குழந்தைகளுடனான ஒரு சந்திப்பு
ஒரு நாள் மாலை வேளை ஜூலியட் (தோம்ஸன்) மற்றும் அவரின் நண்பர்கள் சிலரும் அப்துல்-பஹாவை அவரது தோட்டத்தின் பாதைகளின் வழி பின்பற்றிச் சென்றபோது திடீரென சில குழந்தைகள் அருகிலிருந்த புதர்களிலிருந்து கத்தியபடி வெளியே வந்து சிரித்துக்கொண்டு குழுவினரின் மீது கற்களை எறிந்தனர். தூரத்திலிருந்து அப்துல்-பஹா அவர்களைப் பார்த்து, “உலக மக்கள் குருடர்களாகிவிட்டனர்,” என துக்கத்துடன் கூறினார். சிறார்கள் எப்படி தோன்றினார்களோ அதே போன்று மறைந்தனர். பிறகு மாஸ்டர், “அவர்கள் என்னைப் பார்த்துச் சிரித்தனர், இருந்தும் என் உடை இயேசுவின் உடை, அவர் அனிந்திருந்த அதே உடைதான்,” என்றார்.
அதற்கு அடுத்த நாள், ஜூலியட் மற்றும் அவரின் நண்பர் ஒருவரும் அப்துல்-பஹாவின் குழுவோடு திரு மற்றும் திருமதி ஹேரிஸ் தம்பதியினரை அடுக்குமாடி இருப்பிடப் பகுதியில் சந்திக்கச் சென்றனர். அப்போது அங்கும் சில குழந்தைகள் தங்கள் விளையாட்டை விடுத்து மாஸ்டரை “குழந்தைகள் சிலுவைப்போர்” போன்று பின்தொடர்ந்து சென்றனர். ஜூலியட் சென்ற இரவு குழந்தைகளின் நடத்தையிலும் இக்குழந்தைகளின் நடத்தையிலும் இருந்த பெரும் வேறுபாட்டை எண்ணி அதிசயித்தார். ஒரு சிறு பெண், “தயவு செய்து கூறுங்கள், இவர் இயேசுவா?” எனக் கேட்டாள். குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருந்த ஜூலியட் தமது நண்பரை ஹேரிஸ் தம்பதியினரின் இல்லத்தில் இருந்த மாஸ்டரிடம் நிகழ்ந்ததை தெரிவிக்கும்படி அனுப்பினார். அந்த நண்பரும் அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை அக்குழந்தைகள் அனைவரும் கின்னி தம்பதியரின் இல்லத்தில் அப்துல்-பஹாவோடு சேர்ந்துகொள்வதற்கான அழைப்போடு திரும்பிவந்தார்.
ஹோவார்ட் கோல்பி ஐவ்ஸ் தாம் இப்போது அடிக்கடி விஜயம் செய்யும் கின்னி தம்பதியினரின் இல்லத்தில் தாம் கண்ட ஓர் அருமையான காட்சியை வருணித்தார். அன்று, ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்த ரெவரன்ட் ஐவ்ஸ் “சப்தமிட்டவாறும் அவ்வளவு சீரான உடைகள் அனியாத,.. ஆனால் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருந்த சுமார் முப்பது தெருச்சிறுவர்கள், வீட்டிற்குள் நுழைந்ததைக் கண்டு அதிசயித்தார். அவர் அச்சிறுவர்களைப் பின்தொடர்ந்து மாடி சென்றார். அங்கு அப்துல்-பஹா அவர்களை புன்னகையுடனும் நகைத்துக்கொண்டும் ஒருவர் ஒருவராக வரேவற்பதைக் கண்டார். இறுதியாக தோன்றியது ஒரு கருப்பினச் சிறுவன். மாஸ்டர் அவனைக் கண்டபோது, அவரது முகம் பிரகாசமடைந்தது முகத்தில் ஒரு தெய்வீகமான புன்னகை தோன்றியது. அவர், “இதோ ஒரு கருப்பு ரோஜா!” என உரக்கக் கூறினார். கூடியிருந்த எல்லோரும் ஓர் அதிசய உணர்வில் ஆழ்ந்திருந்தனர். அப்துல்-பஹா ஒவ்வொரு குழந்தையிடமும் சென்று அன்பாகப் பேசி சாக்லட்டுகளை வழங்கிய போது அவ்வுணர்வு மேலும் அதிகரித்தது. அவர் வெகு கருப்பான ஒரு சாக்ல்ட்டை கையில் எடுத்துக்கொண்டு அக்கருப்பின சிறுவனிடம் சென்று, “ஒரு வார்த்தையும் பேசாமல், ஆனால் கூடியிருந்தோரை நோக்கிய குறும்புப் பார்வையுடன், அச்சிறுவனின் கருப்புக் கண்ணத்தில் அக்கருப்புச் சாக்லட்டை வைத்தார். அப்துல்-பஹாவின் முகம் பிரகாசமடைந்திருந்தது… அப்பிரகாசம் அறையை ஒளிரச் செய்தது.” குழந்தைகள் அவனை அதற்குமுன் பார்த்ததே இல்லை போன்று அக்கருப்பினச் சிறுவனை அதிசயத்துடன் பார்த்தனர். “அச்சிறுவனைப் பொருத்தவரையில்… அவன் கண்கள் மாஸ்டரை உன்னிப்புடனும், உவகையுடனும் பார்த்துக்கொண்டிருந்தன. அந்நேரம் அவன் நிலைமாற்றமடைந்திருந்தான். அவனுடைய மெய்நிலை வெளிக்கொணரப்பட்டிருந்தது, தேவதை எனும் அவன் நிலை வெளிப்பட்டிருந்தது.