அப்துல் பஹாவின் பண்பியல்புகளையும் செயல்திறன்களையும் ஆய்வு செய்திட உதவக்கூடிய ஒரு கதை இங்கு வழங்கப்படுகிறது.

திருமதி பார்ஸன் என்பார் ஐக்கிய அமெரிக்காவின் வாஷிங்டன் நகரைச் சார்ந்தவராவார். இவர் ஆகஸ்ட் 1912ல் டப்லின், நியூ ஹேம்ப்ஷாயரில் இருந்த தமது எஸ்டேட்டிற்கு வரும்படி அப்துல் பஹாவிற்கு ஓர் அழைப்பு விடுத்தார். கோடைக்காலத்தில், தலைநகர் வாழ்வில் பிரமுகர்களாக இருந்த பலர் திருமதி பார்ஸனின் ஓய்விடத்திற்கு வருகையளிப்பர். திருமதி பார்ஸன் தமது இல்லத்தில் ஒரு மதிய உணவு நிகழ்வை ஏற்பாடு செய்து வாழ்க்கைத் துறைகளில் தனிச்சிறப்புடைய பலரை அப்துல் பஹாவைச் சந்திப்பதற்காக அழைத்திருந்தார்.
கலாச்சாரம், அறிவியல், கலை, செல்வம், அரசியல், சாதனை — ஆகிய அனைத்துமே அங்கு பிரதிநிதிக்கப்பட்டிருந்தன. சமுதாய தலைவர்களான இவர்களிடம் பஹாவுல்லாவைப் பற்றியும் மனுக்குலத்திற்கு அவர் பிரகடனப்படுத்திய சமயத்தைப் பற்றியும் அப்துல் பஹா அவர்களுடன் உரையாட வேண்டுமென திருமதி பார்ஸன் ஆவலுற்றிருந்தார். விருந்தினர்களும் தாங்கள் ஏதோ ஒரு சொற்பொழிவிற்காகத்தான் வந்திருப்பதாக நினைத்திருந்தனர் போலும். ஆனால் அப்துல் பஹாவோ அவர்களுக்குச் சிரிப்பூட்டும் ஒரு கதையை மட்டும் சொன்னார். அவர்களும் அப்துல் பஹாவின் உதாரனத்தைப் பின்பற்றி பல வேடிக்கைக் கதைகளைக் கூறியபோது அப்துல் பஹாவும் அவர்களுடன் சேர்ந்து வயிறு குலுங்கச் சிரித்தார். அவ்வுணவு நிகழ்வின் போது அப்துல் பஹாவும் அவரது விருந்தினர்களும் மிகுந்த மகிழ்வுடன் இருந்தனர். அவர், ‘சிரிப்பது நல்லது, சிரிப்பு ஆன்மீக ஓய்வாகும்’, என அவர்களிடம் கூறினார்.
அவ்வேளை அவர் தமது சிறைவாசத்தைப் பற்றி குறிப்பிட்டார். வாழ்க்கைச் சிரமமிக்கதாகவும், துயரம் எந்நேரத்திலும் நேரக்கூடிய ஒன்றாக இருந்தது. ஆனால், அந்திப்பொழுதில் அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, அன்றைய பொழுதின் வேடிக்கையான நிகழ்வுகளை நினைவுகூர்ந்து அவற்றை நினைத்து சிரிப்பார்கள். அத்தகைய வேடிக்கை நிகழ்வுகள் வெகு குறைவானவையாக இருந்தபோதும், அவர்கள் ஆழ ஆராய்ந்து ஏதாவது ஒரு நிகழ்வை நினைவுகூர்ந்து சிரிப்பார்கள். மகிழ்ச்சி என்பது லௌகீக சுகத்தினாலும் செழுமையினாலும் ஏற்படுவதல்ல, என அவர் அவர்களிடம் கூறினார். அவ்வாறு இருந்திருந்தால், அவர்களின் சிறைவாச வாழ்க்கையில் ஒரு நொடிப்பொழுதுகூட அவர்கள் சந்தோஷமாக இருந்திருக்க முடியாது. ஆனால், அவர்களின் ஆன்மாக்கள் எந்நேரமும் களிப்புணர்வுடனேயே இருந்தன.
பொது வாழ்க்கையில் தனிச்சிறப்புப் பெற்றிருந்த அந்த அமெரிக்கர்கள், தங்கள் வாழ்க்கை அனுபவங்களில் பெரும்பாலும் இல்லாதிருந்த உண்மையின் தாக்கத்தை அன்று அடைந்திருந்தும், கிழக்கிலிருந்து வந்திருந்த அந்த வருகையாளரை ஒரு புதிய கோணத்தில், ஆழ்ந்த வியப்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் கண்கள் கொண்டு பார்க்கத் துவங்கினர். அப்துல் பஹாவின் பரந்த உள்ளம் அவர்கள் அனைவரையுமே அரவணைத்திருந்தது.
அதன் பிறகு அப்துல்-பஹா திருமதி பார்ஸனை நோக்கி ‘மகிழ்ச்சிதானே’ எனக் கேட்டார்
(‘Abdu’l-Bahá: The Centre of the Covenant of Bahá’u’lláh, H. M. Balyuzi, 31-32)