இந்தியாவின் முதல் உள்ளூர் பஹாய் கோயில் கட்டுமானத்தின் ஆரம்பம்


இந்தியாவின் முதல் உள்ளூர் பஹாய் கோயில் கட்டுமானத்தின் ஆரம்பம்


8 அக்டோபர் 2021


ஹர்கவன், இந்தியா, 21 பிப்ரவரி 2021, (BWNS) – இந்தியாவின் முதல் உள்ளூர் பஹாய் வழிபாட்டு இல்லத்திற்கான நிலம் தோண்டுதல் இன்று ஆரம்பிக்கப்பட்டது – பீஹார் ஷாரிஃப் என அழைக்கப்படும், இந்த உள்ளூர் பகுதியில் பல தசாப்தங்களாகப் பேணப்பட்டு வந்த வழிபாடு மற்றும் சேவையின் உணர்வு இந்தக் கோவிலிருந்து வெளிப்படும். இந்தக் கோவில் கட்டுமானத்தின் தொடக்க விழா, 2012’இல் அறிவிக்கப்பட்ட ஏழு பஹாய் கோயில்களில் ஒன்றின் கட்டுமான ஆரம்பத்தைக் குறிக்கின்றது.

இந்த விழா, உள்ளூர் பிரமுகர்கள், பஹாய் சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களை ஒன்றுகூட்டியது. பிரார்த்தனை மற்றும் விளக்கேற்றும் சடங்குடன் இந்த நிகழ்வு தொடங்கியது-அறிவு, தூய்மை மற்றும் தெய்வீகத்துடனான தொடர்பை அடைவதைக் குறிக்கும் வகையில் விளக்கு ஏற்றுவது இந்திய வழக்கமாகும். சிறார்களும் இளைஞர்களும் நிகழ்ச்சியில் சிறப்புப் பங்கு வகித்தனர்; பாடல்கள் மற்றும் இசை நாடகங்களின் மூலம் பக்தி சூழ்நிலைக்கு அவர்கள் பங்களித்தனர்.

விழாவில் தனது கருத்துக்களில், ஹர்கவானின் பஞ்சாயத்து (உள்ளூர் குடிமை அமைப்பு) தலைவர் அமோத் குமார், பீகார் ஷெரீப், கோயில் குறித்த தனது எதிர்ப்பார்ப்பைப் பற்றி பேசினார். “இன்று நம் சமூகம் ஜாதி, மதம், தலைமுறை ஆகியவற்றால் பிளவுபட்டுள்ளது. பஹாய் போதனைகள் இங்குள்ள மக்களை ஒன்றிணைக்க பங்களித்துள்ளன, குறிப்பாக சிறார்கள் மற்றும் இளைஞர்கள் பஹாய் சமூகத்தின் தார்மீக கல்வித் திட்டங்களில் பங்கேற்கிறார்கள். இப்போது இந்த பகுதி வழிபாட்டு இல்லத்தை ஒரு தெய்வீக வெகுமதியாகப் பெற்றுள்ளது, மேலும், இங்குள்ள சமூகம் இந்த வெகுமதியிலிருந்து பயனடைந்து முன்னேற்றத்தையும் செழிப்பையும் தொடர்ந்து பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.”

இந்தியாவின் பஹாய் தேசிய ஆன்மீக சபையின் செயலாளர் நஸ்னீன் ரோஹானி கூறுகையில், “நமது பலவகைப்பட்ட சமுதாயத்தில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் இந்தியாவின் பெருமை வாய்ந்த வேத பாரம்பரியமான வசுதைவ குடும்பகம் (வசுதா ஏவ குடும்பகம் – உலகம் ஒரே குடும்பம்) மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. … [கோயில்] செயலில் வசுதைவ குடும்பகத்தின் ஒரு பிரகாசமான அடையாளமாக இருந்திடும். சமூகம், சாதி, நிறம், மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவரும் தங்கள் படைப்பாளருடன் உரையாடுவதற்கு இங்கு வரவேற்கப்படுவார்கள். இந்த பாரம்பரியம் பஹாவுல்லாவின் வார்த்தைகளில் உறுதிப்படுத்தப்பட்டு, வெளிப்படுத்தப்படுகிறது: ‘நீங்கள் ஒருவரையொருவர் அந்நியர்களாகக் கருதவேண்டாம். நீங்கள் ஒரு மரத்தின் கனிகளும் ஒரு கிளையின் இலைகளும் ஆவீர். முழு பூமியையும் ஒளிரச் செய்யும் அளவிற்கு ஒற்றுமையின் ஒளி அத்துனை சக்தி வாய்ந்தது.’”

கோயில் தளத்தில் பீகார் மாநிலம் முழுவதும் உள்ள கிராமங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மண்ணை வைப்பதன் மூலம் இந்த விழா உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்த நிகழ்வு இந்த கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களுக்கும் வழிபாட்டு மன்றத்திற்கும் இடையிலான தொடர்பை அடையாளப்படுத்தியது.

“இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், வணிகர்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் இறுதியில் வழிபாட்டு மன்றத்தில் தினமும் ஒன்றுகூடி சர்வவல்லமையாளரிடம் திரும்பும்போது, ​​இது இந்த சமூகத்தில் உருவாகியுள்ள ஒற்றுமையின் பிணைப்பை மேலும் வலுப்படுத்துகிறது, ”என்று ஆசியாவின் கண்ட ஆலோசகர் வாரியத்தின் உறுப்பினர் ராகுல் குமார் கூறினார்.

விழாவில் தனது கருத்துக்களில், திருமதி ரோஹானி இந்த கோயில் பீகார் ஷெரீஃப்பின் அனைத்து மக்களுக்கும் எப்படி உடைமையாக இருக்கும் என்பதை விளக்கினார். “இந்த அழகிய கட்டிடம் மனிதகுலமானது உள்ளே நுழைந்து நல்லிணக்கம், அமைதி மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றைக் காணும் இடமாக இருக்கும் என்பது இந்தியாவின் பஹாய் சமூகத்தின் தீவிர நம்பிக்கையாகும்.”

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற வழிபாட்டு இல்லத்திற்கான வடிவமைப்பின் வெளியீட்டிற்குப் பின்னர் இந்த நிலம் தோண்டுதல் நடைப்பெற்றுள்ளது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1491/