
1 ஜூன் 2021
பாங்குய், மத்திய ஆபிரிக்க குடியரசு, 1 ஜூன் 2021, (BWNS) – மத்திய ஆபிரிக்க குடியரசில் (CAR) பல ஆண்டுகளாக ஆயுத மோதல்கள் நாடு முழுவதும் வாழ்க்கையை சீர்குலைத்து, நூறாயிரக்கணக்கான மக்களை இடம்பெயர செய்துள்ளன.
இந்த நெருக்கடியின் மத்தியில், பஹாய் தேசிய ஆன்மீக சபை நாட்டின் பஹாய்களுக்கு சமூக முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் முயற்சிகளில் வழிகாட்டி வந்துள்ளது, மிகச் சமீபத்தில் சமூக நிர்மாணிப்பு செயல்களில் ஈடுபடும் நபர்களின் வலையமைப்பைப் பயன்படுத்தி, உதவி தேவைப்படும் போது தேவைப்படும் உதவிகளை வாய்க்காலிட உதவியுள்ளது.
செய்தி சேவையுடன் பேசிய தேசிய ஆன்மீக சபை உறுப்பினரான ஹெலீன் பாத்தே, நாட்டின் சில பகுதிகளில் இதுபோன்ற முயற்சிகள் நடைபெற்று வரும் சூழலை விவரிக்கிறார்: “நாடு கடுமையான சவால்களை எதிர்கொண்டது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்கள் உள்ளன. அவர்கள், குடியிருப்புகளைக் கைவிட்டு, வாழ்வாதாரத்தை இழந்து அங்கிருந்து தப்பி ஓட வேண்டியிருந்தது. பல மண்டலங்களில் இதுவே நிலை.”

இந்த நிலைமைகள் இருந்தபோதிலும்கூட, இந்த பகுதிகளில் உள்ள பஹாய்கள், பல போர் சுழற்சிகளின் வழி நிலைத்து வந்துள்ள மீள்ச்சித்திறத்தைப் பேணவும் ஒரு துடிப்பான சமூக வாழ்க்கையை வளர்க்கவும் உதவியுள்ளனர். பல தசாப்தங்களாக, பிரார்த்தனைக்கான வழக்கமான கூட்டங்கள் நட்பின் பிணைப்பை வலுப்படுத்தி வந்துள்ளன. மேலும், பஹாய் கல்வித் திட்டங்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே அனைத்து மக்கள், இனங்கள் மற்றும் மதங்களின் ஒற்றுமைக்கான ஆழ்ந்த மதிப்புணர்வை மேம்படுத்தி வந்துள்ளன.
முழு மக்கள் தொகைகளும் தங்கள் கிராமங்களை கைவிட வேண்டியிருந்த கடுமையான மோதல்களின் போது, பஹாய் உத்வேகம் பெற்ற ஓர் அமைப்பின் ஆதரவுடன் நிறுவப்பட்ட சமூகப் பள்ளிகளின் ஆசிரியர்கள் தற்காலிகமான இடங்களில் திட்டங்களை மீண்டும் நிறுவுவதற்கான வழிகளை நாடினர் என திருமதி பாத்தே விளக்கினார்.

நெருக்கடிகளுக்கு விடையிறுக்கும் அதன் திறனை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, தேசிய ஆன்மீக சபை மார்ச் மாதத்தில் ஓர் அவசர குழுவை அமைத்தது. திருமதி பாத்தே உட்பட, குழுவின் உறுப்பினர்கள், விரைவாகச் செயல்பட்டனர். சில வாரங்களுக்குள் அவர்கள் ஓர் அணியைத் திரட்டி, அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று உதவி செய்தனர்.
மூன்று நாட்களாக, அவர்கள் தலைநகரான பங்கூயிலிருந்து பம்பாரி நகரத்திற்கு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் சென்றனர். வழியில் வனப் பகுதிகளில் தஞ்சம் அடைந்து மீண்டும் திரும்பி வந்த மக்களுக்கு, தண்ணீரினால் பரவும் நோய்களுக்கான மருந்து போன்ற அத்தியாவசியங்களை வழங்குவதற்காக நான்கு நகரங்களில் நிறுத்தினர். மனிதாபிமான முயற்சிகளுக்கு விதிவிலக்கின் காரணமாக இந்தச் சமூகங்களுக்கான பயணம் அரசாங்க சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கிராமவாசிகளிடையே நிவாரணப் பொதிகளின் விநியோகத்தை ஒருங்கிணைப்பதில் அவசரக் குழு பஹாய் உள்ளூர் ஆன்மீக சபைகளுடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளது. திருமதி. பாத்தே கூறுகிறார்: “நாங்கள் பெறக்கூடிய தகவல்களுடன் நேரத்திற்கு முன்பே முடிந்த அளவு நாங்கள் ஆயத்தம் செய்திருந்தோம். ஆனால், நாங்கள் ஒரு ஊருக்கு வந்தவுடன், உள்ளூர் சபை உறுப்பினர்களுடன் அமர்ந்து, ஒன்றாக ஜெபிரார்த்தித்தோம் மற்றும், அவர்கள் நெருக்கமாக அறிந்திருந்த தேவைகளைப் பற்றி ஆலோசித்தோம்.”
இந்த முயற்சிகளில் இளைஞர்கள் முன்னணியில் இருந்து வந்துள்ளனர் என்று திருமதி பாத்தே கூறுகிறார். “செயற்குழுவினர் ஆதரவளிக்கும்படி சமூகத்தைக் கோரியவுடன், இளைஞர்கள் நடவடிக்கையில் ஈடுபடத் தயாராகினர். அவர்கள் இந்தப் பணியை தங்கள் அண்டைப்புற சேவைகளின் ஒரு விரிவாக்கமாக கருதுகின்றனர்: சமூகத்தின் லௌகீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கான ஒரு பங்களிப்பு.
“சில தேவைகளை நேரடியாக மக்களுக்கு வழங்குவதற்காக பல நாட்கள் செய்த இப்பயணம், உடனடி தேவையை நிவர்த்தி செய்வதற்கு மட்டுமல்ல என்பதை அவர்களால் காண முடிந்தது. இவ்வளவு காலமாக துண்டிக்கப்பட்டு வந்தவர்களைச் சந்திப்பதும் பேசுவதும் ஊக்கத்தைக் கொடுத்ததுடன், ஒற்றுமையின் உறவுகளை வளர்த்துக் கொள்ளவும் உதவியது. அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினர் போன்று, தங்கள் சவால்களில் அவர்கள் தனியாக இல்லை என்பதை உணர்ந்தனர். நாடு முழுவதும் மற்றவர்களும் அவர்கள் மீது அக்கறை செலுத்தி அவர்களுடன் உடன் வருகின்றனர்.”
செயற்குழு அமைக்கப்பட்ட இரண்டு மாதங்களிலிருந்து, உள்ளூர் உணவு உற்பத்திக்கான திட்டங்கள் உட்பட நீண்டகால தேவைகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது குறித்து குழு சிந்தித்து வந்துள்ளது.

அது பெற்றுள்ள அனுபவத்துடன், செயற்குழு இப்போது நாடு முழுவதும் இன்னும் பல பஹாய் உள்ளூர் சபைகளைத் தொடர்புகொள்வதன் மூலம் தனது முயற்சிகளை விரிவுபடுத்துகிறது. “இந்த நிவாரண முயற்சிகளில், எவ்வாறு அப்துல்-பஹா, தேவைகள் உள்ளோர்பால் எவ்வாறு கவனத்துடன் இருந்தும், பிரதிசெயல்பட தயாராகவும் இருந்தார் என்பதை நாங்கள் அடிக்கடி நினைவில் கொள்கிறோம்‘ ”என்றார் திருமதி பாத்தே. “அப்துல்-பஹா ஒருபோதும் உதவி வழங்க தயங்கவில்லை. தேசிய ஆன்மீக சபை நம் நாட்டு மக்களுக்கும் அவ்வாறே செய்ய விரும்புகிறது.. ஒரு தேசிய அமைப்பாக நம்மை வருத்துவது என்னவென்றால், அது நாடு முழுவதன் மீதும் கவனம் செலுத்த முடியாது. இதுவரையிலான எங்கள் முயற்சிகள் ஒரு சிறிய தொடக்கம்தான். அனைவரையும் எவ்வாறு சென்றடைவது என்பதை நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுவருகிறோம்.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1512/