அப்துல் பஹா: நோயுற்றோருக்கு உதவுதல்


அப்துல் பஹாவின் இரக்கம்

“‘நோயுற்றோர்க்கு உதவிக்கரம் நீட்ட அப்துல் பஹாவின் இரக்கமிக்க இதயம் எப்போழுதுமே தயார் நிலையில் இருந்தது. ஒருவருடைய துன்பத்தையோ, துயரத்தையோ தம்மால் தணிக்க இயலுகையில் அவர் உடனே அதனை முன்னின்று நிறைவேற்றி வைப்பார். அக்கா நகரில் வயது முதிர்ந்த ஒரு தம்பதியினர் நோயின் காரணமாக படுக்கையில் ஒரு மாதம் காலமாக அவதியுற்று வந்தனர். அந்நிலையில் அப்துல் பஹா அத்தம்பதியர் இருந்த இடத்திற்கு இருபது முறை விஜயங்கள் மேற்கொண்டார். நோயுற்றிருந்த ஏழை எளியோரை நலம் விசாரித்து உதவி செய்வதற்காக ஒப்வொரு நாளும் அப்துல்-பஹா ஓர் ஊழியரை அவர்களிடம் அனுப்பி வைத்தார். அக்கா நகரில் மருத்துவமனை இல்லாததன் காரணமாக அவர் ஏழை மக்களை நோய் நொடியிலிருந்து காப்பாற்றி கவனித்து வருவதற்கு ஒரு மருத்துவரை ஏற்பாடு செய்து அம்மருத்துவருக்கு அச்சேவைக்காக சம்பளமும் வழங்கினார். அந்த மருத்துவச் சேவையை யார் ஏற்பாடு செய்தது என்பதை யாரிடமும் கூற வேண்டாம் என்றும் அப்துல்-பஹா அந்த மருத்துவரிடம் சொல்லியிருந்தார். ஓர் ஏழைப் பெண்மணிக்கு அம்மை நோய் கண்டு அவரை மற்றவர்கள் ஒதுக்கி வைத்தபோது, அது குறித்து தெரிய வந்த அப்துல்-பஹா, அப்பெண்மணியைக் கவனித்துக் கொள்வதற்கு இன்னொரு பெண்மணியை உடனே ஏற்பாடு செய்து, அம்மை நோய் கண்ட அப்பெண்மணியின் வசதிக்காக அப்துல்-பஹா தமது படுக்கையை வழங்கி, ஒரு மருத்துவரையும் ஏற்பாடு செய்து, உணவையும் அனுப்பி வைத்தார். அப்பெண்மணி முறையாகக் கவனிக்கப்பட்டு வருவதை உறுதி செய்வதற்காக அப்துல்-பஹா அப்பெண்மணியை நேரிடையாகச் சென்று கண்டார். அம்மை நோய் கண்ட அப்பெண்மணி இறந்தபோது, அவரது எளிமையான இறுதிச் சடங்கை அப்துல்-பஹாவே ஏற்பாடு செய்து, அதற்கான செலவுகளுக்கும் பணம் வழங்கினார்.

(அப்துல் பஹாவின் வாழ்வு குறித்த சம்பவங்கள், ப. 43-4)

*******

அக்கா நகருக்கு அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுச் சென்று அங்கு தங்கியிருந்த அமெரிக்காவின் ஆரம்பகால நம்பிக்கையாளர்களுள் ஒருவரான லுவா கெட்ஸிங்கர், அந்நகரில் தமது அனுபவத்தைக் கூறியுள்ளார். அந்த சிறைச்சாலை நகரில் அப்துல்-பஹாவைக் காண்பதற்காக அவர் அங்கு புறப்பட்டுச் சென்றார். ஒரு நாள் அப்துல்-பஹா தமது அன்றாடப் பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்த காரணத்தினால், நோயுற்றிருந்த தமது நண்பர் ஒருவரைச் சந்தித்து நலம் விசாரிக்க இயலாத நிலையில் அப்துல்-பஹா இருந்தார். அதனால், அக்காரியத்தை மேற்கொள்ளுமாறு அந்நபருக்கு உணவு கொண்டு சென்று அவரைக் கவனித்துக் கொள்ளுமாறு லுவா கெட்ஸிங்கருக்கு அப்துல் பஹா கட்டளையிட்டார்.

லுவா கெட்சிங்கர்

நோயுற்றிருந்த அம்மனிதர் இருந்த இடத்தின் முகவரியை வாங்கிக் கொண்டு உடனே லுவா கெட்ஸிங்கர் புறப்பட்டுச் சென்றார். அப்துல் பஹா தமது சொந்த பணியை மேற்கொள்ளுமாறு தமக்குக் கட்டளையிட்டிருப்பது குறித்து லுவா கெட்ஸிங்கர் பெருமை கொண்டார். ஆனால், அங்கு சென்ற சிறிது நேரத்திற்குள் அவர் திரும்பி வந்து அப்துல்- பஹாவிடம், “மாஸ்டர், நீங்கள் என்னை ஒரு மோசமான இடத்திற்கு அனுப்பி வைத்து விட்டீர்கள். அங்குள்ள கசடும், அழுக்கும் நிறைந்த இடத்தைக் கண்டும், அம்மனிதரின் கடும் மோசமான நிலையைக் கண்டும் எனக்கு மயக்கமே வந்து விட்டது. அந்த நோய் என்னைத் தொற்றிக் கொள்வதற்குள் நான் ஓடிவந்து விட்டேன்,” என்று பதற்றத்துடன் கூறினார். அதற்குப் பதிலாக அப்துல்-பஹா மிகவும் சோகத்துடனும், ஆனால் அதே நேரத்தில் மிகவும் கண்டிப்புடனும் லுவா கெட்ஸிங்கரை நோக்கினார். லுவா கெட்ஸிங்கர் சேவையாற்ற விரும்பினால், தனது சக மனிதனுக்குச் சேவையாற்ற வேண்டும் என அப்துல்-பஹா கூறினார். ஏனெனில், ஒப்வொரு மனிதனிடமும் இறைவனின் சாயலை லுவா காண வேண்டும் என அவர் கூறினார். மீண்டும் அம்மனிதரின் வீட்டிற்குச் செல்லுமாறு அப்துல் பஹா பணித்தார். அந்த வீடு அழுக்காக இருந்தால் அதனைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்றும், அம்மனிதர் அழுக்காக இருந்தால், அவர் குளிப்பதற்கு உதவிட வேண்டும் என்றும், அம்மனிதர் பசித்திருந்தால் அவருக்கு உணவு வழங்க வேண்டும் என்றும் அப்துல்-பஹா கூறினார். இவை அனைத்தும் செய்து முடிக்கப்படாமல் லுவா கெட்ஸிங்கர் திரும்பி வந்து விடக்கூடாது என்றும் அப்துல்-பஹா சொன்னார். அச்செயல்களை அப்துல்-பஹா பல முறை அம்மனிதருக்குச் செய்துள்ளார். அவற்றை லுவா ஒரு முறையாவது செய்ய வேண்டும் என அப்துல்-பஹா கூறினார். தனது சக மனிதனுக்கு எப்படிச் சேவை செய்ய வேண்டும் என்பதை இப்வாறுதான் லுவா கெட்ஸிங்கருக்கு அப்துல்-பஹா கற்றுக் கொடுத்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: