“இது நிறுத்தப்பட வேண்டும்”: ஈரான் நாட்டில் பஹாய் எதிர்ப்பு பிரச்சாரம் தீவிரமடைகிறது; உலகளாவிய கண்டனக்குரல் எழுந்துள்ளது



8 அக்டோபர் 2021


BIC GENEVA, (BWNS) – சமீபத்திய மாதங்களில், ஈரானிய அரசாங்கத்தின் பல தசாப்தங்களான ஈரான் பஹாய்களுக்கு எதிரான அவதூறு பேச்சு மற்றும் பிரச்சாரம் புதிய மட்டங்களை எட்டியுள்ளது, இது அதிநவீனத்துவம் மற்றும் அளவு இரண்டிலும் அதிகரித்து வருகிறது. பஹாய் சமூகத்தை தீயவர்களாக்குவதற்கான விரிவாக்க மூல உபாயம் நூற்றுக்கணக்கான வலைத்தளங்கள், இன்ஸ்டாகிராம் கணக்குகள், டெலிகிராம் சேனல்கள் மற்றும் கிளப்ஹவுஸ் அறைகள் ஆகியவற்றின் வளர்ந்து வரும் மற்றும் ஒருங்கிணைந்த வலையமைப்பில் பிரதிபலிக்கப்படுகின்றது.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பஹாய் சர்வதேச சமூகத்தின் (BIC) பிரதிநிதி டயான் அலாய் கூறுகையில், “அவதூற்று பேச்சால் தூண்டப்பட்ட கடுமையான குற்றங்கள் மூலம் பாதிக்கப்பட்டோரினால் வரலாறு நிரம்பியுள்ளது. “பஹாய்களைக் குறிவைத்து தவறான தகவல்களின் பரவலானது அவர்களுக்கு எதிராக நடத்தப்படும் துன்புறுத்தல்களில் கடுமையான அதிகரிப்புக்கு ஒரு சமிக்ஞையாக இருக்கக்கூடும் என நாங்கள் அஞ்சுகிறோம்.”

நேற்று BIC வெளியிட்ட ஒரு வீடியோ, ஈரான் பஹாய்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மீதான உலகளாவிய எதிர்ப்புக்குரலில் மக்களை சேர்ந்துகொள்ளும்படி அழைக்கின்றது.

அரசாங்க அதிகாரிகள், மனித உரிமை ஆர்வலர்கள், மதப் பிரமுகர்கள் மற்றும் பிற முக்கிய நபர்கள் அரசு நிதியுதவி அளிக்கும் பஹாய் எதிர்ப்புப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவது குறித்து எச்சரிக்கை எழுப்புகின்றனர். ஏனெனில், மனித உரிமைகளின் வெளிப்படையான மீறல்கள் பெரும்பாலும் வெறுப்பூட்டும் மற்றும் தவறான தகவல்களின் சூழலில்தான் நடைபெறுகின்றன என்பதை வரலாறு சுட்டிகாட்டுகிறது.

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கெர்ரி டியோட்டே இவ்வாறு கூறுகிறார்: “உலகில், ஈரான் நாட்டு பஹாய் சமயத்தினர் துன்புறுத்தப்படுவதைப் பற்றி அக்கறை கொண்ட பலரின் குரலோசையில் நான் என் குரலையும் சேர்த்திட விரும்பினேன். மத சுதந்திரம் என்பது நாகரிகத்தின் மிக அடிப்படையான அம்சங்களில் ஒன்றாகும். பஹாய்கள் மீதான இந்த மத ரீதியான துன்புறுத்தல் நிறுத்தப்பட வேண்டும்.”

கனடா முழுவதிலும் உள்ள நூறாயிரக்கணக்கான யூத கெனேடியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் CIJA, ஈரானின் சமீபத்திய நிலைகள் குறித்து மிகுந்த கவலையை வெளிப்படுத்தும் ஓர் அறிக்கையை வெளியிட்டது. “யூதர்கள் எனும் முறையில், ஒரு முழு சமூகத்திற்கும் எதிராக பொய்கள் மற்றும் கட்டுக்கதைகளை இடைவிடாமல் மீண்டும் மீண்டும் பரப்புவதன் கொடிய விளைவுகளை நாங்கள் அறிவோம். கட்டுப்படுத்தப்படாவிடில், ஈரானிய ஆட்சியின் பொய்பரப்புரைகள் பஹாய்கள் தங்கள் சொந்த நிலத்திலேயே அந்நியர்கள் மற்றும் அவர்கள் பாரபட்சம், வன்முறை ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் எனும் எண்ணத்தைத் தூண்டிவிடும்.

“இது நிறுத்தப்பட வேண்டும். பஹாய்களுக்கு எதிராக, குற்றம் ஏதும் செய்யாத நிலையில், அவர்களைத் தண்டனைக்கு உட்படுத்தும் எண்ணற்ற மனித உரிமை மீறல்களுக்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டும் என்பதில் கெனடாவும் தனது பங்கை ஆற்றிட வேண்டும்.”

ஐக்கிய அமெரிக்காவில், இன்று நடைபெற்ற விசாரணையில் ஈரானில் பஹாய்களின் நிலை குறித்து சாட்சியமளிக்க பஹாய் சமூகத்தின் பிரதிநிதியைக் காங்கிரஸின் மனித உரிமை ஆணையம் அழைத்துள்ளது.

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் (USCIRF) தலைவரான நடீன் மென்ஸா கூறுவதாவது, “ஈரான் அரசு தான் நிதியுதவி வழங்கும் ஊடகங்களில் பஹாய்களுக்கு எதிரான தூண்டுதலை விரிவுபடுத்தியுள்ளது என்ற செய்தியால் நாங்கள் திடுக்கிடுகிறோம். ஈரான் நாடு, அந்நாட்டில் பஹாய்கள் மற்றும் பிற சிறுபான்மை மதத்தினருக்கு மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். ”

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள கிறிஸ்தவ-முஸ்லீம் உறவுகளுக்கான கத்தோலிக்க கொலம்பன் மையத்தின் இயக்குனர் ரெவ். டாக்டர் பேட்ரிக் மெக்னெர்னி கூறுவதாவது, “சமீபமாக, ஈரானில் பஹாய்களுக்கும் அவர்களது மதத்திற்கும் எதிரான வெறுப்புப் பேச்சு மற்றும் வெறுப்பைத் தூண்டிவிடுவது குறித்து நான் எனது கண்டனத்தை தெரிவிக்கின்றேன். சரித்திரம் மீண்டும் திரும்பவும் நிகழ வேண்டாம். பஹாய்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை நிறுத்துங்கள். வெறுப்புக்கு பதிலாக, அங்கு மரியாதை, கருணை, அன்பு ஆகியன நிலவட்டும். ”

1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் பஹாய்களுக்கு எதிரான ஈரானிய அரசாங்கத்தின் தாக்குதலில் பொய் தகவல்களைப் பரப்புவது ஒரு முக்கிய ஆயுதமாகும். பஹாய்களைத் தீயவர்களாக்குவதும், அச்சமூகத்தின் மீது பொது வெறுப்பைத் தூண்ட முயல்வதும் இதன் குறிக்கோளாகும். அதன் மூலம் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. இது வரலாறு முழுவதும் அடக்குமுறையைக் கையாளும் அரசாங்கங்களால் பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான தந்திரமாகும்.

இந்த மோசமான மற்றும் தொடர்ச்சியான பிரச்சார சூழல் நிலவியபோதிலும், ஈரானில் உள்ள பஹாய்களுக்கு இந்த அறிக்கைகளுக்கு எதிராக சட்டப்பூர்வமாக மேல்முறையீடு செய்ய உரிமை இல்லை அல்லது நாட்டின் எந்தவொரு ஊடகத்திலும் தங்கள் சொந்த குடிமக்களுக்கு பதிலளிப்பதற்கும் தங்கள் சொந்த வழக்கை முன்வைப்பதற்கும் அவர்களுக்கு அனுமதி இல்லை. அவை அனைத்தையும் அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளது.

ஈரான் பஹாய்களின் வலைத்தளத்தில் ஒரு புதிய நுண்தளமான ராஸ்டி (உண்மை) என்ற பெயரில் சுதந்திரமான மூலாதாரங்களை வழங்குவது உட்பட துல்லியமான தகவல்களை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இது ஈரான் பஹாய்களைக் குறிவைத்து பிரச்சார இயந்திரங்களால் உருவாக்கப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தவறான தகவல்களுக்கு பதிலளிக்கும் முயற்சியாகும்.

BIC’யினால் நேற்று வெளியிடப்பட்ட ஒரு வீடியோ, ஈரானில் பஹாய்கள் துன்புறுத்தப்படுவது தொடர்பாக உலகளாவிய கூக்குரலில் சேருமாறு மக்களுக்கு அழைப்புவிடுத்து, #StopHatePropaganda எனும் ஹேஷ்டேக்கை ட்விட்டரில் அறிமுகப்படுத்தியது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1519/