இன சமத்துவம் குறித்து அப்துல்-பஹா

அப்துல்-பஹா அமெரிக்கா சென்றடைந்தது முதல் இன சமத்துவம் குறித்த தமது அகநோக்கை தைரியத்துடனும் அசாதாரன வழிகளிலும் வெளிப்படுத்தினார். வாஷிங்டன் நகரில், ஒரு பஹாய் நம்பிக்கையாளரும் பிரபலமான பாரசீக ராஜ தந்திரியுமான ஒருவரின் இல்லத்தில் 23 ஏப்ரல் 1912ல் தமக்காக வழங்கப்பட்டிருந்த ஒரு பகல்விருந்தின் போது அவர் இதை வெளிப்படுத்தினார். தமது இருக்கையில் அமர்ந்து, வெகு நேர்த்தியான உணவு பரிமாறும் அறையில், அவரவர் தரத்திற்கும் சமூக அந்தஸ்திற்கும் ஏற்ற வகையில் வாஷிங்டன் நகரின் சமூக நெறிமுறைகளுக்கிணங்க அங்கு கூடியிருந்த வெள்ளை முகங்களை அவர் நோட்டமிட்டார். எழுந்து நின்று “திரு கிரேகரி எங்கே? அவரை இங்கு அழைத்துவாருங்கள்,” என விருந்தளிப்பவரை நோக்கிக் கூறினார். தர்மசங்கடத்தில் ஆழ்த்தப்பட்ட விருந்தளிப்பவர் வேறு வழியின்றி அவ்விடத்தின் அமர்கையை மாற்றியமைத்து அப்போதுதான் உரையாற்றி முடித்திருந்த அப்துல்-பஹாவை ஹோவார்ட் பல்கலைக்கழகத்திலிருந்து அந்த இராஜதந்திரியின் வீட்டிற்கு அழைத்துவந்திருந்த, ஆப்பிரிக்க-அமெரிக்கரும் வழக்குறைஞருமான லூயி கிரேகரிக்கு மேற்கொண்டு ஓர் இருக்கையை ஏற்பாடு செய்தார். திரு கிரேகரி அப்போது விடைபெற்றுக்கொண்டிருந்தார். அப்துல்-பஹா அவரும் அவ்விருந்தில் கலந்துகொள்ளவேண்டுமென வற்புறுத்தி மேஜையின் மரியாதைக்குறிய தலைப்பகுதியில் தமக்கருகே அமரச்செய்தார். அதன் வாயிலாக, வாஷிங்டன் நகரின் மரபிற்கு எதிராக செயல்பட்டு இனவாரியாக பிரித்தலையும் சமூகரீதியாக பாகுபடுத்துவதையும் புறக்கணித்து, ஒரு வலுவான உதாரணத்தை வெளிப்படுத்தி, வெகுவாகப் பிளவுபட்டுக்கிடந்த அத்தலைநகரின் வழக்கமுறைகளுக்குச் சவால் விட்டார். அவர் தமது ஐக்கிய அமெரிக்கப் பயணத்தின் எல்லா நேரங்களிலும் தாம் உரையாற்றிய எல்லா இடங்களும் எல்லா இனங்களுக்கும் திறந்துவிடப்படவேண்டுமென வலியுறுத்தினார்.
அப்துல்-பஹா இனங்களை ஐக்கியப்படுத்தும் ஒருவழியாக கலப்புத்திருமணங்களை ஊக்குவித்தார். அத்தகைய திருமணங்கள் திடகாத்திரமும் அழகும் மிக்க, புத்திசாலிகளும் திறமைசாலிகளுமான குழந்தைகளை உருவாக்கிடும் என அவர் கூறினார். இத்தகைய முதல் கலப்புத் திருமணம் 1914ல் நடைபெற்றது.
ஹோவார்ட் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய ஓர் உரையில், அலங்காரத்திற்கும் வசீகரத்திற்கும் அல்லாது, தோல் நிறம் என்பது கடவுளின் முன்னிலையில் வேறு எவ்வகையிலும் முக்கியமானதல்ல என சந்தேகத்திற்கு இடமற்ற வகையில் எடுத்துக்கூறினார். மனிதர்களுக்கு இடையில் மட்டும்தான் தோல் நிறம் வேற்றுமைக்கான காரணமாக உள்ளது என அவர் மேலும் வலியுறுத்தினார்.
“மானிட உலகும், ஒரு பூங்காவைப் போன்றது, மனித இனம் அதன் பல்வர்ணப் பூக்களைப் போன்றவர்கள். ஆகவே, வேறுபட்ட நிறங்கள் அலங்காரமாகவே திகழ்கின்றன.”
“மிருகங்கள், அவற்றுக்கு பகுத்தறிவும் புரிந்துகொள்ளும் தன்மையும் இல்லாத போதும் நிறங்களை வேற்றுமைக்கான காரணமாக்கவில்லை. பகுத்தறிவுடைய மனிதன் மட்டும் ஏன் முறன்பாட்டை உருவாக்க வேண்டும். இது அவனுக்கு முற்றிலும் ஏற்புடையதல்ல.”
அப்துல்-பஹா சிக்காகோவில் ஹுல் இல்லம் எனும் ஓரிடத்தில் பின்வருமாறு கூறினார்: “மானிடத்தின் ஒருமைத்தன்மையை பஹாவுல்லா பிரகடனப்படுத்தியுள்ளார். பல்வேறு நாடுகளையும் வேறுப்பட்ட நம்பிக்கைகளையும் ஒற்றுமைப்பட செய்துள்ளார். இனம், நிறம் ஆகியவை ஒரு தோட்டத்தின் வர்ணங்களால் வேறுபடும் அழகைப் போன்றவையாகும். நீங்கள் ஒரு தோட்டத்தில் நுழையும்போது, அங்கு மஞ்சள், வெள்ளை, நீலம், சிகப்பு நிறப் பூக்கள் நிறைந்து அழகுடன் காணப்படலாம். அவை ஒவ்வொன்றும் பிரகாசத்தடனும் ஒன்று மற்றொன்றிலிருந்து வேறுபட்டும் அவற்றின் தனியழகு ஒட்டுமொத்தத்திற்கு அழகு சேர்க்கவும் செய்கின்றன. மனிதர்களுக்கிடையிலான இன வேற்றுமையும் அதே போன்றதுதான். ஒரு தோட்டத்தின் மலர்கள் யாவும் ஒரே நிறமாக இருந்தால், அது சலிப்பு தருவதாகவும் கண்களுக்குச் சோர்வளிப்பதாகவும் அமையும்.”
“ஆகவே, மானிடத்தின் பல்வேறு இனங்கள் ஒட்டுமொத்தத்திற்கும் கூட்டான இணக்கத்தையும் அழகையும் வழங்குகின்றன. ஆகவே, மானிடம் எனும் இம்மாபெரும் பூங்காவில் தங்களுக்கிடையில் எவ்வித வேற்றுமையோ கருத்துவேறுபாடோ இல்லாமல் அருகருகே வளரும் பூக்களைப் போன்று எல்லோரும் கலந்துறவாட வேண்டும்.”