நிறங்கள் யாவும் ஒன்றே, அது கடவுள் சேவகம் என்னும் நிறமே

1912ல் அமெரிக்க சமூகம் இன பாகுபாட்டை வெகு தீவிரமாக கடைப்பிடித்து வந்தது. கருப்பர்கள் அல்லது “நிறஞ்சார்ந்தவர்கள்” என அப்போது வழங்கப்பட்ட அவர்கள் சட்டப்படி இரண்டாம் நிலை பிரஜைகளாவர். 1896’இல் மாறுபட்ட இனத்தவர்கள் ஒன்றுகூடும் இடங்களில் இன ஒதுக்கல் கொள்கை அமல்படுத்தப்படுவதை உயர்நீதி மன்றம் அங்கீகரித்தது. உண்மையில், 48 மாநிலங்களுள் 30 மாநிலங்கள் கலப்பின திருமணங்களைத் தடைசெய்யும் சட்டங்களை அமல்படுத்தின.
இத்தகைய பின்னணியில், 1912 எப்ரல் மாதத்தில் பஹாய் கோட்பாடான “மனிதகுல ஒருமைத்தன்மை” குறித்த போதனைகளை மனதில் பதியும் விதத்தில் எடுத்துக்காட்டிடுவதற்குத் தயாராக அப்துல் பஹா வந்தார்.
லூயிஸ் கிரகரி (1874-1951) அடிமைகள் விடுதலைக்குப் பிறகு பிறந்த ஓரு கருப்பு-அமெரிக்க வழக்குறைஞ்சராவார். அவர் ஹோவார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பட்டம் பெற்று வாஷிங்டன் டி.சி.யில் 1902ல் வழங்குறைஞர் கழகத்துள் அனுமதிக்கப்பட்டார். அவர் 1909ல் பஹாய் சமயத்தை ஏற்றுக்கொண்டு புனித நிலத்திற்கு பஹாய் புனிதயாத்திரை மேற்கொண்டிட அப்துல் பஹாவால் அழைப்புவிடுக்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கர் எனும் தனிச்சிறப்பு பெற்றார்.
விதிவிலக்கின்றி, 1912’இல் வாஷிங்டன் டி.சி. பஹாய் சமூகம் அக்கால பொதுசமூகத்தின் இனபாகுபாட்டைப் பொதுவான நிலையில் பின்பற்றியே வந்தது.
ஏப்ரல் 23, 1912’இல், லூயிஸ் கிரகரி செய்திருந்த ஏற்பாடுகள் மூலம், சரித்திர ரீதியாக கருப்பர் கல்லூரியான, ஹோவார்ட் பல்கலைக்கழகத்தில் அப்துல் பஹா உரையாற்றினார். அப்துல் பஹா பின்வருமாறு தமது உரையை ஆரம்பித்தார்:
நான் இன்று வெகு ஆனந்தமாக இருக்கின்றேன், ஏனெனில் இங்கு கடவுளின சேவகர்களின் ஒன்றுகூடுதலைக் காண்கிறேன். இங்கு கருப்பரும் வெள்ளையரும் ஒன்றாக அமர்ந்திருக்கக் காண்கிறேன். கடவுள் முன்னிலையில் கருப்பரோ வெள்ளையரோ கிடையாது. நிறங்கள் யாவும் ஒன்றே; அது கடவுள் சேவகம் எனும் நிறமே… உள்ளமே முக்கியமானது. இதயம் வெண்மையாக இருக்குமானால், வெள்ளை, கருப்பு அல்லது வேறு எந்த நிறமும் எவ்வித வேறுபாட்டையும் உருவாக்கமுடியாது. கடவுள் நிறங்களைக் காண்பதில்லை; அவர் உள்ளங்களை மட்டுமே காண்கிறார். இதயம் வெண்மையாக இருப்போர் மேன்மையானவராவார். அதிக நற்பண்புடையோர் அதிகம் திருப்தியளிப்பவராவார்.
உரைக்குப் பின், பாரசீகத் தூதரகத்தின் தற்காலிக பொறுப்பாளர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் அப்துல் பஹா முக்கிய விருந்தினராக பங்குபெற்றார். விருந்து ஆரம்பிப்பதற்கு முன்பே அப்துல் பஹா அந்நிகழ்ச்சிக்கு லூயிஸ் கிரகரியை கண்டிப்பாக வரச்சொல்லியிருந்தார். அங்கு வந்திருந்த விருந்தினர்கள் சிலர் தலைநகரின் சமூக வாழ்க்கைமுறையில் மிக முக்கிய பிரமுகர்களும் அவர்கள் அனைவருமே வெள்ளையர்களாகவும் இருந்தனர். விருந்து ஆரம்பிப்பதற்கு முன்பாக, அப்துல் பஹா எழுந்து நின்று, அறையைச் சுற்றிமுற்றி பார்த்துவிட்டு, “திரு கிரகரி எங்கே,” என வினவினார். “அவரைக் கூப்பிடுங்கள்!” என்றார். விருந்து ஏற்பாட்டாளர் லூயிஸ் கிரகரியைக் கண்டுபிடிப்பதற்காக அவசரமாகக் கிளம்பினார். அப்துல் பஹாவின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் வலப்புறம் ஏற்கனவே ஓர் இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, திரு கிரகரி முன்னால் கொண்டுவரப்பட்டவுடன் அவ்விருக்கையில் அவர் அமர்த்தப்பட்டு, முன்தீர்மானிக்கப்படாத ஆனால் ஒரு முக்கிய பிரமுகராக்கப்பட்டார்.
இக்காரியத்தை அப்துல் பஹா வெகு சுலபமாக செய்து முடித்தார். திரு கிரகரி அங்கு இருந்தது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது என கூறி, பிறகு வெகு இயல்பான குரலில் வழக்கத்திற்கு மாறாக ஒன்றுமே நடக்காதது போன்று, மனிதகுல ஒற்றுமை குறித்து ஓர் உரையாற்றினார்.
லூயிஸ் கிரகரியும் ஒரு வெள்ளை ஆங்கிலேய பஹாய் பெண்மணியான, லூயிஸா (லூயிஸ்) A.M. மேத்யூவும் அப்துல் பஹாவின் ஊக்குவிப்பின் மூலமாக செப்டம்பர் 27, 1912’இல் நியூ யார்க் நகரில் திருமணம் புரிந்துகொண்டனர்.
லூயிஸ் கிரகரி மீதமிருந்த தமது வாழ்நாள்களை இன ஒற்றுமை மேம்பாட்டிற்காகவும், பஹாய் போதனைகளைப் பரப்புவதற்காவும் அர்ப்பணித்தார். அவரும் பற்றுறுதிமிக்க அவருடைய மனைவி லூயிஸாவும் எலியட், மேய்னில் உள்ள கிரீன் ஏக்கர் பஹாய் பள்ளிக்கு அருகே ஒன்றாக நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
https://prsamy.wordpress.com/2015/03/17/ஐக்கிய-அமெரிக்காவின்-மு/