங்கிருந்த பணியாளர் ஒருவரிடம், “அஹ்மாட் ஒரு நல்ல பையன். நான் அவனோடு தேநீர் அருந்துவதற்காக அவனை அழைத்து வந்தேன். அவன் ஒரு சிறந்த சிறுவன். தேநீர் தயார் செய்யுங்கள்,” என்று கூறினார். அப்துல் பஹா அன்று தம்மை ஒரு நல்ல பையன் என்று கூறியது மட்டுமன்றி தம்முடன் தேநீர் அருந்துவதற்காக அழைத்து வந்ததாகச் சொன்னதையும் கண்டு தாம் மிகவும் வெட்கித் தலைகுணிந்ததாக அம்மனிதர் கூறினார். பிறகு, அப்துல் பஹா அச்சிறுவனோடு அமர்ந்து தேநீர் அருந்தினார். சுமார் அரை மணி நேரம் கழித்து அப்துல் பஹா அச்சிறுவனைப் பார்த்து, “நீ இப்பொழுது வீட்டுக்குப் புறப்பட்டு போகும் நேரம் வந்து விட்டது,” என்று கூறினார். அச்சிறுவன் புறப்பட எழுந்தபோது, அவனிடம் ஒரு மாஜிட் பணத்தைக் கொடுக்குமாறு அப்துல் பஹா தமது பணியாளரிடம் கூறினார். மாஜிட் என்பது வட்ட வடிவிலான ஒரு வெள்ளிக் காசு. அந்நாட்களில் அதன் மதிப்பு சுமார் மூன்று அமெரிக்க டாலர்கள். “அவனுக்கு ஒரு மாஜிட் கொடுத்து விடுங்கள். அது அவனுக்குத் தேவைப்படுகின்றது,” என்று அப்துல் பஹா மீண்டும் கூறினார்.
அந்த சம்பவத்திற்குப் பிறகு ஒரு முறைகூட தாம் அந்த சூது விளையாட்டில் ஈடுபட்டதே இல்லை என்று அம்மனிதர் பின்னாளில் கூறினார். அதற்குக் காரணம் மிகத் தெளிவாகவே இருந்தது. ஏனெனில், அப்துல் பஹா தமது விவேகத்தைக் காண்பித்து விட்டார். அப்துல் பஹா அச்சிறுவனுடன் நடந்து சென்று அன்பைப் பயன்படுத்தி அச்சிறுவனின் இயல்பை மாற்றி, “அஹ்மாட் ஒரு நல்ல பையன்,” எனும் வார்த்தைகளால் அவனது நல்ல பண்பினை எடுத்துரைத்து, அதே நேரத்தில் அச்சிறுவனுடைய இருள்படிந்த இயல்பை உடனே மறைத்து விட்டார்.
பஹாவுல்லாவினுடைய காலத்தில் வாழ்ந்துள்ள ஒரு நீண்டகால நம்பிக்கையாளர் என்னிடம், தாம் சிறுவனாக இருந்த காலத்தில் அப்துல் பஹா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் அச்சிறுவன் மற்றும் அவனது நண்பர்கள் தங்களுடைய புத்தகங்களில் எழுதி வைத்திருந்ததைப் பார்த்து விட்டு ஓர் எழுதுகோலையோ, ஓர் இனிப்பு மிட்டாயையோ, பாராட்டு வார்த்தைகளையோ அல்லது ஏதாவது ஒன்றை பரிசாகக் கொடுப்பார். ஒரு வெள்ளிக்கிழமையன்று அந்த நம்பிக்கையாளர் தனது புத்தகத்தில் எதையுயும் எழுதி வரவில்லை. எனவே, முந்தைய வாரத்தில் எழுதி வைத்திருந்ததையே மீண்டும் கொண்டு வந்திருந்தார். அப்துல் பஹா மாடிப்படி வழியாக கீழே இறங்கி அச்சிறுவர்கள் நின்றிருந்த இடத்திற்கு வந்தபோது அச்சிறுவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே நடந்து வந்தார். “அப்போது நான் நடுங்கிக் கொண்டிருந்தேன். என் புத்தகத்தைத் திறந்துப் பார்த்து, அது மிகவும் நன்று என்றும், ஆனால் நான் முன்னேற்றம் காட்டவில்லை என்றும் அப்துல் பஹா கூறினார்,” என்று அந்த நம்பிக்கையாளர் சொன்னார். அச்சிறுவனை நோக்கி அந்த வார்த்தைகளை மட்டுமே அவர் சொன்னார். அப்துல் பஹா கடிந்துரைக்கவுமில்லை, திட்டவுமில்லை. ஒரு பரிசையும், பாராட்டுதலையும் வழங்கிச் சென்றார். அவமானப்படுத்தவுமில்லை, மற்ற குழுந்தைகளுக்கு முன் அச்சிறுவனின் தவறைச் சுட்டிக் காட்டவுமில்லை. தவறை மறைக்கும் கண்கள் அவை.