“நீங்கள் என்னை வரவேற்பதற்கு மாறாக நான் உங்களுக்கு ‘நல்வரவு’ கூறப் போகின்றேன்”
(பகுதி 2)
ஒழுக்கநெறிகள் மேம்படுத்தப்பட்டாலொழிய, மானிடம் உண்மையான அபிவிருத்தியை அடைந்திட இயலாததாக இருக்கும். உண்மையான அபிவிருத்தியென்பது மானிட உலகு தெய்வீக நெறிமுறைகளுக்கு மையமாகவும், இரக்கமிக்கவரின் ஒளிர்வுகளுக்கான தலமாகவும், கடவுளின் கொடைகளைப் பிரதிபலித்திடும் ஒரு கண்ணாடியாகவும் ஆவதைப் பொருத்திருக்கின்றது. அதன் மூலமாக மானிட உலகு கடவுளின் பிரதிபிம்பமாகவும் சாயலாகவும் ஆகிடக்கூடும். மானிட உலகில் இவ்வொழுக்க நெறிகள் அவற்றை வெளிப்படுத்திக்கொள்ளும் வரை, உண்மையான மேம்பாடும் அபிவிருத்தியும் அடையப்பட முடியாது.
புனிதர் பஹாவுல்லா, மனிதகுலம் முழுமையையும் நோக்கி: “நீங்கள் அனைவரும் ஒரே மரத்தின் இலைகளும் ஒரே கிளையின் கனிகளும் ஆவீர்,” எனப் பகன்றுள்ளார். இது குறிப்பிடுவது மானிட உலகு ஒரே மரத்தை பிரதிநிதிக்கின்றது, மற்றும் மனிதகுலம் முழுவதும் அதன் இலைகளையும், மலர்களையும், கனிகளையும் பிரதிநிதிக்கின்றது என்பதாகும். ஆகவே, இவ்வுலகவாசிகள் அனைவரும் இம்மரத்தோடு கொண்டிருந்த தங்களின் பற்றின் வாயிலாக வளர்ந்துள்ளனர், தெய்வீகக் கருணையெனும் மழைப்பொழிவின் மூலம் வளர்க்கப்பட்டும், பேணப்பட்டுமுள்ளனர். இப்போதனையே இக்காலக் கட்டத்தின் உணர்வு என்பது வெள்ளிடைமலை. அது வாழ்வளிக்கின்றது, ஏனெனில் அன்பின் மூலம் அது மக்களை உயிர்ப்பிக்கின்றது, மற்றும் அன்னியப்படுத்துதலை அது முற்றாக அகற்றுகின்றது. அது அனைவரையும் நட்பிலும் ஐக்கியத்திலும் ஒன்றுபடுத்துகின்றது.
பஹவுல்லாவின் போதனைகளுள் ஒன்று, மனிதன் எல்லா நிலைகளிலும், சூழல்களிலும் மன்னிக்குந் தன்மையுடனும், தன் எதிரியை நேசிப்பவனாகவும், தீது நினைப்பவரை நலன் விரும்பியெனவும் கருத வேண்டும். அதாவது அவர் ஒருவரைத் தன் எதிரியென தீர்மானித்தும் அதன்பின் அவரை பொறுத்துக்கொள்ளவும் வேண்டும் என்பது இதன் அர்த்தமல்ல, அல்லது வேறு வழியின்றி அவரைச் சகித்துக்கொள்வது, அல்லது அவரைத் தன் பகையாளி என கருதி அவருடன் சகிப்புத்தன்மையோடு பழகுவதும் அல்ல. இது உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதாகுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அன்பு உண்மையானதல்ல. மாறாக, நீங்கள் உங்கள் எதிரிகளை நண்பர்களாகவும், தீமை விரும்பிகளை நன்மை விரும்பிகளாகவும் பார்த்து அவர்களை அவ்வாறாகவே நடத்தவும் வேண்டும்.
அதாவது, உங்கள் அன்பும் கருணையுணர்வும் உண்மையானவையாக இருக்க வேண்டும் என்பதாகும். உங்களின் நலம் விரும்புதல் மெய்யானதாகவும், வெறும் சகிப்பிற்காக மட்டுமே இருக்கக்கூடாது, ஏனெனில் சகிப்புத்தன்மையானது உள்ளத்திலிருந்து உதிக்காவிடில், அது வெளிவேஷமாகிவிடும். மெய்ம்மையின் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
பஹாவுல்லாவின் போதனைகளுள் தியாகமும் ஒன்றாகும். மனிதன் தியாகத்தின் நிலையை அடையவேண்டும் மற்றும் தியாகத்தின் ஸ்தானம் என்பது முற்றிலும் விடுபட்ட ஒரு நிலையாகும்; அதாவது அவனுடைய சொத்துக்கள், வசதிகள், அவன் உயிர்கூட மானிடத்திற்காக தியாகம் செய்யப்பட வேண்டும். மனிதன் இந்த ஸ்தானத்தை அடையும் வரை, அவன் கடவுளின் பேரொளிகளையும், இரக்கமிக்கவரின் கொடைகளையும், இப்பிரகாசமிகு நூற்றாண்டில், வெளிப்படையாகவும், பிறங்கொளிமிக்கதாகவும் ஆகியுள்ள புனித ஆவியின் மூச்சுக்காற்றையும் இழந்தவனாவான்.
பஹாவுல்லாவின் போதனைகளுள், கடவுள் மனிதனைப் படைத்துள்ளதன் நோக்கம் மனிதன் தனது உள்ளமை அல்லது வாழ்தலின் மூலம் ஏதாவது பலனை, ஒரு நித்திய கனியை, ஓர் என்றும் நிலையான விளைவை அளித்திட வேண்டும் எனும் பொருண்மைக்கு ஒப்பான ஒரு போதனை உள்ளது. இவ்வுலக வாழ்வு குறுகியதாகையால், இவ்வுலகின் ஆசிகள் தற்காலிகமானவை, இந்த இயலுலகின் பசுமைகள் தற்காலிகமானவை, இயலுலகின் மகிழ்ச்சிகள் தற்காலிகமானவை, மற்றும் மானிட உலகு குறுகிய காலம் கொண்ட இப்பொருளுலகின் எல்லைகளுக்கு உட்பட்டிருக்குமானால், மனிதன் தன் சக்திகளை தற்காலிக விளைவுகளுக்காக அர்ப்பணிப்பானானால், இது கனி கொடுப்பதாகாது, அது தற்காலிகமானது ஆகையால் அதனால் எவ்வித பயனுமில்லை. இல்லையில்லை, மாறாக, மனிதன், என்றும் நிலையான ஆன்மீகம் அவனுடையதாகிட அவன் நித்திய கனிகள் கொடுக்கும் ஒரு புனித விருட்சமாக இருந்திட வேண்டும்
மானிட உலகின் உண்மையான கனி என்றும் நிலையானது, அது கடவுள் மீதான அன்பே ஆகும், அது கடவுளைப் பற்றிய அறிவாகும், அது மானிடத்திற்கான சேவையாகும், அது மனிதகுலம் முழுமைக்குமான அன்பாகும், அது மானிட உலகின் – முழுநிறைவான மேம்பாடான – லௌகீக மற்றும் ஆன்மீக மேம்பாட்டிற்காக முயற்சிப்பதும் போராடுவதுமாகும். இதுவே என்றும் நிலையான கனியாகும். இதுவே தெய்வீகச் சுடரொளியாகும். இதுவே தெய்வீகக் கொடையாகும். இதுவே என்றும் நிலையான வாழ்வாகும்.
போதனைகள் நீண்டவை, ஆனால் அவற்றை நான் சுருங்கக் கூறியுள்ளேன், மற்றும் அடிப்படைகளாகிய, இச்சுருக்கவுரைகளின் மூலம், நீங்கள் போதனைகள் முழுமையையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
இறைவன் போற்றப்படுவாராக! நாம் இங்கு கூடியுள்ளோம், மற்றும் கடவுளின் அன்பே நமது ஒன்றுகூடலுக்கான காரனமும் ஆகும். இறைவன் போற்றப்படுவாராக! இதயங்கள் ஒன்றுக்கொன்று அன்பு செலுத்துகின்றன, தெய்வீகக் கதிரொளி பிரகாசிக்கின்றது. இதயங்கள் நெகிழ்வுறவும், ஆன்மாக்கள் ஈர்ப்புறவும், யாவறும் பஹாவுல்லாவின் போதனைகளுக்கு ஏற்ப செயல்படவும் நான் நம்பிக்கைக் கொண்டுள்ளேன்.
(ஓக்லன்ட், கலிஃபோர்னியாவில் திருமதி ஹெலன் கூடாலின் இல்லத்தில், 3 அக்டோபர் 1912ல் அப்துல் பஹா ஆற்றிய உரை; Star of the West, vol. 4, no. 11, September 27, 1913)