
பஹாய்கள் வருடாந்திர உண்ணா நோன்பு காலத்தைத் தொடங்குகிறார்கள்
8 அக்டோபர் 2021
(இது 1 மார்ச் 2007’இல் வெளிவந்த செய்தி. அதன் உள்ளடக்கம் இன்னமும் தொடர்புடையதாக இருப்பதால் மீண்டும் வெளியிடப்படுகிறது)
ஹைஃபா, இஸ்ரேல் – வெனிசுவெலா கல்லூரி மாணவர் ஆஸ்கார் கடந்த ஆகஸ்ட் மாதம் பஹாய் சமயத்தில் சேர்ந்தார், இந்த மாதம் முதல் முறையாக உண்ணாவிரதத்தை கடைபிடிக்கவிருக்கின்றார்.

அவர் அதைப் பற்றி தனது தாயாரிடம் சொன்னபோது, அவர் பதற்றமடைந்தார். தமது மகன் வயதில் சிறிய இளைஞன், அவனுடைய உடல்நிலை பாதிக்கப்படும் என்று அவர் கவலைப்பட்டார்.
“ஆனால் நோன்பு நோற்றல் ஒரு பாக்கியம்!” ஆஸ்கார் தன் தாயிடம் உறுதியாகச் சொன்னான். “இது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே, இது கடவுளின் கட்டளை.”
அவரது தாயார் வெளிப்படையாக புரிந்து கொண்டார், திரு. ஆஸ்காரின் கூற்றுப்படி, அவர் சிரித்தவாறு தமது சம்மதத்தை தெரிவித்தார்.
உலகெங்கிலும், பஹாய்கள் வயது 15 முதல் 70 வரை மார்ச் 2 ஆம் தேதி தங்கள் வருடாந்திர 19 நாள் உண்ணா நோன்பைத் தொடங்குகின்றனர்; ஒவ்வொரு நாளும் சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை உணவு மற்றும் பானங்களைத் தவிர்க்கின்றனர். தங்கள் சமயத்தின் ஸ்தாபகர் பஹாவுல்லாவினால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து அவர்கள் அதைச் செய்கிறார்கள். நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஒரு சில பிரிவுகளுக்கு விலக்குகள் உள்ளன.
“இது முந்தைய மதங்களில் இருந்து வந்த உண்ணாவிரதத்தின் அடிப்படைக் கொள்கையின் பரிணாமம்” என்று “கித்தாப்-இ-அக்டாஸின் சட்டங்கள்” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தின் இணை ஆசிரியர் பஹாரீ ரூஹானி மானி கூறினார்.
“நோன்புக் கட்டளையின் சான்றுகள் ஜோராஸ்ட்ரிய சமயத்தைத் தவிர்த்து கிட்டத்தட்ட நடப்பிலுள்ள எல்லா மதங்களிலும் காணப்படுகின்றன, இது உண்ணாவிரதத்தை உறுதிப்படுத்துகிறது” என்று புத்தகம் கூறுகிறது.
கடவுளின் சட்டங்களைப் பற்றி வகுப்புகள் கற்பித்துள்ள திருமதி மா’ஆனி, பஹாவுல்லா மற்ற மதங்களை விட உண்ணா நோன்பை எளிதாக்கியுள்ளதாக உணர்கிறேன் என்று கூறுகிறார்.
உதாரணமாக, பாவநிவிர்த்தி நாளான யொம் கிப்பூரில் (Yom Kippur) யூதர்கள் ஒரு நாள் மட்டுமே நோன்பு நோற்கிறார்கள், ஆனால் அவர்கள் ஒரே நேரத்தில் 24 மணி நேரத்திற்கும் மேலாக உணவு மற்றும் பானம் தவிர்த்து விடுகிறார்கள் என்று அவர் விளக்கினார்.
முஸ்லீம் பாரம்பரியம் பஹாய் நடைமுறைக்கு ஒத்ததாக இருக்கிறது, தவிர ஒவ்வொரு நாளும் முஸ்லிம்கள் விடியற்காலை முதல் சாயங்காலம் வரை உண்ணாவிரதம் இருக்கிறார்கள் – இது சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை நோன்பிருப்பதற்கும் சற்ற நீண்ட காலமாகும். மேலும், முஸ்லிம்கள் சந்திர நாள்காட்டியைப் பின்பற்றுகிறார்கள், அதாவது சில நேரங்களில் கோடை காலத்தில் நாட்கள் நீடிக்கும் மற்றும் மிகவும் சூடாக இருக்கும் போது விரதம் நிகழும் என திருமதி மானி கூறினார்.
பஹாய் நோன்பு எப்போதும் மார்ச் மாதத்தில் விசுவத்திற்கு சற்று முன்னதாகவே வருகிறது, எனவே உலகின் பெரும்பாலான பகுதிகளில் சுமார் 12 மணிநேர நோன்பே மட்டுமே உள்ளது. நாட்கள் கணிசமாக நீளமாக இருக்கும் சில இடங்களில், நம்பிக்கையாளர்கள் கடிகார நேரத்தைப் பின்பற்றி, சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை 12 மணிநேரம் நோன்பிருக்கலாம்.
“துன்பம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே நாம் கஷ்டப்படுவதை பஹாவுல்லா விரும்பவில்லை” என்று திருமதி ம’னி கூறினார்.
உண்ணாவிரதம் குறியீடாகும் – பஹாய் திருவாக்குகளின்படி, “சுயநல மற்றும் சரீர ஆசைகளிலிருந்து விலகியிருத்தலை அது நினைவூட்டுகிறது”.
“இது அடிப்படையில் தியானம் மற்றும் பிரார்த்தனை, ஆன்மீக மீளுருவாக்கம் ஆகியவற்றின் காலமாகும், இதன் போது நம்பிக்கையாளர் தனது அக வாழ்க்கையில் தேவையான மறுசீரமைப்புகளைச் செய்திட முயல வேண்டும், மேலும், அவரது ஆத்மாவில் மறைந்திருக்கும் ஆன்மீக சக்திகளைப் புதுப்பித்து புத்துயிர் பெற வேண்டும்” என திருவாக்குகள் கூறுகின்றன.
கூடுதலாக, பஹாவுல்லா கூறுகையில், ஏழைகளின் துன்பங்களை மக்கள் நன்கு அறிந்துகொள்ள உண்ணாவிரதம் உதவுகிறது.
பஹாவுல்லாவின் மகனும் நியமிக்கப்பட்ட வாரிசுமான அப்துல்-பஹா கடவுளின் தீர்க்கதரிசிகளான – மோசஸ், இயேசு மற்றும் பஹாவுல்லா உட்பட அனைவருமே எவ்வாறு நோன்பு நோற்றார்கள் என்பதை விவரித்துள்ளார். ஆதலால், பஹாய் உண்ணாவிரத காலத்தில் நம்பிக்கையாளர்கள் ஒரே சமயத்தில் ஒரே விஷயத்தை அனுபவிப்பதன் மூலம் முக்கிய மதங்களின் ஸ்தாபகர்களுடன் நெருக்கமாகிட அனுமதிக்கிறது என அவர் கூறினார்.
பஹாய் நோன்பைப் பற்றிய ஒரு கையேட்டின் தொகுப்பாளரான டுவேய்ன் எல். ஹெர்மன், சாப்பிடுவதைத் தவிர்ப்பது மட்டுமே இங்கு அர்த்தமல்ல என்று குறிப்பிடுகிறார். விஷயம் “பற்றின்மை எனும் உள் ஆவி பற்றியதாகும், இதில் சாப்பிடுவது (ஒரு) வெறும் சின்னம் அல்லது வெளிப்புற பிரதிபலிப்பு மட்டுமே.”
வெனிசுவெலாவில் உள்ள திரு ஆஸ்கார் தனது சொந்த புதிதாக அடைந்துள்ள புரிதலை சுருக்கமாகக் கூறியது போல், “உண்ணா நோன்பின் போது, கடவுளை நன்கு அறிந்துகொள்ள நாம் ஒரு முயற்சியை நாம் மேற்கொள்கிறோம்.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/508/