அன்பும் ஒற்றுமையும் – விதை விதைக்கும் நாள்கள்
ஏப்ரல் 12ம் நாள் பிற்பகலின் போது, மேக்நட் தம்பதியினர் புரூக்லின்னில் உள்ள தங்கள் இல்லத்தை அப்துல்-பஹாவிற்காக திறந்துவிட்டும், விருந்தினர்கள் பலர் அவரைக் காணவும் வாய்ப்பளித்தனர். மேக்நட் தம்பதியினரின் இல்லத்தில், பல பஹாய்கள் உணர்ந்திராத ஒன்றான, தெய்வீக வெளிப்பாட்டின் நோக்கம் ஐக்கியமே என்பதை அப்துல்-பஹா வலியுறுத்தினார், அன்பே அவ்வொற்றுமைக்கான வழி எனவும் கூறினார். இந்த அடிப்படையான ஆன்மீகப் போதனையை உலகின் பல பாகங்களில் வெடித்திருந்த போர்களோடு அவர் எதிர்ப்படுத்தினார்.

“தெய்வீகக் கொடைகளின் கீழிறக்கத்தின் வழி மானிடத்தின் அரும்பெரும் நற்பண்புகளை அடைதலே மனிதன் படைக்கபட்டதன் நோக்கமாகும். ஆன்மீக உலகிலும் அதுபோன்றதே நிலை. அவ்வுலகம் பூரண ஈர்ப்பும் இணக்கமும் உடையதாகும். அது ஒரே தெய்வீக ஆவியின் அரசான, கடவுளின் திருவரசாகும். ஆகவே, இங்கு வெளிப்படும் இணக்கமும் அன்பும், இங்கு காணப்படும் தெய்வீகத் தாக்கங்களும் இவ்வுலகைச் சார்ந்தவையல்ல, மாறாக அவை திருவரசைச் சார்ந்தவையாகும். …ஒற்றுமைக்கு மாறாக முறன்பாடுகள் தோன்றுமாயின், அன்பு, ஆன்மீகத் தோழமை ஆகியவற்றின் இடத்தில் வெறுப்பும் பகைமையும் வீற்றிருக்குமாயின், அங்கு இயேசுவுக்குப் பதிலாக இயேசுவின் எதிரியே ஆட்சி செலுத்துவான். …நாம் அவரது திருவாக்கின் சக்தியின் மூலமாக, சிலர் அமெரிக்காவிலிருந்தும், நான் பாரசீகத்திலிருந்தும், அனைவரும் அன்பினாலும் ஒற்றுமையுணர்வினாலும் இங்கு ஒன்றுகூட்டப்பட்டுள்ளோம். கடந்த நூற்றாண்டுகளில் இது சாத்தியப்பட்டதா? ஐம்பது ஆண்டுகளான தியாகம், போதனை ஆகியவற்றிற்குப் பிறகு இப்போது சாத்தியப்பட்டுள்ளதெனில், வரப்போகும் அற்புதமான நூற்றாண்டுகளில் நாம் எதிர்ப்பார்க்கக்கூடியவை எப்படியிருக்கும்?”
அதற்குப் பிறகு அன்று, 39 வெஸ்ட் 67வது தெருவிலுள்ள மிஸ் ஃபிலிப்சின் ஸ்டூடியோவில் உரையாற்றினார். அப்பெரிய அறை மேற்புறத்திலிருந்து ஒளியூட்டப்பட்டிருந்தும் அப்துல்-பஹாவின் முகத்தில் நிழல்கள் விழச்செய்து அதை கரடுமுரடாக்கி மேலும் அதிக ஆற்றலுடன் தென்படச் செய்தது. அங்கு கூடியிருந்தவர்களிடமும் அவர் மீண்டும் அன்பு குறித்தும் பிறருக்கான சேவையே அவ்வன்பின் வெளிப்பாடெனவும் வலியுறுத்தினார். அவர் கூடியிருந்தோரில் அவர்கள் வாழும் காலத்தின் முக்கியத்துவம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திட முனைந்தார்: “ஆகவே, தெய்வீக போதனைகளின் முதல் கோட்பாடாகிய அன்பின் அடிப்படையில் உங்கள் வாழ்க்கைகளை ஒழுங்குபடுத்துங்கள். மானிடத்திற்கான சேவை கடவுளுக்கான சேவையாகும். …நீங்கள் வாழும் இந்நாளின் மதிப்பை உணர்கிறீர்களா? …இவை விதை விதைப்பதற்கான நாள்கள். …இது பஹாவுல்லாவின் இளவேனிற்காலம். ஆன்மீக வளர்ச்சியின் பசுமையும் இலைதலைகளும் மனித உள்ளங்களெனும் தோட்டங்களில் பெரும் வளத்துடன் மலர்வுறுகின்றன. கடந்து செல்லும் இந்நாள்கள், மறைந்திடும் இரவுகள் ஆகியவற்றின் மதிப்பை உணர்வீர்களாக. நீங்கள் ஒருவருக்கொருவர் பூரண அன்பு குறித்த ஒரு ஸ்தானத்தை அடைந்திட முயல்வீர்களாக.”