மெய்யான இறை விசுவாசமும் மெய்யுறுதியும்
ஆக்கோ நகர் சிறையில் வாழ்ந்த காலத்தில், ஒரு பாரசீக மனிதர் அப்துல் பஹாவிடம் சென்று தாம் ஒரு பஹாய் என நடித்து வந்தார். உங்கள் எல்லோருக்கும் அப்துல் பஹாவைப் பற்றி தெரியும். “இல்லை, நீ ஒரு பஹாய் இல்லை” என அப்துல் பஹா அம்மனிதரிடம் என்றுமே கூறமாட்டார். அதற்குப் பதிலாக “மிக்க நன்று.” என்றே அவர் கூறினார். அதன் பிறகு அப்துல் பஹா ஹாஜி இப்ராஹீம் என்ற ஒரு வயதான நம்பிக்கையாளரை அழைத்தார். அவரும் வீட்டிற்கு உள்ளே வந்தார். “ஹாஜி, இவர் உங்கள் விருந்தினர். அவரை உங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்,” என்று கூறினார். ஹாஜி அவர்கள் அப்துல் பஹா தமக்கு ஒரு விருந்தினரை அனுப்பி வைத்தார் என்ற காரணத்தால் மிகவும் பெருமைப் பட்டார், மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர் இந்த மனிதரைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவரை தன் வீட்டில் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் தங்க வைத்து தம்மால் இயன்ற அனைத்து உபசரிப்பையும் வழங்கினார்.
சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு, அந்த விருந்தினர் அப்துல் பஹாவிடம் வந்து இவ்வாறு கூறினார்: “நான் இருபது தங்க காசுகள் வைத்திருந்தேன். அவை காணாமல் போய்விட்டன. நான் தங்கியிருந்த அந்த வீட்டுக்காரர்தான் அதை என்னிடமிருந்து திருடி இருப்பார் என நான் நம்புகிறேன்.” அப்துல் பஹா ஹாஜி அவர்களை அழைத்து கூறினார்: “ஹாஜி, நீங்கள் அவரிடம் அவரது தங்க காசுகைளக் கொடுத்துவிடுங்கள்.” ஹாஜி உடனடியாக வீட்டிற்குச் சென்று, தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் விற்று, அவற்றைத் தங்கக் காசுகளாக மாற்றி, அதை நண்பகலில் அப்துல் பஹாவிடம் கொடுத்து, “இதை அவரிடம் கொடுத்து விடுங்கள்,” என்றார். அப்துல் பஹா அதை அந்த மனிதரிடம் கொடுத்தார், அந்த மனிதரும் வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார். அத்துடன் ஹாஜி இப்ராஹிம் அவர்களும் தமது வீட்டிற்குச் சென்று விட்டதுடன், அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அப்துல் பஹாவின் இல்லத்தில் நடைபெற்ற எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளாமலிருந்தார்.
பல மாதங்கள் கடந்தன. போலீஸ் இலாக்காவிலிருந்து ஓர் அதிகாரி அப்துல் பஹாவின் இல்லத்திற்கு வந்து, பலருடைய வீடுகளில் புகுந்து திருடிய ஒரு திருடைனக் கைது செய்துள்ளதாகக் கூறினார். அந்தத் திருடன் திருட்டை மேற்கொண்ட வீடுகளில், இருபது தங்க காசுகள் வைக்கப்பட்டிருந்த ஒரு பாரசீகரின் வீடும் அடங்கும் என்று கூறினார்.
ஹாஜி வீட்டில் முன்பு தங்கியிருந்த அந்தப் பாரசீக விருந்தினர் இதைக் கேள்விப்பட்டதும், அதாவது, ஹாஜி வீட்டில் காணாமல் போய்விட்டதாகத் தாம் கதை கட்டிய அந்தத் தங்கக் காசுகள் தமது வீட்டிலிருந்து இப்போது வேறொருவரால் திருடப்பட்டு விட்டன என்பதைக் கேட்டதும், அவரும் இவ்வாறு கூறினார், “நான் அப்துல் பஹாவைச் சோதிப்பதற்காகவே முன்பு அவ்வாறு செய்தேன், மற்றும் அப்துல் பஹாவிற்கு அனைத்தும் தெரியாது என்று பஹாய்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே முன்பு அவ்வாறு சொன்னேன்,” என்றார். இதைக் கேட்டதும் அப்துல் பஹா “உண்மைதான். அப்துல் பஹாவிற்கு அனைத்தும் தெரியாதுதான். ஆனால் பஹாவுல்லா எப்படிப்பட்ட நம்பிக்கையாளர்களுக்கு கல்வி அளித்துள்ளார் என்பதை அவருக்குக் காண்பிக்க வேண்டும் என அப்துல் பஹா விரும்பினார்,” என்றார். அதன் பிறகு நண்பர்கள் ஹாஜி இப்ராஹிமிடம் சென்று கேட்டனர்: “ஹாஜி, நீங்கள் ஏன் கூட்டங்களுக்கு வருவதில்லை?” அப்போது அவர், “இனிமேல் அப்துல் பஹாவின் முன் வருவதற்கு எனக்கு அவமானமாக இருந்தது,” என்றார். “ஆனால் நீங்கள் அந்தப் பணத்தை திருடவில்லை என்று ஏன் கூறவில்லை?” என்று அவர்கள் ஹஜியைக் கேட்டனர். அதற்கு அவர் “அப்துல் பஹா என்னிடம் அந்த பணத்தை அவரிடம் கொடுக்கும்படி சொன்னேபாது, அதை நான்தான் எடுத்தேன் என நான் மெய்யாகேவ நம்பிவிட்டேன்.” பார்த்தீர்களா, அவரிடம் சிறிதளவுகூட சந்தேகம் இருந்ததில்லை. தாம் எடுத்துவிட்டதாகவே அவர் நம்பினார். தன்னையே அவர் தேடிப்பார்க்கவுமில்லை. “இதுவரை நான் மன்னிப்புக்காகவே பிரார்த்தனை செய்துவந்தேன்” என்றும் ஹாஜி கூறினார்.
இப்படிப்பட்ட மனிதன் என்றுமே சோதிக்கப்பட முடியாதவர், அவர் தன் சோதனைகளில் என்றுமே தோல்வி காணவும் மாட்டார், நாம் அப்படிப்பட்ட ஒரு மெய்யுறுதி நிலையை அடைவதானது, தனிப்பட்ட முறையில் கட்டளைகளை நடைமுறையில் பின்பற்றியும், ஆன்மீகக் கோட்பாடுகளை வாழ்வில் நிறைவேற்றுவதன் வாயிலாகவே ஆகும்.