சேவை: மனிதவாழ்வின் ஒரு மெய்நிலை


மனித படைப்பின் நோக்கத்தை பஹாவுல்லா வழங்கியுள்ள பிரார்த்தனை ஒன்றில் நாம் காணலாம், அதாவது அவரை (கடவுளை) “அறிந்து வழிபடுவதற்கெனவே” நாம் படைக்கப்பட்டுள்ளோம் என்பது. கடவுளை எவ்வாறு அறிவது? கடவுளை நேரடியாக அறிந்துகொள்ளும் திறம் மனிதருக்குக் கிடையாது. ஒரு பாத்திரத்தில் நாம் நிறைய கடுகுகளை கொட்டி வைக்கலாம், ஆனால் ஒரு சிறு கடுகிற்குள் ஒரு பாத்திரத்தை நுழைக்க முடியாது. அதே முறையில் அற்ப படைப்பாகிய மனிதன், அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த கடவுளை எவ்வாறு தன் புத்திக்குள் கிரகிப்பது? இதுதான் மெய்ம்மை. மனிதரால் கடவுளை நேரடியாக அறிந்துகொள்ளவே முடியாது.

அப்படியானால் நாம் கடவுளை அறவே அறிந்துகொள்ளவே முடியாதா? கடவுளின் மெய்ம்மையை, அவரது சாரத்தை நாம் அறிந்துகொள்ளவே முடியாது. ஆனால், கடவுளின் அவதாரங்கள் மூலம் கடவுளின் தன்மைகளை, அவரது குணங்களை நாம் அறிந்துகொள்ள முடியும். கடவுள் மனிதனைத் படைத்ததோடு அவனை தனியே விட்டுவிடவில்லை. ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த தாய்தந்தையர் அக்குழந்தையை பேணி வளர்க்கின்றனர், வயது வரும் போது அக்குழந்தையை கல்விக்காக பள்ளிக்கு அனுப்புகின்றனர். சாதாரன மனிதருக்கே இந்த உணர்வு இருக்கும் போது, சிருஷ்டி அனைத்திற்கும் பிரபுவான கடவுளுக்கு அது இல்லாமல் இருக்குமா? நிச்சயமாக அவர் மனிதனைப் படைத்ததோடு விட்டுவிடாமல், அவனுக்குக் கல்வி புகட்டுவதற்காக காலத்திற்குக் காலம் அவர் தமது அவதாரங்களை மனிதரிடையே அனுப்பி மனிதர்களுக்குக் கல்வியளித்து வருகின்றார். இக்கல்வியின் நோக்கமே, மனிதன் கடவுளை அறிந்து வழிபட வேண்டும் என்பதாகும்.

கடவுளின் அவதாரங்கள் மூலம் நாம் கடவுளை அறிந்துகொள்கின்றோம், அவரது தன்மைகளை நாம் அறிந்துகொள்கின்றோம், மனிதரை அவர் படைத்த நோக்கத்தை நாம் அறிந்துகொள்கின்றோம். பஹாவுல்லா பின்வருமாறு அறிவுறுத்துகின்றார்:

இறைவனால் தமது ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட முதல் கடமை யாதெனில் தமது வெளிப்பாட்டின் பகலூற்றானவரும் தமது சட்டங்களுக்குத் தோற்றுவாயானவரும் தமது சமயம் என்னும் இராஜ்ஜியம், படைப்புலகம் ஆகிய இரண்டிலும் இறைமையைப் பிரதிநிதிப்பவருமாகிய அவரை அறிந்து, ஏற்றுக் கொள்வதுதான். இக் கடமையை எய்திடும் ஒருவன் நல்லன அனைத்தையும் அடைந்தவன் ஆவான்; அதன் இழப்பிற்கு ஆளாகிடும் ஒருவன் நேர்மைச் செயல் ஒவ்வொன்றிற்கும் தோற்றுவாயாக இருந்தபோதிலும் வழி தவறிப் போனவனே. அதி விழுமிய இந்நிலையை , உயர்வுமிகு இவ்வொளியின் உச்சத்தை அடையும் ஒவ்வொருவனும் உலகின் ஆவலாகிய அவரது ஒவ்வொரு கட்டளையையும் கடைப்பிடிக்க வேண்டியது இன்றியமையாததாகும்; இவ்விரட்டைக் கடமைகள் பிரிக்கப்பட இயலாதவை.

ஆதலால், கடவுளை அறிந்துகொண்ட பிறகு கடவுளின் ஒவ்வொரு கட்டளையையும் கடைப்பிடிக்க வேண்டியது இன்றியமையாததாக இருக்கின்றது. கடவுளின் இக்காலத்திற்கான பல கட்டளைகளினூடே ஒரு கட்டளை சற்று தனித்துவமானது. இது சேவை சம்பந்தப்பட்டதாகும். கடவுளுக்கு நாம் சேவை செய்யவேண்டும். கடவுள் சேவை என்பது அவரது படைப்பாகிய மனிதனுக்கான சேவையாகும், அதாவது ‘மக்கள் சேவை மகேசன் சேவையாகும்’. ஷோகி எஃபெண்டியின் பின்வரும் மேற்கோளைப் பார்ப்போம்:

“… (சமயத்தில்) வெற்றியை ஈட்டுவதற்கு சேவையைப் போல் வேறொன்றும் இல்லை. சேவையே தெய்வீக உறுதிப்பாடுகளை ஈர்க்கும் காந்தமாகும். ஆதலால், ஒரு மனிதன் செயல்படும் போது, அவன் பரிசுத்த ஆவியினால் ஆசீர்வதிக்கப்படுகின்றான். அவன் செயல்படாத போது, பரிசுத்த ஆவி அவனுள் ஒரு வைப்பிடத்தைக் காணாமல் போகின்றது; அதனால் அவன் அதன் குணப்படுத்தும் மற்றும் உய்விக்கும் கதிர்களை இழந்துவிடுகிறான்.”

இந்த மேற்கோளை நாம் எப்படி பார்த்தாலும், நாம் பிறவிப் பயனை அடையவேண்டுமானால் நமது சக மனிதர்களின் மேம்பாட்டிற்கு, அவர்களின் ஆன்மீக மற்றும் லௌகீக மேம்பாட்டிற்கு உதவிட வேண்டும். இதிலிருந்து நாம் தப்பவே முடியாது. இன்று உலகம் முழுவதுமுள்ள பஹாய் அன்பர்கள் தாங்கள் வாழும் சமூகங்களில் அதன் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடவுளின் ஆசி, அவரது உறுதிப்பாடுகள் ஆகியவற்றை அடைவதற்கு வேறு வழியே கிடையாது. மனிதருக்கு சில மெய்நிலைகள் உள்ளன: அவன் சாப்பிட்டாக வேண்டும், உறங்க வேண்டும், மூச்சு விட வேண்டும் மற்றும் இதர. இவற்றிலிருந்து அவன் தப்ப முடியாது, அவ்வாறு முயன்றால் அதன் விளைவு மோசமாக இருக்கும். அதே தொனியில், சேவை செய்தல் மனிதனின் மெய்நிலையாகும். அதிலிருந்து அவன் தனித்திருக்க முடியாது, அதன் விளைவு, அவன் கடவுளின் ஆசீர்வாதங்களை இழந்துவிடுகிறான்.

ஆதலால், பிடித்திருக்கின்றதோ பிடிக்கவில்லையோ, முடியுமோ முடியவில்லையோ, எப்படியாயினும் மனிதர்களாகிய நாம் ஏதாவது மக்கள் சேவையில் ஈடுபட்டே ஆகவேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: