அப்துல் பஹா நியூ ஜேர்ஸியில் உள்ள மொன்ட்கிலேருக்குப் பயணம் செய்தார். நியூ யார்க் நகரின் கோடைக்காலத்தின் தகிக்கும் காற்று மிகவும் சோதிப்பதாகவும் அப்துல்-பஹாவின் உடலைப் பெரிதும் பாதித்தும் இருந்தது. ஆகவே, மொன்ட்கிலேர் பயணம் அவசியமாகியது, ஆனால் அவர் அங்கு முழு ஓய்வாக இருந்தார் என சொல்வதற்கு வழியே இல்லை.
அவர் நியூவார்க் சென்று அன்றிரவு அங்கேயே தங்கினார். அவர் அனுதினமும் பஹாய்களையும் தேடுவோரையும் ஆர்வலர்களையும் சந்தித்தார். அவர்களின் கூட்டங்களில் அடிக்கடி உரையாற்றினார். ஒரு நாள் இயேசுநாதரின் பின்வரும் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை எடுத்துரைத்தார்: ‘தன்னுடைய சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்தொடர்வோர், என்னுடைய சீடராக முடியாது,’
அதன்பின் அவர் பாப்’இகள் பற்றியும் பஹாய் உயிர்த்தியாகிகள் குறித்தும், குறிப்பாக மிர்ஸா அப்துல்-வஹ்ஹாப்-இ-ஷிராஸி குறித்தும், உரையாற்றினார். இவ்விளைஞன் பஹாவுல்லாவை ஒருமுறைதான் சந்தித்திருந்தான், ஆனால் அவர்பால் மிகுந்த பற்றுக்கொண்டு, யாவற்றையும் துறந்து, அவரைப் பின்பற்றி திஹரான் நகர் சென்று, அங்கு நாஸிரிடின்-ஷா மீது நடந்த கொலை முயற்சியின் பயனாக பாப்’இகளுக்கு வலைவீசிக்கொண்டிருந்த அதிகாரிகளின் கையில் சிக்கினான்.
தன் இதயத்தின் ஆவலை, பஹாவுல்லாவின் பிரசன்னத்தை அந்த நிலவறையில் அவ்விளைஞன் அடைந்தான்: அவனை அவனுடைய தியாகமரணத்திற்கு அழைத்துச் செல்லும் நாளன்று, அவன் முதலில் தன் தலையை பஹாவுல்லாவின் பாதங்களின்மீது வைத்து முத்தமிட்டான். பிறகு தன் சக-நம்பிக்கையாளர்களை அவன் அரவணைத்தான்.
பிரியாவிடையை இவ்வாறு பெற்றுக்கொண்டபின், அவன் களிப்பால் தன் விரல்களை நொடித்து நடனமாடிக்கொண்டே அந்த நிலவறையை விட்டகன்று தியாகமரணத்தின் கரங்களில் சரணடைந்தான். அப்துல்-பஹா கூறிய மிர்ஸா அப்துல்-வஹ்ஹாபின் அவ்விருவிருப்பான கதையைச் செவிமடுத்துக்கொண்டிருந்தோர் மெய்மறந்து போயினர். இக்காட்சியை ஜூலியட் தோம்ஸன் நிறைவு செய்திட காண்போம்:
திடீரென அப்துல்-பஹாவின் உருவம் மாறுதலுக்குள்ளானது. அவ்வுயிர்த்தியாகியின் ஆன்மா அவருக்குள் பிரவேசித்துவிட்டது போல் தோன்றியது… உணர்வுமேலோங்கிட அவர் நிமிர்ந்த சிரசுடன், கைகள் உயர்ந்து விரல்கள் நொடிநொடிக்க வீட்டின் முன் தாழ்வாரத்தில் தமது பாதத்தால் தாளமிட அதனால் ஏற்பட்ட அதிர்வுகளைத் தாங்க முடியாமல் நாங்கள் வீற்றிருந்தோம் — அவரிடமிருந்து அத்தகையதோர் மின்சக்தி கதிர்வீசியது — நான் செவிமடுத்த எவற்றுடனும் ஒப்பிடமுடியாத புலகாங்கிதமும் கடுந்துயரமும் மிக்க உயிர்த்தியாகிகளின் பாடலை அவர் பாடினார்… எனக்கு வேறோர் உலகம் புலனாகியது — அது தெய்வீகத் துயரமெனும் இராஜ்யம்.
அவர் தமது இருக்கையில் அமர்ந்தார். என் கண்களில் கண்ணீர் சுரந்து என் பார்வையை முற்றாக மறைத்தது. கண்கள் தெளிவடைந்தவுடன் அவர் முகம் மேலும் விசித்திரமாகிவிட்டதைக் கண்டேன். அவர் கண்கள் அருவ இராஜ்யத்தின்பால் நிலைக்குத்தியிருந்தன. அவர் கண்கள் இரத்தினங்கள் போல் ஜொலித்தும் களிப்பால் நிறைந்தும் இருந்ததானது அவர் தமது அகக்கண்ணால் கண்ட காட்சி எங்களுக்கும் நிஜம்போல் தோன்றியது. அவர் உதடுகளில் மகிழ்ச்சி தவழ்ந்தது. மிகவும் மென்மையாக, ஏதோ ஓர் எதிரொலி போல், அவர் உயிர்த்தியாகிகளின் பாடலை ரீங்கரித்துக்கொண்டிருந்தார்.
‘பாருங்கள்! உலகில் ஓர் உயிர்த்தியாகியின் மரணம் எத்தகைய விளைவை ஏற்படுத்துகின்றது,’ என அவர் கூவினார், ‘அது என் நிலையையே மாற்றிவிட்டது.’
அங்குச் சற்று நேரம் மௌனம் நிலவியது; பிறகு அவர்: ‘ஜூலியட், நீ எதைப்பற்றி இவ்வளவு ஆழமாகச் சிந்தித்திக்கொண்டிருக்கின்றாய்?’ என்றார்.
‘நீங்கள் உங்கள் நிலையே மாறிவிட்டது எனக் கூறியபோது உங்கள் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றி நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன். மானிடத்திற்காக மகிழ்ச்சியோடு மரணத்தை ஏற்போர் மீது கடவுள் களிப்புணர்வின் மின்னொளியை நான் கண்டதாக சிந்தித்துக்கொண்டிருந்தேன்.
(HM Balyuzi, “‘Abdu’l-Bahá – The Centre of the Covenant of Bahá’u’lláh”, pp. 221-222)