வள்ளலார் வரலாறு, ஒரு பஹாய் கண்ணோட்டம்-1


வள்ளலார் வரலாறு, ஒரு பஹாய் கண்ணோட்டம்

பஹாவுல்லா அருளிய ஹிக்மத் நிருபத்தில் அவர் கூறுவதாவது:

“ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பங்கு விதித்துள்ளோம், ஒவ்வொரு விசேஷத்திற்கும் எமது பகிர்ந்தளிக்கப்பட்ட பகுதி, ஒவ்வொரு கூற்றுக்கும் எமதுவிதிக்கப்பட்ட நேரம் …ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரு தகுந்த கருத்து”

மேலும் …

“ஒவ்வொரு மண்ணிலும் ஓர் அறிவொளியை நிர்மாணித்துள்ளோம், முன் விதிக்கப்பட்ட நேரம் நேரிடும் போது, எல்லாம் அறிந்தவரும் சர்வ ஞானியுமான இறைவன் ஆணையால் அது அதன்கீழ்வானத்திற்கு மேல் பிரகாசிக்கும்”.

இதே விஷயத்தை கடந்த கால சமயங்களில்:

“அவர் நாளில் இவ்வுலகில், ஒவ்வொரு சமயத்திலும், ஒவ்வொரு மக்களிலும், ஒவ்வொருமொழியிலும், ஒவ்வொரு இனத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் புனித ஆன்மாக்கள் தோற்றுவிக்கப்படுவார்கள்”

எனக் கூறப்பட்டுள்ளது.

வள்ளலாரின் கையெழுத்து

இறைவனின் சமயம் இப்பூமியில் தோன்றும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மேற்குறிப்பிட்ட அறிவொளிகள் இப்பூமியில் உதித்திடக் காணலாம். உதாரணமாக சைவசமய குறவர் நால்வருள் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர், மற்றும் சுந்தரமூர்த்தி ஆகியோர் தோன்றிய ஏழாவது நூற்றாண்டு இப்பூமியில் இஸ்லாம் சமயம் ஒளிவிட ஆரம்பித்த காலகட்டம் என உணரலாம். இவ்வாறே பஹாய்சமயம் தோன்றிய காலகட்டத்தில் இந்தியாவில் தோன்றிய அறிவொளிகள் பலருள் வள்ளலார் ராமலிங்க பிள்ளையவர்களும் ஒருவராவார்.

வள்ளலார் பெயரை அறிந்த அளவு மக்கள் அவர் போதனைகள் அறிவார்களா என்பதுசந்தேகமே. அவரை ஒரு சீர்திருத்தவாதியாகவும், புரட்சியாளராகவும் கண்டனர் . ஆனால் இப்பூமியில் அவர் தோன்றிய உண்மையான நோக்கத்தை அந்நேரமும் சரி இந்நேரமும் சரி புறிந்தவர்கள் வெகு சிலரே. பஹாய்களின் கருத்து யாதெனில், அவர் தமிழ் நாட்டில் தோன்றியதன் முக்கிய நோக்கம், “அருட்பெருஞ்சோதி” என்னும் நாமத்திற்கு உரிய கடவுள் அவதாரமான ஒருவரின் வருகைக்காக மக்களைத் தயார் செய்வதே என்பதாகும்.

ஒரு வகையில் “அருட்பெருஞ்சோதி” என்னும் திருநாமம் வள்ளலார் இறைவனுக்கு அளித்த வேறொரு பெயரைப்போல் தோன்றினாலும், ஆழ்ந்து பார்க்கும் போது அது தனித்த ஒரு கடவுளின் அவதாரத்தை குறிக்கின்றது என்பதைக் காணலாம். ஆனாலும் மற்ற அவதாரங்களைப் போல் இல்லாமல் இறைவனே இப்பூமிக்கு வருகையளிப்பதைப் போலும் வள்ளலார் குறிப்பிடுகிறார்.

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே யபிமானித் தலைகின்ற வுலகீர்
அலைந்தலைந்து வீணேநீ ரழிதலழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே
நிருத்த மிடும்தனித்தலைவ ரொருத்தரவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணமிது கூவுகின்றே னுமையே.

இப்பாடலிலிருந்து இவ்வுலகில் ஏதோ மிகவும் விசேஷமான நிகழ்வு ஒன்று நடைபெறப்போவதை வள்ளலார் முன்கூறுவதை நம்மால் உணர முடிகின்றது.

வள்ளலார் பிறந்த வீடு – மருதூர்

பள்ளிச் செல்லா வள்ளலார் தமிழ் மொழியிலும் வடமொழியிலும் புலமைப் பெற்றரவராய்த் திகழ்ந்ததோடு ஹிந்து சமய, முக்கியமாக சைவ சமய வித்தகராகவும் விளங்கினார். அவர் போதனைகளைக் கண்ணுறுபவர்கள் அவற்றில் “அனைத்துலக சகோதரத்துவம், இறந்தோர் உயிர்பெறுதல், ஆண் பெண் சமத்துவம்” போன்ற கோட்பாடுகளைக் காணலாம். இவை சாதி சமய வித்தியாசங்களால் பீடிக்கப் பட்ட, பெண் என்பவள் ஆணுக்கு அடிமை, அதற்கு மேல் கனவனே கண்கண்ட தெய்வம் எனவும் நம்பிய ஒரு சமூகத்துக்குப் போதிக்கப்பட்டவையாகும். இதற்கும் மேற்பட்டு கணக்கிலடங்கா போதனைகளை வள்ளலார் வழங்கியுள்ளார். இவரால் போதிக்கப்பட்ட சமூகமானது அவர்களின் கண்முன்னே இராமலிங்கர் இருந்தும் அவர் வாழ்ந்த காலத்தின் உண்மையை, அவரது மகிமையை, அறிவதில் அவரை விட்டு வெகு தூரத்தில்தான் இருந்தனர்.

இளமைக் காலம்

வள்ளலார் 1823ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவராவார். பிறந்த ஊர் தென் ஆர்க்காட்டைச் சேர்ந்த மருதூர். அவர் தகப்பனார் பெயர் ராமையா பிள்ளை, அம்மா சின்னமாள். சின்னம்மாள் ராமையா பிள்ளைக்கு ஆறாவது மனைவியாவார் மற்ற ஐந்து மனைவியரும் பிள்ளைச் செல்வம் இல்லாமலேயே இறந்தனர்.

இராமலிங்கர் பிறப்பதற்கு முன் ஒரு நாள் உணவு கேட்டு வந்த சிவனடியார் ஒருவர் பசியாறிய பின், சின்னம்மாளிடம் “எம் பசி போக்கினை, உலகத்தோர் பசி போக்கவும் ஞான வழிகாட்டவும் பிள்ளை ஒருவன் பிறப்பான்” எனக் கூறிச் சென்றார்.

இராமலிங்கர் கைக்குழந்தையாக இருந்த போது சிதம்பரம் கோயில் தரிசனத்திற்கு அழைத்துச் சென்றனர் பெற்றோர் . பிரஹாரங்களாகச் சுற்றி வந்து சிதம்பர ரகசியம் முன் நின்றனர். அப்போது குழந்தை இராமலிங்கர் வாய்விட்டுச் சிரித்தார். இதைக் கண்ட தீட்சிதர் குழந்தைக்கு இறைவன் காட்சியளித்தான் எனக் கூறியதாக வழக்கம் ஒன்று உண்டு.

தமிழ் நாட்டில் சிதம்பரம் சிவன் கோயில் மிகவும் முக்கியமானது. பல பாடல்கள் பெற்ற தலம். முக்கியமாக பதாஞ்சலி போன்றோரால் பாடப்பெற்ற தலம். இக்கட்டுரைக்கு மிகவும் நெருக்கமானதனால் அக்கோவிலைப் பற்றி சிறிது அறிந்து கொள்வது முக்கியம்.

சிதம்பரம் சிவன் கோவில்.

முற்காலத்தில் பொண்ணால் வேயப்பட்ட சிதம்பரம் கோவிலின் கூரை ஒன்று

இங்கு தமிழகக் கோயில்களில் சிதம்பரம் சிவன் கோயிலே பழமையானதும் முதன்மையானதும் ஆகும். சோழ மன்னர்களுள் ஒருவரான பராந்தக சோழன் இக்கோவிலுக்கு பொற்கூறை வேய்ததாக சரித்திரம் கூறுகிறது. இக்கோயில் சிறு செங்கற் கோயிலாக இருந்து பின்னாளில் கருங்கற் கோயிலானது. திருமுறைகள் ஓதும்போது சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் “திருச்சிற்றம்பலம்” என்று தொடங்கி அதே விதமாக முடிப்பார்கள். திருமுறைகளை எழுதும்போதும் அதே விதமாக எழுதுவதும் பழக்கம். அதேபோன்று, இராமலிங்கரும் தமது படைப்புகளில் இதே வார்த்தையை முன் வைத்து எழுதக் காணலாம். இறைவன் இங்கு உருவம், அருவம் , அருவுருவம் என மூன்று வகையாக வழிபடப்படுவது இக்கோயிலின் முக்கிய சிறப்பாகும். உருவமாக நடராஜரும், அருவமாக “சிதம்பர ரகசியம்” எனவும், அருவுருவமாக லிங்க ரூபமாகவும் வழிபாடு நடக்கும். மற்றுமொரு சிறப்பெனப்படுவது கோவிந்தராஜர் சிலையும், அதாவது வைஷ்ணவ சமயக்கடவுளுக்கும், இங்கு இடமளித்திருப்பதாகும். சைவ சமய மறைகளான திருமுறைகளின் மூல ஏடுகள் பல நூற்றாண்டுகள் இக்கோவிலிலேயே வைக்கப்பட்டிருந்ததெனவும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வள்ளலார் இக்கோவிலுக்கு ஈர்க்கப்பட்டதன் காரணத்தை விளக்கவே இவ்விஷயங்கள் இங்கு குறிப்பிடப்படுகின்றன.

இராமலிங்கர் ஆறு மாதக் குழந்தையாக இருக்கும் போதே தமது தந்தையை இழந்துவிடுகின்றார். தாயார் சின்னம்மாள் குடும்பத்தைப் பொன்னேரி என்னும் தமது பிறந்த ஊருக்கு அழைத்துச் சென்று பிறகு சிறிது நாட்களில் சென்னை நகருக்குக் குடிபெயர்ந்தார். தகப்பனை இழந்த குடும்பத்தை அண்ணன் சபாபதி பிள்ளையே பொறுப்பேற்று நடத்தி வந்தார். சபாபதி புராண சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவர். அதனாற் கிடைத்த வருவாயே குடும்பத்தை நடத்த ஏதுவாயிருந்தது. ராமலிங்கருக்கு ஐந்து வயதான போது பள்ளிக்கு அனுப்ப முயன்றார் தமையனார். ஆனால் சிறுவராயிருந்த ராமலிங்கரின் நாட்டம் பள்ளிப் படிப்பில் அல்லாது கோயில் குளங்களைச் சுற்றி வருவதிலேயே இருந்தது. தமையனார் பாடம் போதித்த போதெல்லாம் அவர் கவனமெல்லாம் எங்கோ வெகு தொலைவில் இருந்தது. தமையனார் படிக்கச் சொன்ன பாடங்களை விட்டு வேறு புத்தகங்கள் அதுவும் நினைத்த போதுதான் படிப்பார். அதனால் மிகவும் கவலையுற்ற சபாபதி தம் மனைவியை அழைத்து தம் பேச்சைக் கேட்டாலொழிய தம்பிக்கு சாப்பாடு போட வேண்டாமென்றார். அதை மீறினால் இருவருமே வீட்டைவிட்டு வெளியே போகலாமெனவும் கூறிவிட்டார். அண்ணியோ கணவருக்குத் தெரியாமல் ராமலிங்கருக்குத் தினமும் உணவளித்து வந்தார்.

இவ்விதமாகப் பல நாள் சென்று ஒரு நாள் வீட்டில் நடந்த எதோவொரு விருந்தின் போது யார் யாரோ வந்து உணவருந்திச் செல்கின்றனரே ஆனால் தம் மைத்துனர் திருடனைப்போல் வந்து சாப்பிட்டுச் செல்கின்றாரே என ராமலிங்கரின் அண்ணியார் மிகவும் மனம் வருந்தி கண்ணீர் சிந்தினார். திருட்டுத்தனமாக உணவருந்த வந்த ராமலிங்கர் அதைக் கண்ணுற்று மனம் மிகவும் வருந்தியவராக, அண்ணியாரின் விருப்பம் என்னவென வினவினார். உன் தமையனார் விருப்பம் போல் கல்வி கற்று நீ தேற வேண்டும் என்று அவர் கூறினார். அதற்கு சரி என ஒப்புக்கொண்டார் ராமலிங்கர்.

(தொடரும்…)