அப்துல்-பஹா: உயிர்த்தியாகியின் கீதம்


The_Seven_Martyrs_of_Tehran
உயிர்த்தியாகம்

அப்துல் பஹா நியூ ஜேர்ஸியில் உள்ள மொன்ட்கிலேருக்குப் பயணம் செய்தார். நியூ யார்க் நகரின் கோடைக்காலத்தின் தகிக்கும் காற்று மிகவும் சோதிப்பதாகவும் அப்துல்-பஹாவின் உடலைப் பெரிதும் பாதித்தும் இருந்தது. ஆகவே, மொன்ட்கிலேர் பயணம் அவசியமாகியது, ஆனால் அவர் அங்கு முழு ஓய்வாக இருந்தார் என சொல்வதற்கு வழியே இல்லை.

அவர் நியூவார்க் சென்று அன்றிரவு அங்கேயே தங்கினார். அவர் அனுதினமும் பஹாய்களையும் தேடுவோரையும் ஆர்வலர்களையும் சந்தித்தார். அவர்களின் கூட்டங்களில் அடிக்கடி உரையாற்றினார். ஒரு நாள் இயேசுநாதரின் பின்வரும் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை எடுத்துரைத்தார்: ‘தன்னுடைய சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்தொடர்வோர், என்னுடைய சீடராக முடியாது,’

அதன்பின் அவர் பாப்’இகள் பற்றியும் பஹாய் உயிர்த்தியாகிகள் குறித்தும், குறிப்பாக மிர்ஸா அப்துல்-வஹ்ஹாப்-இ-ஷிராஸி குறித்தும், உரையாற்றினார். இவ்விளைஞன் பஹாவுல்லாவை ஒருமுறைதான் சந்தித்திருந்தான், ஆனால் அவர்பால் மிகுந்த பற்றுக்கொண்டு, யாவற்றையும் துறந்து, அவரைப் பின்பற்றி திஹரான் நகர் சென்று, அங்கு நாஸிரிடின்-ஷா மீது நடந்த கொலை முயற்சியின் பயனாக பாப்’இகளுக்கு வலைவீசிக்கொண்டிருந்த அதிகாரிகளின் கையில் சிக்கினான்.

தன் இதயத்தின் ஆவலை, பஹாவுல்லாவின் பிரசன்னத்தை அந்த நிலவறையில் அவ்விளைஞன் அடைந்தான்: அவனை அவனுடைய தியாகமரணத்திற்கு அழைத்துச் செல்லும் நாளன்று, அவன் முதலில் தன் தலையை பஹாவுல்லாவின் பாதங்களின்மீது வைத்து முத்தமிட்டான். பிறகு தன் சக-நம்பிக்கையாளர்களை அவன் அரவணைத்தான்.

பிரியாவிடையை இவ்வாறு பெற்றுக்கொண்டபின், அவன் களிப்பால் தன் விரல்களை நொடித்து நடனமாடிக்கொண்டே அந்த நிலவறையை விட்டகன்று தியாகமரணத்தின் கரங்களில் சரணடைந்தான். அப்துல்-பஹா கூறிய மிர்ஸா அப்துல்-வஹ்ஹாபின் அவ்விருவிருப்பான கதையைச் செவிமடுத்துக்கொண்டிருந்தோர் மெய்மறந்து போயினர். இக்காட்சியை ஜூலியட் தோம்ஸன் நிறைவு செய்திட காண்போம்:

திடீரென அப்துல்-பஹாவின் உருவம் மாறுதலுக்குள்ளானது. அவ்வுயிர்த்தியாகியின் ஆன்மா அவருக்குள் பிரவேசித்துவிட்டது போல் தோன்றியது… உணர்வுமேலோங்கிட அவர் நிமிர்ந்த சிரசுடன், கைகள் உயர்ந்து விரல்கள் நொடிநொடிக்க வீட்டின் முன் தாழ்வாரத்தில் தமது பாதத்தால் தாளமிட அதனால் ஏற்பட்ட அதிர்வுகளைத் தாங்க முடியாமல் நாங்கள் வீற்றிருந்தோம் — அவரிடமிருந்து அத்தகையதோர் மின்சக்தி கதிர்வீசியது — நான் செவிமடுத்த எவற்றுடனும் ஒப்பிடமுடியாத புலகாங்கிதமும் கடுந்துயரமும் மிக்க உயிர்த்தியாகிகளின் பாடலை அவர் பாடினார்… எனக்கு வேறோர் உலகம் புலனாகியது — அது தெய்வீகத் துயரமெனும் இராஜ்யம்.

அவர் தமது இருக்கையில் அமர்ந்தார். என் கண்களில் கண்ணீர் சுரந்து என் பார்வையை முற்றாக மறைத்தது. கண்கள் தெளிவடைந்தவுடன் அவர் முகம் மேலும் விசித்திரமாகிவிட்டதைக் கண்டேன். அவர் கண்கள் அருவ இராஜ்யத்தின்பால் நிலைக்குத்தியிருந்தன. அவர் கண்கள் இரத்தினங்கள் போல் ஜொலித்தும் களிப்பால் நிறைந்தும் இருந்ததானது அவர் தமது அகக்கண்ணால் கண்ட காட்சி எங்களுக்கும் நிஜம்போல் தோன்றியது. அவர் உதடுகளில் மகிழ்ச்சி தவழ்ந்தது. மிகவும் மென்மையாக, ஏதோ ஓர் எதிரொலி போல், அவர் உயிர்த்தியாகிகளின் பாடலை ரீங்கரித்துக்கொண்டிருந்தார்.

‘பாருங்கள்! உலகில் ஓர் உயிர்த்தியாகியின் மரணம் எத்தகைய விளைவை ஏற்படுத்துகின்றது,’ என அவர் கூவினார், ‘அது என் நிலையையே மாற்றிவிட்டது.’

அங்குச் சற்று நேரம் மௌனம் நிலவியது; பிறகு அவர்: ‘ஜூலியட், நீ எதைப்பற்றி இவ்வளவு ஆழமாகச் சிந்தித்திக்கொண்டிருக்கின்றாய்?’ என்றார்.

‘நீங்கள் உங்கள் நிலையே மாறிவிட்டது எனக் கூறியபோது உங்கள் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றி நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன். மானிடத்திற்காக மகிழ்ச்சியோடு மரணத்தை ஏற்போர் மீது கடவுள் களிப்புணர்வின் மின்னொளியை நான் கண்டதாக சிந்தித்துக்கொண்டிருந்தேன்.

(HM Balyuzi, “‘Abdu’l-Bahá – The Centre of the Covenant of Bahá’u’lláh”, pp. 221-222)

அப்துல்-பஹா: இளைஞர் இயலாற்றல்


இளைஞர்களின் இயலாற்றல்கள் குறித்து சில சிந்தனைகள்

சிக்மன்ட் பிராய்ட்டின்பால் (Sigmond Freud) சாற்றப்படும் ஒரு தகவலை நான் சமீபத்தில் படித்தேன். அதில் வளரிளம் பருவம் என்பது ‘தற்காலிக மனநோய்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. அதிக பட்சமாக நமது கலாச்சாரம், குறிப்பாக நமது ஊடகங்கள், இளந்தாரிப் பருவத்தை வேடிக்கை மற்றும் அற்ப பொழுதுபோக்குகளுக்கான காலம் என வருணிக்கின்றன. பெரும்பாலும் இளைஞர்கள் சமுதாயத்திற்குப் பயனான வகையில் பங்களிப்பவர்களாகப் பார்க்கப்படவில்லை.

ஆனால் அப்துல்-பஹா இதை வேறு விதமாகக் காண்கின்றார். அவர் ஐக்கிய அமெரிக்காவிலும் கெனடாவிலும் இருந்தபோது, எதையுமே வெளித்தோற்றத்திற்கும் அப்பால் கண்ணுற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இளைஞர்கள் குறித்த நமது புலணுனர்வின்பால் நாம் அமல்படுத்தவேண்டிய அறிவுரையாகும் இது.

அப்துல்-பஹா 1912ல் நியூ யார்க்கிற்கு விஜயம் செய்த போது, அவர் டோரத்தி கிங் பீச்சர் என்னும் பெயர் கொண்ட ஒரு வித்தியாசமான பதிமூன்று வயது பெண்ணைச் சந்தித்தார். அப்துல்-பஹா உரையாற்றுவதைச் செவிமடுக்க டோரத்தியின் பாட்டி டோரத்தியை அழைத்துச் சென்றிருந்தார். ஆனால் டோரத்தி அச்சந்திப்பை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கவில்லை. டோரத்தி வழியெல்லாம் குதிரை வண்டியின் அடித்தளத்தை நோக்கியவாறு நேரத்தைக் கடத்தினார். பிறிதொரு காலத்தில் “அவர் என்னைப் பார்த்தால் என்ன செய்வது?” என பயந்துகொண்டிருந்ததை நினைவுகூர்ந்தார். “அவர் என்னிடம் பேசினால் நான் இறந்தே போய்விடுவேன்!” டோரத்தி சென்றடைந்தவுடன், தம் அருகே ஒரு முக்காலியில் உட்காருமாறு அப்துல்-பஹா அவருக்குச் சைகை செய்தார்; டோரத்தியின் கண்களோ தான் அணிந்திருந்த கருப்புக் காலனிகளில் நிலைக்குத்தியவாறு இருந்தன. அச்சூழ்நிலையில் டோரத்தியின் சிந்தனை வேறெங்கோ இருந்ததைப் போன்று தோன்றினாலும், உண்மையில் அது அவ்வாறு இல்லை என்பது பிறகு விளங்கியது. அங்கு அப்துல்-பஹா உரையாற்ற ஆரம்பித்தவுடன், டோரத்தி “ஐக்கியப்பட்ட அன்பில் உருவாகும் இணக்கத்திற்காக தம்முள் அடக்கமுடியாத ஒரு தீவிர உணர்வு ஏற்படுவதை உணர்ந்ததாக…” பின்னாள்களில் நினைவுகூர்ந்தார். உரை முடிவதற்குள், “தமது முழுங்கால்களின்மேல் தமது முழங்கைகளை வைத்துக்கொண்டும் தமது முகத்தை கைகளால் தாங்கியவாறும் அப்துல்-பஹாவை நோக்கியவாறும், அவர் முகத்தில் பதித்திருந்த தமது பார்வையை அகற்றமுடியாமலும் அகற்றவிரும்பாமலும்” டோரத்தி தான் அமர்ந்திருக்கக் கண்டார்.

Remembering Dorothy Baker - Baha'i Blog
டோரதி பேக்கர்

குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் இயலாற்றல்கள் குறித்து அப்துல்-பஹா பலமுறை எழுதியுள்ளார். இளமைக் காலமே “மானிட வாழ்வின் வெகு விரும்பத்தக்க காலகட்டமாக தனித்து நிற்கின்றது” என அவர் இளைமைப் பருவம் குறித்து கருத்துரைத்துள்ளார். இளைஞர்கள் தங்களின் “மேன்மையான குறிக்கோள்,” “உறுதிமனப்பான்மை, மேன்மையான சிந்தனை,” மற்றும் “தளரா உறுதி” ஆகியவற்றில் தனிச்சிறப்புற்றிருக்க வேண்டுமென அவர் இளைஞர்களிடம் கூறினார். நாம் எல்லோருமே நமது சிறு வயது முதற்கொண்டே நமது நுண்ணறிவாற்றல், ஆன்மீகத் திறனாற்றல்கள் ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்ளும் திறன் பெற்றும், நமது சமூகங்களில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தவல்லவர்களாகவும் இருக்கின்றோம் என்பது அவரின் நம்பிக்கையாகும்.

டோரத்தி அப்துல்-பஹாவைச் சந்தித்த பிறகு, அவருக்கு ஒரு கடிதம் எழுதி தாமும் அவரைப் போலவே மனிதகுலத்திற்கான ஒரு சேவைப் பாதையைப் பின்பற்ற விரும்புவதாக அவரிடம் தெரிவித்தார். அப்துல்-பஹா பின்வருமாறு பதிலளித்தார்: “என் எதிர்ப்பார்ப்பு இதுவே: நீ உன் ஆவலில் வெற்றிபெற வேண்டும்.”

பல வருடங்கள் கழித்து, வெறுமனே தன் காலனிகளை நோக்கியவாறு உட்கார்ந்திருந்த அக்கூச்சவுணர்வு கொண்டிருந்த பெண், ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, தென் மற்றும் வட அமெரிக்க கண்டங்கள் முழுவதும் பிரயாணம் செய்து ஐக்கியம் மற்றும் சேவை குறித்த பஹாய் போதனைகளைப் பற்றி எல்லா பின்னணிகளையும் சார்ந்த நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலுமான மக்களிடம் உரையாற்றினார். நாடு முழுவதும் இன ஐக்கிய நிகழ்வுகளின் ஏற்பாட்டிற்கு ஆதரவும் உதவிகளையும் வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் இன ஐக்கிய செயற்குழுவுக்கு அவர் நியமிக்கப்பட்டார். அவர் அமெரிக்க பஹாய்களின் தேசிய நிர்வாக அமைப்பிற்கு தேர்வு செய்யப்பட்டும் அதன் முதல் பெண் தலைவராகவும் செயல்பட்டார்.

நியூ யார்க்கில் 1912ம் ஆண்டில் அப்துல்-பஹாவுடனான தமது சந்திப்பை டோரத்தி பேக்கர் என்றுமே மறந்ததில்லை. “அந்த நேரத்தில் அச்சம் யாவும் மக்கள் மீதான ஒரு தாபமாக நிலைமாறியது,” என அவர் பிறகு குறிப்பிட்டுள்ளார்.

[Source: Freeman, Dorothy. From Copper to Gold: The Life of Dorothy Baker.]

அப்துல்-பஹா: ஏழைகளைப் பராமரித்தல்


“இறைவனின் முன்னிலையில் ஏழைகளைப் பற்றி சிந்திப்பதைவிட சிறப்பானது வேறு என்ன இருக்கமுடியும்? ஏனெனில் ஏழைகளே நமது தெய்வீகத் தந்தையினால் நேசிக்கப்படுகிறார்கள். இயேசு கிருஸ்து இவ்வுலகில் தோன்றியபோது, ஏழைகளும் தாழ்ந்தவர்களுமே அவர்மீது நம்பிக்கைக் கொண்டு அவரைப் பின்பற்றி ஏழைகளே இறைவனின் அருகாமையில் இருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தினர். ஒரு பணக்காரர் கடவுளின் அவதாரத்தின் மீது நம்பிக்கைக் கொண்டும் அவரை பின்பற்றவும் செய்திடும்போது, அவரது செல்வம் அதற்கு ஒரு தடையல்ல எனவும் அவர் மோட்ச கதியை அடைவதை அது தடுக்கவில்லை என்பதற்கும் சான்றளிக்கின்றது. அவர் சோதனைக்கும் பரீட்சைக்கும் உட்படுத்தப்பட்ட பிறகு, அவரது செல்வங்கள் அவரின் சமய வாழ்வில் ஒரு தடையாக இருக்கின்றனவா அல்லவா என்பது வெளிப்படும். ஆனால், ஏழைகள் கடவுளின் தனிச்சிறப்பான அன்புக்குகந்தவர்கள். அவர்களின் வாழ்வு இன்னல்கள் நிறைந்திருக்கின்றது, அவர்களின் சோதனைகள் தொடர்ச்சியானவையாக இருக்கின்றன, அவர்களின் நம்பிக்கை கடவுளில் மட்டுமே இருக்கின்றது. ஆகவே, நீங்கள் முடிந்தவரை, உங்களைத் தியாகம் செய்தாவது ஏழைகளுக்கு உதவ வேண்டும். கடவுளின் முன் ஏழைகளுக்கு உதவும் செயலைவிட மனிதனால் ஆற்றப்படும செயல்கள் எதுவுமே பெரியதல்ல. ஆன்மீகச் சூழல்கள் லௌகீக பொக்கிஷங்களைப் பெற்றிருப்பதிலோ அவற்றின் இல்லாமையையோ சார்ந்திருக்கவில்லை. ஒருவர் லௌகீக ரீதியில் வறியநிலையில் இருக்கும்போது, அவர் மனதில் ஆன்மீக எண்ணங்களே மேலோங்கியிருக்கும். ஏழ்மை இறைவனின்பாலான ஒரு தூண்டுகோலாகும். நீங்கள் ஒவ்வொருவரும் ஏழைகளின்பால் பெரிதும் இரக்கம்கொண்டு அவர்களுக்கு உதவிட வேண்டும். அவர்களுக்கு உதவிடுவதற்காகவும் அவர்களின் ஏழ்மையின் அதிகரிப்பை தடுத்திடவும் முயற்சிகள் மேற்கொள்ளுங்கள். சிலர் கோடீஸ்வரர்களாகவும் பலர் வறியோராகவும் இருப்பதைத் தடுத்திடும் வகையில் சமூகத்தின் சட்டங்கள் தக்க முறையில் இயற்றப்படவும் அமல்படுத்தப்படவும் வேண்டும். மனித சமுதாயத்தில் வாழ்வாதாரத்திற்கான வழிகளை ஒழுங்குப்படுத்துவது பஹாவுல்லாவின் போதனைகளுள் ஒன்றாகும். இத்தகைய ஒழுங்கினால் மனிதர்களின் வாழ்வில் செல்வம், தாரகம் இரண்டிற்கிடையில் அகன்ற இடைவெளி இருக்காது. ஓர் இராணுவத்தில் தளபதி, அதிகாரிகள் மற்றும் தரைப்படையினர் இருப்பது போன்று சமூகத்திலும் நிதியாளர், விவசாயி, வணிகர், தொழிலாளி ஆகியோர் தேவைப்படுகின்றனர். எல்லாருமே தளபதிகளாக இருக்கமுடியாது; எல்லாருமே தரைப்படையினராக இருக்கவும் முடியாது. சமூக அமைப்பில் அவரவர் ஸ்தானத்தில் ஒவ்வொருவரும் திறன்வாய்ந்தவர்களாக இருக்கவேண்டும் — ஒவ்வொருவரும் தமது ஆற்றலுக்கு ஏற்ப கடமையாற்றவேண்டும் ஆனால், எல்லாருக்குமே நீதியும் வாய்ப்புக்களும் கிடைக்கவேண்டும்.

மனிதர்களுக்கிடையில் ஆற்றல்கள் குறித்த வேறுபாடுகள் இயல்பானவையாகும். எல்லோருமே ஒரே மாதிரியாகவும், சமமாகவும், விவேகத்துடனும் இருப்பது இயலாலததாகும். வேறுபடும் மானிட திறனாற்றல்களின் சரிப்படுத்தலை சாதிக்கக்கூடிய கோட்பாடுகளையும் சட்டங்களையும் பஹாவுல்லா வெளிப்படுத்தியுள்ளார். மானிட நிர்வாகத்தில் சாதிக்கப்படக்கூடிய அனைத்தும் அவரது கோட்பாடுகளின் வாயிலாக செயல்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்….

…அதே போன்று, செல்வந்தர்கள் ஏழைகளுக்குத் தாராளமாக வழங்கிட வேண்டுமேன பஹாவுல்லா ஆணையிட்டுள்ளார். குறிப்பிட்ட வருமானமுடையோர் அதிலிருந்து ஐந்தில் ஒரு பகுதியை விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்த இறைவனுக்கு வழங்கிட வேண்டும் என கித்தாப்-இ-அக்டாஸ் திருநூலில் அவரால் மேலும் பதிக்கப்பட்டுள்ளது.

(Adapted from – The Promulgation of Universal Peace July 1, 1912, Talk at 309 West Seventy-eighth Street, New York. Notes by Howard MacNutt)

வள்ளலார் வரலாறு, ஒரு பஹாய் கண்ணோட்டம் – 2


வள்ளலார் வரலாறு, ஒரு பஹாய் கண்ணோட்டம் – 2

இராமலிங்கர் ஆரம்பத்தில் எழுப்பிய எட்டு பக்கங்கள் கொண்ட ஞானசபை

கவ்வி கற்க ஒப்புக்கொண்டாலும் இராமலிங்கர் தாம் விரும்பியபடிதான் கல்வி கற்பேன் எனக் கூறினார். தமது அறையில் ஒரு நிலைக்கண்ணாடியும், தமக்குத் தேவையான பொருட்களும் சேகரித்துக்கொண்டு தினமும் தாமே சுயமாக கல்வி கற்கலானார். தமது தனி அறையில் தினமும் இறைவனைத் தியானித்து, இறைவனே தமக்கு முன் தோன்றி அறிய வேண்டிய அனைத்தையும் தமக்குக் கற்பிக்க வேண்டும் என அவர் மனமுருகி மன்றாடியதாகவும், பிறகு இறைவன் கண்ணாடியில் தோன்றி அவற்றைக் கற்பித்ததாகவும் வரலாறு கூறுகிறது. இதை:

ஓதா துணர்ந்திட ஒளி அளித் தெனக்கே
ஆதாரம் ஆகிய அருட்பெருஞ் ஜோதி………

எனத்தொடங்கும் பாடலில் குறிப்பிடுகிறார் .

இராமலிங்கருக்கு அப்போது 9 வயது. ஒரு மாபெறும் மாற்றம் இதிலிருந்து இராமலிங்கரிடம் காணப்படுகின்றது; அவரது அண்ணனாகிய சபாபதிப் பிள்ளையும் இதனால் மிகுந்த மகிழ்ச்சியுறுகின்றார்.

ஞான சபையின் தற்போதைய தோற்றம்

இராமலிங்கரின் ஆற்றல்கள் வெளிப்பட ஏதுவான ஒரு நிகழ்ச்சி அச்சமயம் நடந்தது. சபாபதி பிள்ளை புராணச் சொற்பொழிவுகளால் பொருளீட்டி குடும்பத்தைக் காத்து வந்தார் என ஏற்கனவே அறிந்தோம். அவர் தமது சொற்பொழிவுக்கு உதவியாளராக ஒரு பெண்ணை அமர்த்தியிருந்தார். ஒருமுறை அப்பெண் உடல் நலமற்று இருந்ததால் இராமலிங்கரே உதவிக்குச் செல்ல வேண்டியதாக அமைந்தது. சிறிதும் அனுபவமில்லாத சிறுவராய் இருந்த இராமலிங்கர் திறம்பட வாசித்து தம் தமையனாருக்கு உதவியதோடு, அங்கு குழுமியிருந்த அனைவருடைய பாராட்டையும் பெற்றார். மற்றொரு சமயம் சபாபதி பிள்ளைக்கு உடல் நலமில்வாமல் போனபோது இராமலிங்கரே சொற்பொழிவாற்றினார். அவருக்கு அப்போது வயது 12க்கும் குறைவாகும். இதனால் இராமலிங்கர் மக்கள் மத்தியில் மிகவும் மதிக்கப்படலானார். அவர் தமையனாரே இராமலிங்கரிடம் மிகுந்த மரியாதை கொண்டு நடக்கலானார். இதனால் மிகவும் கூச்சப்பட்டு இராமலிங்கர் கோயில் போகிறேன் குளம் போகிறேன் என்று கிளம்பிவிடுவாராம். இந்நேரம் நண்பரொருவரோடு துறவு பூண்டதாகவும் ஆனால் இது இறைவனுக்கு உகந்ததல்ல என்று அதனைக் கைவிட்டதாகவும் கூறுகிறார்.

இனஞரான இராமலிங்கர் பெரும்பாலும் கோவில் யாத்திரைகளிலும் அங்குள்ள தெய்வங்களைத் தரிசிப்பதிலுமே நாட்டமாய் இருந்தார். ஒரு புனிதமான மனிதர் என்ற முறையில் அவரைச் சுற்றி ஒரு சீடர் கூட்டமும் உருவாயிற்று. அவருக்கு 26 வயதான போது தொழுவூர் வேலாயுதமெனும் ஒருவர் இராமலிங்கரின் சீடராகும் ஆவலில் அவரை வந்தடைந்தார். இராமலிங்கரை சோதிக்க எண்ணி அவரிடம்
இவர் ஒரு செய்யுளைக் கொடுத்து அதற்கு ஐந்து விளக்கங்களைக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இராமலிங்கரோ அதற்கு 9 விளக்கங்களைக் கொடுத்து பிரமிக்க வைத்தார். அதுமுதல் வந்தவர் சாகும் வரை இராமலிங்கருக்கு சீடராகவும் நண்பராகவும் இருந்துவந்தார்.

இராமலிங்கரைப் பற்றி வேலாயுதம் குறிப்பிடுகையில்: அவர் அதிகம் சாப்பிடுவதில்லை, நோன்பு இருக்கும் போது சிறிது வெந்நீரில் சர்க்கரை கலந்து குடிப்பதோடு சரி. நடக்கும் போது அடக்கமாக நடப்பார். அதிர்ந்து பேச விரும்பமாட்டார், நீண்ட தூக்கம் கொள்ளவும் மாட்டார். சதா கருணை ததும்பும் முகத்தில் ஏதோவொரு சோகம் இருக்கும்.

அவர் பல அதிசயங்கள் புரிந்ததாக பலரும் குறிப்பிடுவர் , ஆனால் இராலிங்கர் அவற்றை மறுப்பார். உடல் நோய்களை தமது சித்த வைத்திய முறையில் குணப்படுத்துவதில் வல்லவர். பித்தளையை தங்கமாக மாற்றும் வித்தையை அறிந்திருந்தும் அதைக் கொண்டு பொருள் ஈட்டப் பயன்படுத்தியதில்லை. அதைக் கற்க விரும்புவோர் முதலில் தங்களின் ஆசைகளைத் துறந்து வரும்படி உபதேசிப்பார்.

சன்மார்க்க சங்கம் நிறுவியது

1865ல் இராமலிங்கர் சன்மார்க்க சங்கமென்று ஒரு சங்கத்தை நிறுவினார். இச்சங்கத்திற்கு இறைவனே தலைவரெனவும் தாம் அதன் முதல் அங்கத்தினர் எனவும் அறிவித்தார். இச்சங்கம் இறைவனால் வரையப்பட்டதென்றும் தாம் அதை நிறுவுவதற்கான வெறும் கருவி மட்டுமே என்றார்.இச்சங்கத்தின் குறிக்கோள்கள் மனிதரை சாகா நிலைக்கு வழிகாட்டுவதோடு மரணமில்லாப் பெருவாழ்வை அடையச்செய்வதற்கு மார்க்கம் என்று குறிப்பிடுகிறார் .

சன்மார்க்கம் என்பது இறைவனை அடைவதற்கான நான்கு மார்க்கங்களில் நான்காவது மார்க்கமாகும். முதல் மார்க்கம் இறைவனை உருவமாகவும், இரண்டாவது அருவுருவமாகவும், மூன்றாவது அருவமாகவும் நான்காவது மேற்குறிப்பிட்ட மூன்று நிலைகளையும் கடந்து இறைவனை யாவற்றுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருளாய் வணங்குவது ஆகும்.

சங்கத்துக் கோட்பாடுகள்

சங்கத்தை நிறுவிய வள்ளலார் அதற்கான கோட்பாடுகளாகப் பின்வருபவற்றைப் போதித்தார்:-

கடவுள் ஒருவரே

இறைவன் ஒருவரே என்று வள்ளலார் அழுத்தந்திருத்தமாக போதித்தார். பல கடவுள்கள் என்பதெல்லாம் நம் உடலுக்கு பல உயிர்கள் உள்ளன என்று கூறுவது போலாகும் என்றும், திருவருள் விளக்கமில்லாதவரே பல தெய்வங்கள் உண்டு என்பார்கள் என்றும் இராமலிங்கர் போதிக்கின்றார். இறைவன் விளக்கங்களுக்கு அப்பாற்பட்டவரென்றும் கோவில் விக்கிரகங்கள் இறைவனுடைய அருளைப் பெறுவதற்கான வெறும் சாதனங்களே என்றும் விளக்குகிறார்.

கடவுள் அருட்பெருஞ்சோதியானவர்

இறைவனுடைய குணங்களில் அவர் ஜோதிமயமானவர் என்பதே முடிவானதாகும் என்று இங்கு இராமலிங்கர் ஆழமாக போதிக்கின்றார். இதற்கென்றே ஒரு கோவிலையும் அமைத்து அருட்பெருஞ்சோதி அகவலையும் எழுதினார் ( இப்பாடல் 1588 அடிகளுக்கு மேல் கொண்ட அற்புத பாடலாகும்)

(தொடரும்)