இளைஞர்களின் இயலாற்றல்கள் குறித்து சில சிந்தனைகள்
சிக்மன்ட் பிராய்ட்டின்பால் (Sigmond Freud) சாற்றப்படும் ஒரு தகவலை நான் சமீபத்தில் படித்தேன். அதில் வளரிளம் பருவம் என்பது ‘தற்காலிக மனநோய்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. அதிக பட்சமாக நமது கலாச்சாரம், குறிப்பாக நமது ஊடகங்கள், இளந்தாரிப் பருவத்தை வேடிக்கை மற்றும் அற்ப பொழுதுபோக்குகளுக்கான காலம் என வருணிக்கின்றன. பெரும்பாலும் இளைஞர்கள் சமுதாயத்திற்குப் பயனான வகையில் பங்களிப்பவர்களாகப் பார்க்கப்படவில்லை.
ஆனால் அப்துல்-பஹா இதை வேறு விதமாகக் காண்கின்றார். அவர் ஐக்கிய அமெரிக்காவிலும் கெனடாவிலும் இருந்தபோது, எதையுமே வெளித்தோற்றத்திற்கும் அப்பால் கண்ணுற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இளைஞர்கள் குறித்த நமது புலணுனர்வின்பால் நாம் அமல்படுத்தவேண்டிய அறிவுரையாகும் இது.
அப்துல்-பஹா 1912ல் நியூ யார்க்கிற்கு விஜயம் செய்த போது, அவர் டோரத்தி கிங் பீச்சர் என்னும் பெயர் கொண்ட ஒரு வித்தியாசமான பதிமூன்று வயது பெண்ணைச் சந்தித்தார். அப்துல்-பஹா உரையாற்றுவதைச் செவிமடுக்க டோரத்தியின் பாட்டி டோரத்தியை அழைத்துச் சென்றிருந்தார். ஆனால் டோரத்தி அச்சந்திப்பை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கவில்லை. டோரத்தி வழியெல்லாம் குதிரை வண்டியின் அடித்தளத்தை நோக்கியவாறு நேரத்தைக் கடத்தினார். பிறிதொரு காலத்தில் “அவர் என்னைப் பார்த்தால் என்ன செய்வது?” என பயந்துகொண்டிருந்ததை நினைவுகூர்ந்தார். “அவர் என்னிடம் பேசினால் நான் இறந்தே போய்விடுவேன்!” டோரத்தி சென்றடைந்தவுடன், தம் அருகே ஒரு முக்காலியில் உட்காருமாறு அப்துல்-பஹா அவருக்குச் சைகை செய்தார்; டோரத்தியின் கண்களோ தான் அணிந்திருந்த கருப்புக் காலனிகளில் நிலைக்குத்தியவாறு இருந்தன. அச்சூழ்நிலையில் டோரத்தியின் சிந்தனை வேறெங்கோ இருந்ததைப் போன்று தோன்றினாலும், உண்மையில் அது அவ்வாறு இல்லை என்பது பிறகு விளங்கியது. அங்கு அப்துல்-பஹா உரையாற்ற ஆரம்பித்தவுடன், டோரத்தி “ஐக்கியப்பட்ட அன்பில் உருவாகும் இணக்கத்திற்காக தம்முள் அடக்கமுடியாத ஒரு தீவிர உணர்வு ஏற்படுவதை உணர்ந்ததாக…” பின்னாள்களில் நினைவுகூர்ந்தார். உரை முடிவதற்குள், “தமது முழுங்கால்களின்மேல் தமது முழங்கைகளை வைத்துக்கொண்டும் தமது முகத்தை கைகளால் தாங்கியவாறும் அப்துல்-பஹாவை நோக்கியவாறும், அவர் முகத்தில் பதித்திருந்த தமது பார்வையை அகற்றமுடியாமலும் அகற்றவிரும்பாமலும்” டோரத்தி தான் அமர்ந்திருக்கக் கண்டார்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் இயலாற்றல்கள் குறித்து அப்துல்-பஹா பலமுறை எழுதியுள்ளார். இளமைக் காலமே “மானிட வாழ்வின் வெகு விரும்பத்தக்க காலகட்டமாக தனித்து நிற்கின்றது” என அவர் இளைமைப் பருவம் குறித்து கருத்துரைத்துள்ளார். இளைஞர்கள் தங்களின் “மேன்மையான குறிக்கோள்,” “உறுதிமனப்பான்மை, மேன்மையான சிந்தனை,” மற்றும் “தளரா உறுதி” ஆகியவற்றில் தனிச்சிறப்புற்றிருக்க வேண்டுமென அவர் இளைஞர்களிடம் கூறினார். நாம் எல்லோருமே நமது சிறு வயது முதற்கொண்டே நமது நுண்ணறிவாற்றல், ஆன்மீகத் திறனாற்றல்கள் ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்ளும் திறன் பெற்றும், நமது சமூகங்களில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தவல்லவர்களாகவும் இருக்கின்றோம் என்பது அவரின் நம்பிக்கையாகும்.
டோரத்தி அப்துல்-பஹாவைச் சந்தித்த பிறகு, அவருக்கு ஒரு கடிதம் எழுதி தாமும் அவரைப் போலவே மனிதகுலத்திற்கான ஒரு சேவைப் பாதையைப் பின்பற்ற விரும்புவதாக அவரிடம் தெரிவித்தார். அப்துல்-பஹா பின்வருமாறு பதிலளித்தார்: “என் எதிர்ப்பார்ப்பு இதுவே: நீ உன் ஆவலில் வெற்றிபெற வேண்டும்.”
பல வருடங்கள் கழித்து, வெறுமனே தன் காலனிகளை நோக்கியவாறு உட்கார்ந்திருந்த அக்கூச்சவுணர்வு கொண்டிருந்த பெண், ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, தென் மற்றும் வட அமெரிக்க கண்டங்கள் முழுவதும் பிரயாணம் செய்து ஐக்கியம் மற்றும் சேவை குறித்த பஹாய் போதனைகளைப் பற்றி எல்லா பின்னணிகளையும் சார்ந்த நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலுமான மக்களிடம் உரையாற்றினார். நாடு முழுவதும் இன ஐக்கிய நிகழ்வுகளின் ஏற்பாட்டிற்கு ஆதரவும் உதவிகளையும் வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் இன ஐக்கிய செயற்குழுவுக்கு அவர் நியமிக்கப்பட்டார். அவர் அமெரிக்க பஹாய்களின் தேசிய நிர்வாக அமைப்பிற்கு தேர்வு செய்யப்பட்டும் அதன் முதல் பெண் தலைவராகவும் செயல்பட்டார்.
நியூ யார்க்கில் 1912ம் ஆண்டில் அப்துல்-பஹாவுடனான தமது சந்திப்பை டோரத்தி பேக்கர் என்றுமே மறந்ததில்லை. “அந்த நேரத்தில் அச்சம் யாவும் மக்கள் மீதான ஒரு தாபமாக நிலைமாறியது,” என அவர் பிறகு குறிப்பிட்டுள்ளார்.
[Source: Freeman, Dorothy. From Copper to Gold: The Life of Dorothy Baker.]