“உண்மையில் ஒரு தந்தையானவர் ஒரு நல்ல பரிசாவார்”
இறைசமயத் திருக்கரம் டாக்டர் வர்ஃகா அவர்கள் தம்மிடம் கூறிய ஒரு கதையை திரு. கம்ரான் சஹிஹி இங்கே விவரிக்கின்றார்:
“எனது தந்தையார் அப்துல்-பஹாவுடன் அமெரிக்கா சென்றிருந்தார். அவர்கள் நியூயார்க் நகரில் இருந்தபோது ஒரு நாள் அப்துல்-பஹா மிகவும் களைப்படைந்து மேல் மாடியிலுள்ள தமது அறையில் ஓய்வெடுக்கச் சென்றார். அப்போது யாரோ ஒருவர் கதவைத் தட்டினார்.
“கதவு திறக்கப்பட்டபோது, ஒரு வயதான மனிதர் வீட்டினுள் ஒரு கைத்தடியுடன் நடந்து வந்தார். அல்லா-வு-அப்ஹா எனும் வாழ்த்து கூறிய பிறகு, தாம் அப்துல்-பஹாவைச் சந்திக்க விரும்புவதாக அந்த வயோதிகர் தெரிவித்தார். அவரது அந்த வருகை அப்போது பொருத்தமானதல்ல என அவருக்கு எடுத்துரைக்கப்பட்டபோது, அந்த மனிதரும் பின்வருமாறு கூறினார்: “தயவு செய்து அப்துல்-பஹாவினுடைய அறைக்குள் சென்று, ஒருவர் அவரைக் காண விரும்புகிறார் என்று சொல்லுங்கள்” ( தமது தந்தையார் தெரிவித்த அந்த வயோதிகரின் பெயர் டாக்டர் வர்க்காவுக்கு நினைவில்லை). அவரது அந்த அந்த வருகை அப்போது பொருத்தமானதல்ல என அவருக்கு மீண்டும் எடுத்துரைக்கப்பட்டபோது அந்த வயோதிகர் மீண்டும் தமது வேண்டுகோளை அப்துல் பஹாவிடம் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.
“எனவே, அவர்கள் அப்துல் பஹாவிடம் சென்று, ஒரு வயோதிகர் அவரைக் கண்டிப்பாகக் காண விரும்புவதாகத் தெரிவித்தனர். அப்துல்-பஹாவும் அனுமதி வழங்கினார். அப்துல் பஹாவின் அறைக்குள் அந்த வயோதிகர் வந்தவுடன் “உங்களுக்கு என்ன வேண்டும்?” என அப்துல் பஹா கேட்டார். “நான்கு மணி நேரம் நான் உங்களுடைய தந்தையாக இருக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்க நான் வந்துள்ளேன்,” என்று அந்த வயோதிகர் கூறினார்.
“அங்கிருந்த அனைவரும் இந்தப் பதிலைக் கேட்டு வியப்படைந்தனர். அதற்கு அப்துல் பஹா,
“எனது தந்தையாக நீங்கள் ஆக விரும்புகின்றீர்களா? நல்லது. ஆனால், எதற்காக அப்படி ஆக விரும்புகின்றீர்கள்?” என்று பதில் கேள்வி கேட்டார். அந்த மனிதர், “நீங்கள் உங்களுடைய அறைக்குச் சென்று, கதவைத் தாழிட்டு, யாருடனும் பேசாமல், நான்கு மணி நேம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என நான் உங்களுடைய தந்தை எனும் முறையில் சொல்கின்றேன்,” என்றார். அப்துல் பஹா அதற்கு, “ஒரு மகன் என்ற முறையில் நான அதற்குக் கீழ்ப்பணிவேன்,” என்று கூறி தமது அறைக்குச் சென்று ஓய்வெடுத்தார்.”
டாக்டர் வர்க்கா தொடர்ந்து கூறியதாவது: “அந்த வயோதிகர் ஒரு நாற்காலியில் ஆடாமல் அசையாமல், எந்தவொரு வார்த்தையும் பேசாமல் தமது கைகளைத் கைத்தயில் ஊன்றி நான்கு மணி நேரம் உட்கார்ந்திருந்தார். நான்கு மணி நேரம் ஓய்வெடுத்து அப்துல் பஹா புதிய தெம்புடன் வெளியே வந்து, “உண்மையில் ஒரு தந்தையானவர் ஒரு நல்ல பரிசாவார்” என்று கூறினார்.’”