வள்ளலார் வரலாறு, ஒரு பஹாய் கண்ணோட்டம் – 2
கவ்வி கற்க ஒப்புக்கொண்டாலும் இராமலிங்கர் தாம் விரும்பியபடிதான் கல்வி கற்பேன் எனக் கூறினார். தமது அறையில் ஒரு நிலைக்கண்ணாடியும், தமக்குத் தேவையான பொருட்களும் சேகரித்துக்கொண்டு தினமும் தாமே சுயமாக கல்வி கற்கலானார். தமது தனி அறையில் தினமும் இறைவனைத் தியானித்து, இறைவனே தமக்கு முன் தோன்றி அறிய வேண்டிய அனைத்தையும் தமக்குக் கற்பிக்க வேண்டும் என அவர் மனமுருகி மன்றாடியதாகவும், பிறகு இறைவன் கண்ணாடியில் தோன்றி அவற்றைக் கற்பித்ததாகவும் வரலாறு கூறுகிறது. இதை:
ஓதா துணர்ந்திட ஒளி அளித் தெனக்கே
ஆதாரம் ஆகிய அருட்பெருஞ் ஜோதி………
எனத்தொடங்கும் பாடலில் குறிப்பிடுகிறார் .
இராமலிங்கருக்கு அப்போது 9 வயது. ஒரு மாபெறும் மாற்றம் இதிலிருந்து இராமலிங்கரிடம் காணப்படுகின்றது; அவரது அண்ணனாகிய சபாபதிப் பிள்ளையும் இதனால் மிகுந்த மகிழ்ச்சியுறுகின்றார்.
இராமலிங்கரின் ஆற்றல்கள் வெளிப்பட ஏதுவான ஒரு நிகழ்ச்சி அச்சமயம் நடந்தது. சபாபதி பிள்ளை புராணச் சொற்பொழிவுகளால் பொருளீட்டி குடும்பத்தைக் காத்து வந்தார் என ஏற்கனவே அறிந்தோம். அவர் தமது சொற்பொழிவுக்கு உதவியாளராக ஒரு பெண்ணை அமர்த்தியிருந்தார். ஒருமுறை அப்பெண் உடல் நலமற்று இருந்ததால் இராமலிங்கரே உதவிக்குச் செல்ல வேண்டியதாக அமைந்தது. சிறிதும் அனுபவமில்லாத சிறுவராய் இருந்த இராமலிங்கர் திறம்பட வாசித்து தம் தமையனாருக்கு உதவியதோடு, அங்கு குழுமியிருந்த அனைவருடைய பாராட்டையும் பெற்றார். மற்றொரு சமயம் சபாபதி பிள்ளைக்கு உடல் நலமில்வாமல் போனபோது இராமலிங்கரே சொற்பொழிவாற்றினார். அவருக்கு அப்போது வயது 12க்கும் குறைவாகும். இதனால் இராமலிங்கர் மக்கள் மத்தியில் மிகவும் மதிக்கப்படலானார். அவர் தமையனாரே இராமலிங்கரிடம் மிகுந்த மரியாதை கொண்டு நடக்கலானார். இதனால் மிகவும் கூச்சப்பட்டு இராமலிங்கர் கோயில் போகிறேன் குளம் போகிறேன் என்று கிளம்பிவிடுவாராம். இந்நேரம் நண்பரொருவரோடு துறவு பூண்டதாகவும் ஆனால் இது இறைவனுக்கு உகந்ததல்ல என்று அதனைக் கைவிட்டதாகவும் கூறுகிறார்.
இனஞரான இராமலிங்கர் பெரும்பாலும் கோவில் யாத்திரைகளிலும் அங்குள்ள தெய்வங்களைத் தரிசிப்பதிலுமே நாட்டமாய் இருந்தார். ஒரு புனிதமான மனிதர் என்ற முறையில் அவரைச் சுற்றி ஒரு சீடர் கூட்டமும் உருவாயிற்று. அவருக்கு 26 வயதான போது தொழுவூர் வேலாயுதமெனும் ஒருவர் இராமலிங்கரின் சீடராகும் ஆவலில் அவரை வந்தடைந்தார். இராமலிங்கரை சோதிக்க எண்ணி அவரிடம்
இவர் ஒரு செய்யுளைக் கொடுத்து அதற்கு ஐந்து விளக்கங்களைக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இராமலிங்கரோ அதற்கு 9 விளக்கங்களைக் கொடுத்து பிரமிக்க வைத்தார். அதுமுதல் வந்தவர் சாகும் வரை இராமலிங்கருக்கு சீடராகவும் நண்பராகவும் இருந்துவந்தார்.
இராமலிங்கரைப் பற்றி வேலாயுதம் குறிப்பிடுகையில்: அவர் அதிகம் சாப்பிடுவதில்லை, நோன்பு இருக்கும் போது சிறிது வெந்நீரில் சர்க்கரை கலந்து குடிப்பதோடு சரி. நடக்கும் போது அடக்கமாக நடப்பார். அதிர்ந்து பேச விரும்பமாட்டார், நீண்ட தூக்கம் கொள்ளவும் மாட்டார். சதா கருணை ததும்பும் முகத்தில் ஏதோவொரு சோகம் இருக்கும்.
அவர் பல அதிசயங்கள் புரிந்ததாக பலரும் குறிப்பிடுவர் , ஆனால் இராலிங்கர் அவற்றை மறுப்பார். உடல் நோய்களை தமது சித்த வைத்திய முறையில் குணப்படுத்துவதில் வல்லவர். பித்தளையை தங்கமாக மாற்றும் வித்தையை அறிந்திருந்தும் அதைக் கொண்டு பொருள் ஈட்டப் பயன்படுத்தியதில்லை. அதைக் கற்க விரும்புவோர் முதலில் தங்களின் ஆசைகளைத் துறந்து வரும்படி உபதேசிப்பார்.
சன்மார்க்க சங்கம் நிறுவியது
1865ல் இராமலிங்கர் சன்மார்க்க சங்கமென்று ஒரு சங்கத்தை நிறுவினார். இச்சங்கத்திற்கு இறைவனே தலைவரெனவும் தாம் அதன் முதல் அங்கத்தினர் எனவும் அறிவித்தார். இச்சங்கம் இறைவனால் வரையப்பட்டதென்றும் தாம் அதை நிறுவுவதற்கான வெறும் கருவி மட்டுமே என்றார்.இச்சங்கத்தின் குறிக்கோள்கள் மனிதரை சாகா நிலைக்கு வழிகாட்டுவதோடு மரணமில்லாப் பெருவாழ்வை அடையச்செய்வதற்கு மார்க்கம் என்று குறிப்பிடுகிறார் .
சன்மார்க்கம் என்பது இறைவனை அடைவதற்கான நான்கு மார்க்கங்களில் நான்காவது மார்க்கமாகும். முதல் மார்க்கம் இறைவனை உருவமாகவும், இரண்டாவது அருவுருவமாகவும், மூன்றாவது அருவமாகவும் நான்காவது மேற்குறிப்பிட்ட மூன்று நிலைகளையும் கடந்து இறைவனை யாவற்றுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருளாய் வணங்குவது ஆகும்.
சங்கத்துக் கோட்பாடுகள்
சங்கத்தை நிறுவிய வள்ளலார் அதற்கான கோட்பாடுகளாகப் பின்வருபவற்றைப் போதித்தார்:-
கடவுள் ஒருவரே
இறைவன் ஒருவரே என்று வள்ளலார் அழுத்தந்திருத்தமாக போதித்தார். பல கடவுள்கள் என்பதெல்லாம் நம் உடலுக்கு பல உயிர்கள் உள்ளன என்று கூறுவது போலாகும் என்றும், திருவருள் விளக்கமில்லாதவரே பல தெய்வங்கள் உண்டு என்பார்கள் என்றும் இராமலிங்கர் போதிக்கின்றார். இறைவன் விளக்கங்களுக்கு அப்பாற்பட்டவரென்றும் கோவில் விக்கிரகங்கள் இறைவனுடைய அருளைப் பெறுவதற்கான வெறும் சாதனங்களே என்றும் விளக்குகிறார்.
கடவுள் அருட்பெருஞ்சோதியானவர்
இறைவனுடைய குணங்களில் அவர் ஜோதிமயமானவர் என்பதே முடிவானதாகும் என்று இங்கு இராமலிங்கர் ஆழமாக போதிக்கின்றார். இதற்கென்றே ஒரு கோவிலையும் அமைத்து அருட்பெருஞ்சோதி அகவலையும் எழுதினார் ( இப்பாடல் 1588 அடிகளுக்கு மேல் கொண்ட அற்புத பாடலாகும்)