அன்பும் ஒற்றுமையும் — விதை விதைக்கும் நாள்கள்


அன்பும் ஒற்றுமையும் – விதை விதைக்கும் நாள்கள்

ஏப்ரல் 12ம் நாள் பிற்பகலின் போது, மேக்நட் தம்பதியினர் புரூக்லின்னில் உள்ள தங்கள் இல்லத்தை அப்துல்-பஹாவிற்காக திறந்துவிட்டும், விருந்தினர்கள் பலர் அவரைக் காணவும் வாய்ப்பளித்தனர். மேக்நட் தம்பதியினரின் இல்லத்தில், பல பஹாய்கள் உணர்ந்திராத ஒன்றான, தெய்வீக வெளிப்பாட்டின் நோக்கம் ஐக்கியமே என்பதை அப்துல்-பஹா வலியுறுத்தினார், அன்பே அவ்வொற்றுமைக்கான வழி எனவும் கூறினார். இந்த அடிப்படையான ஆன்மீகப் போதனையை உலகின் பல பாகங்களில் வெடித்திருந்த போர்களோடு அவர் எதிர்ப்படுத்தினார்.

ஹோவர்ட் மேக்நட் இல்லம், ஜூன் 17, 1912

“தெய்வீகக் கொடைகளின் கீழிறக்கத்தின் வழி மானிடத்தின் அரும்பெரும் நற்பண்புகளை அடைதலே மனிதன் படைக்கபட்டதன் நோக்கமாகும். ஆன்மீக உலகிலும் அதுபோன்றதே நிலை. அவ்வுலகம் பூரண ஈர்ப்பும் இணக்கமும் உடையதாகும். அது ஒரே தெய்வீக ஆவியின் அரசான, கடவுளின் திருவரசாகும். ஆகவே, இங்கு வெளிப்படும் இணக்கமும் அன்பும், இங்கு காணப்படும் தெய்வீகத் தாக்கங்களும் இவ்வுலகைச் சார்ந்தவையல்ல, மாறாக அவை திருவரசைச் சார்ந்தவையாகும். …ஒற்றுமைக்கு மாறாக முறன்பாடுகள் தோன்றுமாயின், அன்பு, ஆன்மீகத் தோழமை ஆகியவற்றின் இடத்தில் வெறுப்பும் பகைமையும் வீற்றிருக்குமாயின், அங்கு இயேசுவுக்குப் பதிலாக இயேசுவின் எதிரியே ஆட்சி செலுத்துவான். …நாம் அவரது திருவாக்கின் சக்தியின் மூலமாக, சிலர் அமெரிக்காவிலிருந்தும், நான் பாரசீகத்திலிருந்தும், அனைவரும் அன்பினாலும் ஒற்றுமையுணர்வினாலும் இங்கு ஒன்றுகூட்டப்பட்டுள்ளோம். கடந்த நூற்றாண்டுகளில் இது சாத்தியப்பட்டதா? ஐம்பது ஆண்டுகளான தியாகம், போதனை ஆகியவற்றிற்குப் பிறகு இப்போது சாத்தியப்பட்டுள்ளதெனில், வரப்போகும் அற்புதமான நூற்றாண்டுகளில் நாம் எதிர்ப்பார்க்கக்கூடியவை எப்படியிருக்கும்?”

அதற்குப் பிறகு அன்று, 39 வெஸ்ட் 67வது தெருவிலுள்ள மிஸ் ஃபிலிப்சின் ஸ்டூடியோவில் உரையாற்றினார். அப்பெரிய அறை மேற்புறத்திலிருந்து ஒளியூட்டப்பட்டிருந்தும் அப்துல்-பஹாவின் முகத்தில் நிழல்கள் விழச்செய்து அதை கரடுமுரடாக்கி மேலும் அதிக ஆற்றலுடன் தென்படச் செய்தது. அங்கு கூடியிருந்தவர்களிடமும் அவர் மீண்டும் அன்பு குறித்தும் பிறருக்கான சேவையே அவ்வன்பின் வெளிப்பாடெனவும் வலியுறுத்தினார். அவர் கூடியிருந்தோரில் அவர்கள் வாழும் காலத்தின் முக்கியத்துவம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திட முனைந்தார்: “ஆகவே, தெய்வீக போதனைகளின் முதல் கோட்பாடாகிய அன்பின் அடிப்படையில் உங்கள் வாழ்க்கைகளை ஒழுங்குபடுத்துங்கள். மானிடத்திற்கான சேவை கடவுளுக்கான சேவையாகும். …நீங்கள் வாழும் இந்நாளின் மதிப்பை உணர்கிறீர்களா? …இவை விதை விதைப்பதற்கான நாள்கள். …இது பஹாவுல்லாவின் இளவேனிற்காலம். ஆன்மீக வளர்ச்சியின் பசுமையும் இலைதலைகளும் மனித உள்ளங்களெனும் தோட்டங்களில் பெரும் வளத்துடன் மலர்வுறுகின்றன. கடந்து செல்லும் இந்நாள்கள், மறைந்திடும் இரவுகள் ஆகியவற்றின் மதிப்பை உணர்வீர்களாக. நீங்கள் ஒருவருக்கொருவர் பூரண அன்பு குறித்த ஒரு ஸ்தானத்தை அடைந்திட முயல்வீர்களாக.”

குழந்தைகளின் கல்வி பற்றிய ஒரு கதை


குழந்தைகளின் கல்வி பற்றிய ஒரு கதை

பஹாய் சமயத்தின் ஒரு மாபெரும் கோட்பாடும், பஹாய் சமூகத்தினரின் ஆர்வமிகு நடவடிக்கைகளுள் ஒன்றாகவும் இருப்பது குழந்தைகளின் ஆன்மீகக் கல்வியாகும். தமது அமெரிக்க விஜயத்தின்போது  அப்துல்-பஹாவின் பெரும்பாலான உரைகளின் கருப்பொருளாக இவ்விஷயமே இருந்தது. அவர் ஐக்கிய அமெரிக்காவை சென்றடைந்தவுடன் வழங்கிய முதல் உரையிலும் இக்கருப்பொருள் உள்ளடங்கியிருந்தது.

 அப்துல்-பஹா, அமெரிக்காவின் கிழக்குக்கரையிலும், மேற்குப்பகுதியின் மத்தியிலும் குழந்தைகளின் ஒன்றுகூடல்கள் பலவற்றில் உரையாற்றினார். ஓக்லன்ட், கலிஃபோர்னியாவில் அவ்வாறான ஓர் உரையை செவிமடுத்த ஒரு பெண்மணி, பிறகு பின்வாருமாறு எழுதினார்:

 “ அப்துல்-பஹா தமது உரையை முடித்தவுடன் சந்தோஷத்தாலும் அவர்மீது கொண்ட வாஞ்சையினாலும் என் உள்ளம் நிறைந்திருந்தது. வெகு அன்பாக அவரது மென்மைமிகு, அழகான குரலில், தமது வழிகாட்டல்களை உரைத்திட்ட மாஸ்டர் அவர்களின் சொற்களால் நிறைந்திருந்த நினைவுகளோடு நாங்கள் இல்லம் திரும்பினோம்.” (Ramona Allen Brown, “Memories of ‘Abdu’l-Bahá” p. 61)

ஏப்ரல் 24, 1912ல்  அப்துல்-பஹா ஒரு குழுந்தைகள் ஒன்றுகூடலில் கலந்துகொண்டு பெற்றோர்களிடம் பின்வருமாறு கூறினார்:

 “இன்று ஒளிபெற்ற ஆன்மீகக் குழந்தைகள் இங்கு ஒன்றுகூடியுள்ளனர். அவர்கள் திருவரசின் குழந்தைகள். தெய்வீக அரசு இத்தகைய ஆன்மாக்களுக்கே உரியதாகும், ஏனெனில் அவர்கள் கடவுளுக்கு வெகு அணுக்கமாக இருக்கின்றனர். அவர்கள் தூய உள்ளத்தைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஆன்மீக வதனத்தைப் பெற்றுள்ளனர். தெய்வீக போதனைகளின் விளைவுகள் அவர்களின் முழுநிறைவான தூய்மைமிகு உள்ளங்களில் வெளிப்படுகின்றன. அதனால்தான் இயேசு உலகோரை நோக்கி பின்வருமாறு கூறினார்: ‘நீங்கள் மாற்றமடைந்தும், சிறுகுழந்தைகள்போல் ஆகாத வரையிலும், நீங்கள் தெய்வீக இராஜ்யத்தினுள் நுழைய முடியாது’ – அதாவது, கடவுளை அறிந்துகொள்ள மனிதர்கள் தூய்மையான உள்ளத்தைப் பெறவேண்டும்…’ நான் இக்குழந்தைகளின் சார்ப்பாக பிரார்த்தித்து, கடவுளின் நிழலிலும் பாதுகாப்பிலும் பயிற்றுவிக்கப்படவும், அதன்வாயிலாக அவர்கள் ஒவ்வொருவரும் மானிட உலகில் ஏற்றிவைக்கப்பட்ட மெழுகுவர்த்திகளாகவும், அப்ஹா ரோஜா தோட்டத்தில் வளரும் மென்மைமிகு பயிர்களாகவும் ஆகிட அவர்களுக்காக அப்ஹா இராஜ்யத்தின் உறுதிப்பாடுகளையும் உதவியையும் இறைஞ்சுகின்றேன்; இக்குழந்தைகள் மானிட உலகிற்கு உயிரளித்திடவும்; அவர்கள் அகப்பார்வைகள் பெறவும்; உலக மக்களுக்குச் செவிகள் வழங்கிடவும்; அவர்கள் நித்திய வாழ்விற்கான விதைகளை விதைத்திடவும் கடவுளின் திருவாயிலில் வரவேற்கப்படவும்;   நன்றிப் பெருக்குடனும் நம்பிக்கையுடனும் அவர்களின் தாய்களும் தந்தைகளும், உறவினர்களும் கடவுளுக்கு நன்றி செலுத்திடுமளவிற்கு அத்தகைய நெறிமுறைகள், முழுநிறைவுகள், பண்புகள் ஆகியவற்றால் அடையாளப்படுத்தப்படவும் வேண்டும். இதுவே என் ஆவலும் பிரார்த்தனையுமாகும்.”

(The Promulgation of Universal Peace, p. 53; 2007 edition, pp. 72-73)

 அப்துல்-பஹா, குழந்தைகளை ஆன்மீகம் நெறிமுறை ஆகியவற்றில் பயிற்றுவிப்பதன் முக்கியத்துவம் குறித்து இதே போன்ற வலியுறுத்தலை தமது எழுத்தோவியங்களிலும் வழங்குகிறார்:

“குழந்தைகள் புத்துயிரும் பசுமையும் மிக்க ஒரு கிளையைப்போன்றவர்கள்; நாம் அவர்களைப் பயிற்றுவிக்கும் விதத்தில்தான் அவர்கள் வளரவும் செய்வார்கள். அவர்களுக்கு உயர்ந்த இலட்சியங்களையும் குறிக்கோள்களையும் வழங்கிட மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள்,  அதனால் வயது வந்தவுடன், அவர்கள் பிரகாசமிக்க மெழுகுவர்த்திகளைப் போன்று தங்கள் ஒளிக்கதிர்களை உலகின்மீது வீசிடக்கூடும்; கவனமின்மை அக்கறையின்மை ஆகிய மிருக இச்சைகள் உணர்வெழுச்சிகள் ஆகியவற்றால் மாசுபடாது இருக்கவும்கூடும்.”

(Selections from the Writings of ‘Abdu’l-Bahá, p. 136)

நீங்கள் என்னை வரவேற்பதற்கு மாறாக… (பகுதி 2)


“நீங்கள் என்னை வரவேற்பதற்கு மாறாக நான் உங்களுக்கு ‘நல்வரவு’ கூறப் போகின்றேன்”

 (பகுதி 2)

ஒழுக்கநெறிகள் மேம்படுத்தப்பட்டாலொழிய, மானிடம் உண்மையான அபிவிருத்தியை அடைந்திட இயலாததாக இருக்கும். உண்மையான அபிவிருத்தியென்பது மானிட உலகு தெய்வீக நெறிமுறைகளுக்கு மையமாகவும், இரக்கமிக்கவரின் ஒளிர்வுகளுக்கான தலமாகவும், கடவுளின் கொடைகளைப் பிரதிபலித்திடும் ஒரு கண்ணாடியாகவும் ஆவதைப் பொருத்திருக்கின்றது. அதன் மூலமாக மானிட உலகு கடவுளின் பிரதிபிம்பமாகவும் சாயலாகவும் ஆகிடக்கூடும். மானிட உலகில் இவ்வொழுக்க நெறிகள் அவற்றை வெளிப்படுத்திக்கொள்ளும் வரை, உண்மையான மேம்பாடும் அபிவிருத்தியும் அடையப்பட முடியாது.

சிக்காகோ கோவில் கட்டுமாணம் குறித்த கூட்டம் ஒன்றில் அப்துல்-பஹா உரையாடுகின்றார்.

புனிதர் பஹாவுல்லா, மனிதகுலம் முழுமையையும் நோக்கி: “நீங்கள் அனைவரும் ஒரே மரத்தின் இலைகளும் ஒரே கிளையின் கனிகளும் ஆவீர்,” எனப் பகன்றுள்ளார். இது குறிப்பிடுவது மானிட உலகு ஒரே மரத்தை பிரதிநிதிக்கின்றது, மற்றும் மனிதகுலம் முழுவதும் அதன் இலைகளையும், மலர்களையும், கனிகளையும் பிரதிநிதிக்கின்றது என்பதாகும். ஆகவே, இவ்வுலகவாசிகள் அனைவரும் இம்மரத்தோடு கொண்டிருந்த தங்களின் பற்றின் வாயிலாக வளர்ந்துள்ளனர், தெய்வீகக் கருணையெனும் மழைப்பொழிவின் மூலம் வளர்க்கப்பட்டும், பேணப்பட்டுமுள்ளனர். இப்போதனையே இக்காலக் கட்டத்தின் உணர்வு என்பது வெள்ளிடைமலை. அது வாழ்வளிக்கின்றது, ஏனெனில் அன்பின் மூலம் அது மக்களை உயிர்ப்பிக்கின்றது, மற்றும் அன்னியப்படுத்துதலை அது முற்றாக அகற்றுகின்றது. அது அனைவரையும் நட்பிலும் ஐக்கியத்திலும் ஒன்றுபடுத்துகின்றது.

பஹவுல்லாவின் போதனைகளுள் ஒன்று, மனிதன் எல்லா நிலைகளிலும், சூழல்களிலும் மன்னிக்குந் தன்மையுடனும், தன் எதிரியை நேசிப்பவனாகவும், தீது நினைப்பவரை நலன் விரும்பியெனவும் கருத வேண்டும். அதாவது அவர் ஒருவரைத் தன் எதிரியென தீர்மானித்தும் அதன்பின் அவரை பொறுத்துக்கொள்ளவும் வேண்டும் என்பது இதன் அர்த்தமல்ல, அல்லது வேறு வழியின்றி அவரைச் சகித்துக்கொள்வது, அல்லது அவரைத் தன் பகையாளி என கருதி அவருடன் சகிப்புத்தன்மையோடு பழகுவதும் அல்ல. இது உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதாகுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அன்பு உண்மையானதல்ல. மாறாக, நீங்கள் உங்கள் எதிரிகளை நண்பர்களாகவும், தீமை விரும்பிகளை நன்மை விரும்பிகளாகவும் பார்த்து அவர்களை அவ்வாறாகவே நடத்தவும் வேண்டும்.

அதாவது, உங்கள் அன்பும் கருணையுணர்வும் உண்மையானவையாக இருக்க வேண்டும் என்பதாகும். உங்களின் நலம் விரும்புதல் மெய்யானதாகவும், வெறும் சகிப்பிற்காக மட்டுமே இருக்கக்கூடாது, ஏனெனில் சகிப்புத்தன்மையானது உள்ளத்திலிருந்து உதிக்காவிடில், அது வெளிவேஷமாகிவிடும். மெய்ம்மையின் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

பஹாவுல்லாவின் போதனைகளுள் தியாகமும் ஒன்றாகும். மனிதன் தியாகத்தின் நிலையை அடையவேண்டும் மற்றும் தியாகத்தின் ஸ்தானம் என்பது முற்றிலும் விடுபட்ட ஒரு நிலையாகும்; அதாவது அவனுடைய சொத்துக்கள், வசதிகள், அவன் உயிர்கூட மானிடத்திற்காக தியாகம் செய்யப்பட வேண்டும். மனிதன் இந்த ஸ்தானத்தை அடையும் வரை, அவன் கடவுளின் பேரொளிகளையும், இரக்கமிக்கவரின் கொடைகளையும், இப்பிரகாசமிகு நூற்றாண்டில், வெளிப்படையாகவும், பிறங்கொளிமிக்கதாகவும் ஆகியுள்ள புனித ஆவியின் மூச்சுக்காற்றையும் இழந்தவனாவான்.

பஹாவுல்லாவின் போதனைகளுள், கடவுள் மனிதனைப் படைத்துள்ளதன் நோக்கம் மனிதன் தனது உள்ளமை அல்லது வாழ்தலின் மூலம் ஏதாவது பலனை, ஒரு நித்திய கனியை, ஓர் என்றும் நிலையான விளைவை அளித்திட வேண்டும் எனும் பொருண்மைக்கு ஒப்பான ஒரு போதனை உள்ளது. இவ்வுலக வாழ்வு குறுகியதாகையால், இவ்வுலகின் ஆசிகள் தற்காலிகமானவை, இந்த இயலுலகின் பசுமைகள் தற்காலிகமானவை, இயலுலகின் மகிழ்ச்சிகள் தற்காலிகமானவை, மற்றும் மானிட உலகு குறுகிய காலம் கொண்ட இப்பொருளுலகின் எல்லைகளுக்கு உட்பட்டிருக்குமானால், மனிதன் தன் சக்திகளை தற்காலிக விளைவுகளுக்காக அர்ப்பணிப்பானானால், இது கனி கொடுப்பதாகாது, அது தற்காலிகமானது ஆகையால் அதனால் எவ்வித பயனுமில்லை. இல்லையில்லை, மாறாக, மனிதன், என்றும் நிலையான ஆன்மீகம் அவனுடையதாகிட அவன் நித்திய கனிகள் கொடுக்கும் ஒரு புனித விருட்சமாக இருந்திட வேண்டும்

மானிட உலகின் உண்மையான கனி என்றும் நிலையானது, அது கடவுள் மீதான அன்பே ஆகும், அது கடவுளைப் பற்றிய அறிவாகும், அது மானிடத்திற்கான சேவையாகும், அது மனிதகுலம் முழுமைக்குமான அன்பாகும், அது மானிட உலகின் – முழுநிறைவான மேம்பாடான – லௌகீக மற்றும் ஆன்மீக மேம்பாட்டிற்காக முயற்சிப்பதும் போராடுவதுமாகும். இதுவே என்றும் நிலையான கனியாகும். இதுவே தெய்வீகச் சுடரொளியாகும். இதுவே தெய்வீகக் கொடையாகும். இதுவே என்றும் நிலையான வாழ்வாகும்.

போதனைகள் நீண்டவை, ஆனால் அவற்றை நான் சுருங்கக் கூறியுள்ளேன், மற்றும் அடிப்படைகளாகிய, இச்சுருக்கவுரைகளின் மூலம், நீங்கள் போதனைகள் முழுமையையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

இறைவன் போற்றப்படுவாராக! நாம் இங்கு கூடியுள்ளோம், மற்றும் கடவுளின் அன்பே  நமது ஒன்றுகூடலுக்கான காரனமும் ஆகும். இறைவன் போற்றப்படுவாராக! இதயங்கள் ஒன்றுக்கொன்று அன்பு செலுத்துகின்றன, தெய்வீகக் கதிரொளி பிரகாசிக்கின்றது. இதயங்கள் நெகிழ்வுறவும், ஆன்மாக்கள் ஈர்ப்புறவும், யாவறும் பஹாவுல்லாவின் போதனைகளுக்கு ஏற்ப செயல்படவும் நான் நம்பிக்கைக் கொண்டுள்ளேன்.

(ஓக்லன்ட், கலிஃபோர்னியாவில் திருமதி ஹெலன் கூடாலின் இல்லத்தில், 3 அக்டோபர் 1912ல் அப்துல் பஹா ஆற்றிய உரை; Star of the West, vol. 4, no. 11, September 27, 1913)

நீங்கள் என்னை வரவேற்பதற்கு மாறாக நான் உங்களுக்கு ‘நல்வரவு’ கூறப் போகின்றேன்


நீங்கள் என்னை வரவேற்பதற்கு மாறாக நான் உங்களுக்கு ‘வரவேற்பு’ கூறப்போகின்றேன். உங்களுடன் இங்கிருப்பதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. அளவற்ற களிப்புடன் இருக்கின்றேன், மற்றும் இத்தகைய ஒரு சந்திப்பிற்குக் கருவியாக இருந்து வழிவகுத்த புனிதரான பஹாவுல்லா அவர்களின் திருவாக்கின் ஆற்றலுக்காக நான் அவருக்கு நன்றி செலுத்தினேன்.

சிக்காகோ கோவில் எழவிருக்கும் தலத்தில் நிர்மாணிக்கப்பட்ட கூடாரம்.

இவ்வுலகில் பல மக்கள் நாட்டுக்கு நாடு செல்கின்றனர். ஒரு வேளை அவர்கள் இங்கிருந்து கிழக்கு நாடுகளுக்குச் செல்லக்கூடும்; ஒரு வேளை கிழக்கிலிருந்து சிலர் இங்கு வரக்கூடும்; ஆனால் அப் பயணங்கள், சுற்றுலாவுக்காகவோ, வர்த்தக நோக்கத்துடனோ, அரசியல் காரணமாகவோ, அறிவியல் சாதனைக்காகவோ, நண்பர்களைச் சந்திப்பதற்காகவோ இருக்கலாம். அத்தகைய ஒன்றுகூடல்கள் தற்செயல் நிகழ்வுகளாகும்; அவை யாவும் இயல்புலகின் அவசரத்தேவைகள் சம்பந்தமானவையாகும்.

நான் கிழக்கிலிருந்து மேற்கிற்கு வந்துள்ளேன்—எத்தகைய வர்த்தக நோக்கமில்லாமலும் அல்லது சுற்றுலாவை நோக்கமாகக்கொண்டோ, அரசியல் காரணங்களுக்காவோ நான் இத்தூர பயணத்தை மேற்கொள்ளவில்லை. இப்பயணம் உங்களைச் சந்திப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டது. மற்றவர்களின் சந்திப்புகள் பொதுவாகவே தற்செயலானவையாக இருக்கும் அதே வேளை, நமது சந்திப்பு உண்மையானது, இன்றியமையாதது—ஏனெனில் இதயங்கள் இணைக்கப்பட்டுள்ளன, ஆன்மாக்கள் ஈர்க்கப்பட்டுள்ளன, ஆன்மவுணர்வுகள் கிளர்வுற்றிருக்கின்றன, இத்தகைய கூட்டம் இயல்பில் உண்மையானது, மற்றும் அதிலிருந்து பிறக்கும் விளைவுகள் மகத்தானவையாகும். அவ்விளைவுகள் நிலையானவையாகும்.

கடந்து சென்ற காலங்களை நினைவுகூறுங்கள். அப்போது இது போன்ற கூட்டம் ஒன்று நடந்தது—அது மனசாட்சியின் ஈர்ப்பினால் தோன்றியது என்பதாகும். அதற்கு ஆன்மீக பந்தமே காரணமாகும். அதற்கு சுவர்க்கத்தின் சகோதர பந்தமே காரணமாகும். பின்னாளில் இணைநிலைப்பட்ட அதன் விளைவுகளைக் கருதுங்கள்! எத்தகைய ஒளிகள் அதிலிருந்து தோன்றியுள்ளன! அதிலிருந்த எத்தகைய புதிய ஆன்மவுணர்வுதான் சுவாசிக்கப்பட்டுள்ளது!

ஆதலால், நமது இக்கூட்டமும் அது போன்றே ஒரு ஆன்மீகக் கூட்டமாக, ஒரு தெய்வீக கூட்டமாக, ஒரு சுமுகமான பந்தமாக, தெய்வீகத்திற்கு உட்பட்டதாக, புனித ஆவியின் மூச்சுக் காற்றில் விளைந்ததாக ஆகிடவேண்டுமென நான் இறைவனை வேண்டுகின்றேன். அதன் தடயங்கள் நிலையானவையாக இருக்கட்டுமாக, அதன் விளைவுகள் நித்தியமானவையாக இருக்கட்டுமாக, அது அழியாத பந்தமாகவும் பிரிக்கப்படமுடியாத இணைவாகவும் இருக்கட்டுமாக. அது என்றுமே முடிவுறாத ஓர் அன்பாக இருக்கட்டுமாக. இதுவே என் எதிர்ப்பார்ப்பு, இறையரசின்பால் முகம் திருப்பியுள்ளோரே, கடவுளின் அன்பால் ஒளிர்வடைந்துள்ளோரே, இக்கூட்டம் என்றும்நிலையான விளைவுகளை உண்டாக்கிட நீங்கள் சற்றும் அயராமல் உழைத்திட வேண்டும். இதனால் நடைபெறக் கூடியது என்ன?

நீங்கள் பஹாவுல்லாவின் போதனைகளுக்கிணங்க செயல்படும்போது இது நடைபெறும். நீங்கள் தெய்வீக ஆவியினால் மறுவுயிர்ப்புறுவதை இது பொருத்திருக்கின்றது. ஒரு மனிதனின் உடலுக்கு அவனுடைய ஆன்மா எவ்வாறோ அவ்வாறே இவ்வுலக்கிற்கு பஹாவுல்லாவின் திருவெளிப்பாடு உள்ளது. உலகெனும் உடலோடு ஒப்பிடுகையில் தெய்வீகம் என்பது ஒரு விளக்கினுள் ஒளிவிடும் ஒளியைப் போன்றதாகும். உள்ளங்களெனும் நிலத்தோடு ஒப்பிடுகையில் அது உயிரளிக்கும் மழையைப் போன்றதாகும். மரங்களின் ஆன்மீக வளர்ச்சி எனும்போது அது வசந்தகால தென்றலைப் போன்றதாகும்; மற்றும் பிணியுற்ற அரசியல் அமைப்பிற்கு அது விரைவாகச் செயல்படும் நிவாரணியாகும், ஏனெனில் மானிட உலகின் ஒருமைத்தன்மைக்கு அதுவே மூலாதாரமாகும். அதுவே எல்லா மனிதர்களுக்கிடையிலான அன்பாகும். அது எல்லா சமயநம்பிக்கைகளையும் ஐக்கியப்படுத்திடும் பந்தமாகும். அது எல்லா இனங்களையும் இணைக்கும் ஐக்கியமாகும். அது எல்லா நாடுகளுக்குமிடையிலான தொடர்பாகும். அது தேசங்களுக்கிடையிலான சர்வலோக அமைதியாகும். அது எல்லா மக்களுக்குமிடையிலான சர்வலோக அமைதியாகும். அது எல்லா பிறந்தகங்களையும் ஒன்றுகூட்டவிருக்கும் சர்வலோக அமைதியாகும். சந்தேகமற அதுவே உலகின் ஆன்மாவாகும். அதுவே உலகின் ஒளியாகும். அதே போன்று அது அறிவாற்றல் பிரகடனத்திற்கு உத்வேகமளிப்பதாகும், மற்றும் அறிவியல், பகுத்தறிவிற்கிடையிலான இணக்கத்திற்குக் காரணமுமாகும்.

உலகின் தேசங்கள் யாவும் இன்று தப்பெண்ணங்கள், வெறுப்புணர்வு மற்றும் காழ்ப்புணர்வு போன்றவற்றிற்கு உயிரளிக்கும் குறிப்பிட்ட சில மூடநம்பிக்கைகளுக்கு உட்பட்டுள்ளனர். இம்மூட நம்பிக்கைகளே யுத்தங்களுக்கும் சண்டைகளுக்கும் காரணமாக இருக்கின்றன. சமயங்கள் சார்ந்த அறிவுக்குப் பொருந்தாத நடத்தைகள் பலவகைப்பட்டவையாகவும், போலியானவையுமாக இருக்கின்றன; ஆனால் பஹாவுல்லாவின் போதனைகள் மெய்ம்மையின் மறுவுருவமாகும், மற்றும் மெய்ம்மையே எல்லா தெய்வீக சமயங்களுக்கும் அடித்தலமும் ஆகும். ஆகவே இப்போதனைகளே மானிடத்தை ஐக்கியப்படுத்தவிருப்பதற்கான காரணிகளாகும். அவை மனித உள்ளங்களுக்கிடையே அன்பிற்குக் காரணமாகும், ஏனெனில் அவையே மெய்ம்மையாகும்.

அதே போன்று பஹாவுல்லாவின் போதனைகள் நன்னடத்தையை குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன, மற்றும் நன்னடத்தையே சர்வ-மகிமைமிக்கவரின் அதிபெரும் ஒளிர்வுகளாகும்.

(ஓக்லேன்ட், கலிஃபோர்னியா ஹெலன் கூடோலின் இல்லத்தில் 3 அக்டோபர் 1912ல் அப்துல் பஹாவின் சொற்பொழிவிலிருந்து. Star of the West, vol. 4, no. 11, September 27, 1913)