பாலின சமத்துவமும் பெண்களுக்கான ஆற்றலளிப்பும்

நாடு தழுவிய பொது உரைகளிலும் தனிப்பட்ட உரையாடல்களிலும், பஹாவுல்லாவின் போதனைகளில் ஆணும் பெண்ணும் சமமாக கருதப்படுகின்றனர் என்பதை அப்துல்-பஹா வெகு துல்லியமாக எடுத்துரைத்துள்ளார், கடவுளின் முன்னிலையில் எவரது உள்ளம் அதி தூய்மையானதாகவும், எவரது வாழ்வும் நடத்தையும் அதி உயர்வாகவும் தெய்வீக அளவுகோலுக்கு வெகு அணுக்கமாகவும் உள்ளதோ அவரே கடவுளின் பார்வையில் பெருமதிப்புடையவர், அதிசிறப்புடையவராவார். அவர் ஆணாயினும் பெண்ணாயினும், இதுவே ஒரே உண்மையான மற்றும் மெய்யான தனிச்சிறப்பாகும்.
“பஹாவுல்லாவின் போதனைகளுள் இது விந்தையான ஒரு போதனை, ஏனெனில் மற்ற சமயங்கள் அனைத்தும் ஆணை பெண்ணுக்கு மேற்பட்டவனாகவே உயர்த்தியுள்ளன,” என அப்துல்-பஹா கூறியுள்ளார். இருந்தும், அப்துல்-பஹா பாலினங்களிடையே சமத்துவம் என்பதை ஓர் ஆன்மீக மெய்ம்மையாக கருதியபோதும், சமுதாயத்தில் பெண்கள் முழுமையாக பங்குபெறுவதைத் தடுக்கும் கல்வி மற்றும் பிற வாய்ப்புக்கள் சார்ந்த சமமின்மைகள் சமூகநிலையில் நிலவுவதை அவர் அறிந்தே இருந்தார். இந்த நிலையைத் திருத்தும்படி அவர் அமெரிக்காவை கேட்டுக்கொண்டார்.
கல்வி
1912’இல், கல்லூரி மாணவர்களுள் மூன்றில் ஒரு பங்கினரே பெண்களாக இருந்தனர். சமுதாயத்திற்கு அவர்கள் ஆண்களைப்போல் பங்காற்றுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படவில்லை. அப்துல்-பஹா “மகள்களாயினும் மகன்களாயினும் அவர்கள் ஒரே கற்றல் பாடமுறையைப் பின்பற்ற வேண்டும்,” என அறிவுறுத்தியது மட்டுமல்லாமல், அவர் ஒரு படி மேலே சென்று:
“…ஆண்களின் கல்வியைவிட பெண்களின் கல்வியே முக்கியமானதாகும், ஏனெனில் அவர்களே இனத்தின் தாய்களாவர், மற்றும் தாய்மார்களே குழந்தைகளைப் பேணிவளர்ப்பவர்களாவர். தாய்மார்களே குழந்தைகளின் முதல் ஆசிரியர்களாவர். ஆகவே, அவர்கள் கண்டிப்பாக மகன்கள் மகள்கள் இருவருக்கும் கல்வி புகட்டுவதற்கு ஏதுவாக ஆற்றலோடு பயிற்றுவிக்கப்பட வேண்டும்.”
அமைதி
அப்துல் பஹா அடிக்கடி அனைத்துலக அமைதி இயக்கத்தோடு பெண்களின் மேம்பாட்டை தொடர்புபடுத்தியும், அந்நாளில் அமைதி இயக்கங்களோடு மிக அணுக்கமாகவிருந்த, ஜேன் ஆடம்ஸ் மற்றும் சாரா பாஃர்மரையும் உள்ளடக்கிய சில பெண்களையும் சந்தித்தார்.

20’ஆம் நூற்றாண்டின் திருப்பத்தில், பெண்களை ஊக்குவித்தும் அவர்களை தலைமைத்துவ நிலைகளுக்கு உயர்த்துவதில் அப்துல் பஹா தாமே ஓர் எடுத்துக்காட்டாக இருந்தார். உதாரணத்திற்கு 59 வயதுடைய அமெரிக்காவைச் சார்ந்த ஒரு பெண்கள்நல மருத்துவரான டாக். சூஸன் மூடி என்பவரைப் பாரசீகப் பெண்களுக்கு மருத்துவ வசதிகள் வழங்கிட இரான் நாட்டிற்குக் குடிபெயர்ந்திட அவர் தேர்வு செய்தார். மேலும், இரான் நாட்டிற்கு குடிபெயர்ந்த முதல் அமெரிக்கப் பெண்மனி எனும் முறையில், பெண்களுக்கான தார்பியாட் பள்ளியை நிறுவதற்கு உதவியாக டாக் சூஸன் மூடி அயராது உழைத்தவராவார். 1902’இல் அப்துல் பஹா இரானின் இஸ்லாமிய மதகுருக்களால் பஹாய்கள் துன்புறுத்தப்படுவதை தடுத்திடுமாறு கேட்டுக்கொள்ளும் ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க இரான் நாட்டின் ஷா மன்னருக்கான தமது தூதுவராக ஒரு அமெரிக்கப் பெண்மனியையே நியமித்தார். மற்றும் வில்மட் வழிபாட்டு இல்லத்தின் அடிக்கல்லாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த கல் சிக்காகோ நகரில் வாழ்ந்த ஒரு பஹாய் பெண்மனியான நெட்டி டோபின் என்பவரால் வழங்கப்பட்டதாகும்.

ஆண்களும் பெண்களும் கண்டிப்பாக ஒத்துழைக்கவேண்டும்
அப்துல் பஹா உதாரணம் மற்றும் வாதங்களின் வாயிலாக, வார்த்தைகள் மற்றும் செயல்களின் மூலமாக, ஆண் பெண் இரு பாலரின் மேம்பாட்டிற்குப் பெண்களின் மேம்பாடும், ஆண்களுடனான அவர்களின் முழு சமத்துவமும், இன்றியமையதவை எனும் கருத்தை ஊக்குவித்தார்: “பெண்களும் ஆண்களும் ஒருங்கிணைவோடு சமமாக மேம்பாடு காணும் போது மனித இனத்தின் மகிழ்ச்சி அடையப்பெறும், ஏனெனில், அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவரை நிறைவுசெய்பவர்; உறுதுணையாளரும் ஆவர்.
இன்று, உலகம் முழுவதுமுள்ள பஹாய் பெண்களும் ஆண்களும், பஹாய் சமூகத்தினுள் மட்டுமல்ல, மாறாக சமுதாயம் முழுவதுக்குமாக பாலியல் சமத்துவத்தை மேம்படுத்திட ஒன்றாக உழைக்கின்றனர்.