
8 அக்டோபர் 2021

பிராட்டிஸ்லாவா, ஸ்லோவாக்கியா, 1 ஏப்ரல் 2021, (BWNS) – மனித இயல்பு மற்றும் திறன் பற்றிய ஒரு சிறிய ஆனால் வளர்ந்து வரும் உரையாடல் ஸ்லோவாக்கியாவில் வேரூன்றி வருகிறது, இடம்பெயர்வு மற்றும் சிறுபான்மையினர் பற்றிய பொதுவான கருத்துக்களுக்கு இது சவாலிடுகிறது, அத்துடன் அதிக பங்கேற்பு மற்றும் பரஸ்பர ஆதரவை வளர்க்கிறது. கடந்த பல ஆண்டுகளாக, ஸ்லோவாக்கியாவின் பஹாய் சமூகம் இந்தப் பிரச்சினைகள் குறித்த விவாதங்களுக்குப் பங்களிப்பு செய்து வருகிறது, மேலும் இடம்பெயர்வு குறித்த சிந்தனை முன்னேறக்கூடிய தளங்களை உருவாக்குகிறது.
“பல சமூகங்களில் ஒரு பொதுவான அனுமானம் என்னவென்றால், ஒரு நாடு புலம்பெயர்ந்தோரை ஏற்பது ஒரு சுமை” என ஸ்லோவாக்கியாவின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் வீனஸ் ஜஹான்பூர் கூறுகிறார்.
“ஒரு புதிய நாட்டிற்கு வருபவர்கள் புதிய இடத்தில் அமர்வதற்கும் பல்வேறு தேவைகளைத் தீர்ப்பதற்கும் அவர்களுக்கு ஆதரவு தேவைப்படலாம் என்பது புரிந்துகொள்ளத்தக்கது, குறிப்பாக, அவர்கள் மோதலையும் ஒடுக்குமுறையையும் விட்டு வெளியேறுபவர்களாக இருந்தால்” என திருமதி ஜஹான்பூர் கூறுகிறார். “ஆனால் அவர்களின் வாழ்க்கையில் மேலும் பல விஷயங்கள் உள்ளன.
” மனிதர்கள் தன்னலமற்ற சேவை மற்றும் தாராள மனப்பான்மைக்கு பெரும் திறனைக் காட்ட முடியும் எனும் மனித இயல்பைப் பற்றிய வித்தியாசமான பார்வையுடன் மக்கள் தங்களுக்கு இடையில் பிளவுகளை உருவாக்கும் கருத்துகளைத் தாண்டி ஒருவரை ஒருவர் சக மனிதராகக் காண முடியும்.”
உரையாடல்கள் இதை ஒரு தொடக்கப் புள்ளியாகக் கொண்டு பிரச்சினையின் பல்வேறு அம்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. மேலும், அரசாங்க, மனித உரிமை அமைப்புகள் மற்றும் மத சமூகங்கள் போன்ற சமூக நடவடிக்கையாளர்களிடையே ஒத்துழைப்பையும் உடனுழைப்பையும் பலப்படுத்தியுள்ளன என்று அலுவலகம் கண்டறிந்துள்ளது.

ஸ்லோவாக்கியாவின் மனித உரிமைகள் கழகம் சமீபத்தில் நடத்திய குடிமை ஈடுபாடு குறித்த மாநாட்டில், திருமதி ஜஹான்பூர் நல்லாட்சிக்கான இந்த யோசனைகளின் தாக்கங்களை விவரித்தார். “மக்கள் ஒரு நாட்டிற்கு வரும்போது, அவர்கள் முழு நம்பிக்கையுடனும், சிறந்த வாழ்க்கையை எதிர்பார்த்தும் வருகிறார்கள். அவர்கள் புதிய முன்னோக்குகளையும், தங்கள் புதிய இல்லத்தின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்க வேண்டும் என்ற வலுவான விருப்பத்தையும் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் சீக்கிரத்தில் சம அந்தஸ்து உள்ளவர்களாக ஈடுபடுத்தப்பட வேண்டும். புதிதாக வந்தவர்கள் மற்றும் அவர்களது சக தோழர்களிடையே கலந்துரையாடல் மற்றும் பரஸ்பர கற்றலுக்கான தளங்கள் உருவாக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான சாளரம் ஆரம்பத்திலேயே உள்ளது. ”
தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் சக்தியளிப்பு குறித்து பஹாய் உலக செய்தி சேவையுடன் பகிர்ந்து கொண்ட தனது கருத்துக்களில், மாநாட்டின் வழிநடத்துனரும், இன மற்றும் கலாச்சார ஆராய்ச்சி மையத்தின் பிரதிநிதியுமான அலெனா ஹோல்கா சுட்ஸிக் பஹாய் சமூகத்தின் அனுபவத்தைச் சுட்டிக்காட்டி, இவ்வாறு கூறுகிறார்: “உள்ளூர் சமூகங்களில் அவர்களின் வலுவான ஈடுபாட்டின் மூலம், உள்ளூர் நடவடிக்கைகள், தொடர்புகள் மற்றும் உறவுகளில் மிகவும் மாறுபட்ட நபர்களை ஈடுபடுத்துவதில் பஹாய்கள் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளனர்… பஹாய்களுள் நாம் கண்ணுறும் சமூகக் கடமை உணர்வு புலம்பெயர்ந்தோரைச் சேர்த்துக்கொள்வதற்கான சிறந்த இயக்கியாகும்.

“மனிதர்களாக நம்மை ஒன்றிணைப்பதில் அவர்கள் கவனம் செலுத்துவதே புலம்பெயர்ந்தோரைச் சேர்ப்பதற்கான ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்குகிறது என நான் நினைக்கின்றேன்… ஒவ்வொரு தனிமனிதனும் முக்கியத்துவம் வாய்ந்தவனாகவும், ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவதற்கான பெரும் ஆற்றலைக் கொண்டவனாகவும் இருக்கின்றான் என்ற எண்ணம் இடம்பெயர்வு மற்றும் புலம்பெயர்ந்தோரைச் சேர்ப்பது பற்றிய விவாதத்தில் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும். ”
ஸ்லோவாக்கியாவின் பஹாய் சமூகத்தின் உறுப்பினர் மோனிகா குச்டோவா மேலும் கூறுகையில், “மக்களை ‘பூர்வீகம்’ மற்றும் ‘வெளிநாட்டவர்,’ ‘பெரும்பான்மை’ மற்றும் ‘சிறுபான்மையினர்’ போன்ற பிரிவுகளாகப் பிரிக்கும் போக்கு உள்ளது. ஆனால் மக்கள் ஒன்று கூடி தப்பெண்ணத்திற்கான மூல காரணத்தையும் அவர்களின் சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கான வழிகளையும் ஆராய்ந்திடும்போது, இந்த பிளவுகள் விலகிவிடும், நாம் ஒரே மக்களாக மாறுகிறோம். ஒரு தோட்டத்தைப் போல, நமது பன்முகத்தன்மையின் அழகைக் காண வருகிறோம்.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1500/