
நியூயார்க் – 31 மார்ச் 2021— பஹாய் சர்வதேச சமூகம் (பி.ஐ.சி) பல ஆண்டுகளாக கட்டாரி அதிகாரிகள் கட்டாரில் இருந்து பஹாய்களைத் தடுப்புப்பட்டியலில் சேர்த்து அவர்களை நாடு கடத்தும் திட்டமிட்ட முயற்சிகளால் மிகவும் கவலை கொண்டுள்ளது.

கட்டாரில் பிறந்த ஒரு முக்கிய பஹாய் ஆன, ஓமிட் சியோஷான்சியன், கட்டாரில் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்ட சமீபத்தியவராவார். குறிப்பிடப்படாத குற்றவியல் மற்றும் தேசிய பாதுகாப்பு குற்றச்சாட்டுகள் இந்த வெளியேற்றங்களைத் தூண்டுவதாக நாட்டின் சில அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆதாரமில்லாமல் சுமத்தப்பட்ட இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் கட்டார் நீதித்துறை அமைப்பில் கடுமையான தண்டனைகளைத் தாங்கிவரக்கூடும்.
ஒருமுறை, தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டவுடன் பஹாய்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள், மீண்டும் உள்ளே வர அவர்கள் நிரந்தரமாக அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு சந்தர்ப்பத்தில், கட்டாரி பஹாயின் துணைவருக்கு வசிப்பிடம் மறுக்கப்பட்டதன் விளைவாக அத்தம்பதியினரின் முழு குடும்பமும் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கட்டாரி அல்லாத பஹாய்கள், அவர்களின் முதலாளிகளால் அல்லது ஆதரவாளர்கள் நாட்டில் தங்குவதற்கு ஆதரவளிக்கப்பட்ட போதிலும் அவர்களுக்கு வசிப்பிட அனுமதிகள் மறுக்கப்படுகின்றன, அல்லது புதுப்பிக்கப்படுவதில்லை,.
பல்வேறு தொழில்முறை மற்றும் தேசிய பின்னணியிலிருந்து வந்தவர்களான, நாடுகடத்தப்பட்ட அனைவரையும் இணைப்பது அவர்களின் பஹாய் நம்பிக்கையாகும். ஈரான் மற்றும் யேமனில் பஹாய்கள் எதிர்கொண்ட துன்புறுத்தல்களுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளது. தடுப்புப்பட்டியலையும் நாடுகடத்தலையும் எதிர்கொண்டவர்களில் பெரும்பாலோர் கட்டாரில் பிறந்து வளர்ந்தவர்கள், வேறு எந்த வசிப்பிடத்தையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை, சிலர், அந்த நிலத்தில் பல தலைமுறைகள் நீண்டு, கட்டார் மாநிலத்தின் சுதந்திரத்திற்கு முன்னர் இருந்தே அங்கு வசித்துவந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
“இந்த நாடுகடத்தல் முறை மத சுத்திகரிப்புக்கு ஒப்பானது-அது தொடருமானால், ஒரு முழு மத சமூகத்தையும் சில ஆண்டுகளில் அழிக்கக் கூடியதாகும்” என்று ஐக்கிய நாடுகள் சபையின் BIC’யின் முதன்மை பிரதிநிதி பானி டுகால் கூறினார்.
கட்டாரின் பஹாய் சமூகமும் பி.ஐ.சியும் இந்த வழக்குகளை ஏற்கனவே கட்டாரி அதிகாரிகள் மற்றும் கட்டாரின் தேசிய மனித உரிமைகள் குழுவிடம் எழுப்பியுள்ளன. இந்த வழக்குகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாதவை என்றும் அவை ஒவ்வொன்றும் ஒரு தேசிய பாதுகாப்பு அக்கறை கொண்டவை என்றும் கவலைகளை எழுப்பிய ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் இராஜதந்திரிகளிடம் அதிகாரிகள் ஆதாரமின்றி குற்றம் சாட்டியுள்ளனர்.
மார்ச் மாதத்தில், நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், இந்த விஷயத்தை மனித உரிமைகள் பேரவை முன் எழுப்பிட BIC கட்டாயப்படுத்தப்பட்டது. அப்பட்டமான பாகுபாட்டின் இந்த முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அதன் மனித உரிமைகள் உறுதிப்பாட்டை நிலைநிறுத்தவும் கட்டார் கேட்டுக் கொள்ளப்பட்டது.
பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிகள் இருப்பினும், அடுத்த ஆண்டு உலகக் கோப்பைக்கு முன்னதாக உலகப் பார்வை கட்டார் பக்கம் திரும்பியிருப்பினும், கட்டாரி அதிகாரிகள் இப்போது ஓமிட் சியோஷான்சியனை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக தடுப்புப்பட்டியலில் வைத்து நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளனர். கட்டார் நாட்டில் பல தலைமுறைகளாக வசித்து வந்த திரு. சியோஷான்சியனுக்கு வேறு வசிப்பிடம் எதுவும் கிடையாது. இந்த நிகழ்விலிருந்து, பஹாய் தலைமைத்துவத்தைக் குறிவைப்பது கட்டாரி அதிகாரிகளின் மூலோபாயம் என்பது இப்போது தெரிய வருகிறது.
“தெளிவற்ற தேசிய பாதுகாப்புக் குற்றங்களில் அப்பாவி நபர்களை சேர்ப்பது, ஆதாரமின்றி, கட்டார் தன்னைப் பிணைத்துள்ள மனித உரிமைக் கடப்பாடுகளுக்கு எதிராக உள்ளது, மற்றும் உலகம், அனைத்துலக சமூகம், கட்டாரின் சொந்த ‘நேஷனல் விஷன் 2030’ ஆகியவற்றின் பார்வையில் அதன் நிலைப்பாட்டைத் தரங்குறைக்கிறது,” என்கிறார் திருமதி டுகால் .
“அமைதியாக ஒன்றிணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்கும் பங்களிப்பு செய்த தலைமுறையினரான ஒரு சமூகத்தின் உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கு கட்டார் மாநிலம் தேர்ந்தெடுத்துள்ளதினால் பஹாய் சர்வதேச சமூகத்திற்குப் பெரிதும் கவலையளித்துள்ளது.” என்று திருமதி டுகால் மேலும் கூறினார். . “இதுபோன்ற நடவடிக்கைகள் அதன் சொந்த சமூக ஒற்றுமையையும், சர்வதேச சமூகத்தில் அதன் நற்பெயரையும், ஒரு தேசமாக அதன் வளர்ச்சியையும் எவ்வாறு குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்பதை கட்டார் நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும். அதிகாரிகள் இந்த வழியை விரைவிலேயே மாற்றியமைப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.”
மூலாதாரம்: https://www.bic.org/