மனிதனின் பௌதீக மற்றும் ஆன்மீகச் சிறகுகள்
அப்துல்-பஹாவின் முதலாவது பொது உரை நியூ யார்க் நகரில் எஸ்ஸன்ஷன் கிருஸ்தவ கோவிலின் திருச்சபையினர் முன் ஏப்ரல் 14ம் தேதி நிகழ்த்தப்பட்டது. அவரது உரையின் மையக் கருத்துகள் பின்வருமாறு:
இன்று மானிட உலகிற்கு அனைத்துலக ரீதியிலான ஐக்கியமும் இணக்கமும் தேவைப்படுகின்றது. இவ்வுயர்ந்த அடிப்படை கோட்பாடுகளை ஸ்தாபித்திட ஓர் இயக்க ஆற்றல் தேவைப்படுகின்றது. மானிட உலகின் ஐக்கியமும் ‘அதிவுயரிய அமைதியும்’ லௌகீக வழிகளில் சாதிக்கப்பட முடியாது. அவை அரசியல் வழிகளிலும் ஸ்தாபிக்கப்பட முடியாது, ஏனெனில் தேசங்களின் அரசியல் தேவைகள் பலவிதப்பட்டும் மக்களின் கொள்கைகளும் ஒன்றுக்கொண்று வேறுபட்டும் முறண்படவும் செய்கின்றன. அவை இன ரீதியிலோ தேசவிசுவாச சக்தியின் மூலமாகவோ ஸ்தாபிக்கப்பட முடியாது. ஏனெனில், இவை யாவும் தன்னலமிக்க, வலுவற்ற மானிட சக்திகளாகும். இனவேறுபாடுகள், தேசவிசுவாசம் சார்ந்த காற்புணர்வுகள் ஆகியவை இந்த ஐக்கியம், உடன்பாடு ஆகியவை நனவாக்கப்படுவதை தடுக்கின்றன. ஆதலால், கடவுள் அவதாரங்கள் அனைவரின் அடிப்படை போதனைகளான மானிட இராஜ்ய ஒருமைத்தன்மையின் மேம்பாடானது புனித ஆவியின் தெய்வீக சக்தி, மூச்சுகள் ஆகியவற்றின் வாயிலாகவின்றி வேறு வகைகளில் அடையப்படவே முடியாது. பிற சக்திகள் யாவும் வலுவற்றவை, இதை சாதிப்பதற்கு ஆற்றலற்றவை.
மனிதனுக்கு இரண்டு சிறகுகள் வேண்டும். ஒன்று பௌதீக ஆற்றலும் லௌகீக நாகரிகமும் ஆகும்; மற்றது ஆன்மீகச் சக்தியும் தெய்வீகப் பன்பாடும் ஆகும். ஒரு சிறகை மட்டும் வைத்துக்கொண்டு பறக்கஇயலாது. இரண்டு சிறகுகள் தேவை. ஆகவே, லௌகீக நாகரிகம் எவ்வளவுதான் மேம்பாடு கண்டிருந்த போதிலும் அது ஆன்மீக நாகரிகத்தின் வளர்ச்சியின்றி முழுநிறைவு அடையவே முடியாது.
அக்கிருஸ்தவ கோவில் நகர இடமின்றி நிறைந்திருந்தது; அப்துல்-பஹா வெளியேறும் போது மக்கள் வாழ்த்துத் தெரிவிக்க அவரை நோக்கி விரைந்தனர். ஒரு பெண்மணி அவருடைய அங்கியைப் பற்றிக்கொண்டு கதறியழுதார். அழுகை, அப்பெண்மணி கூற முயன்ற வார்த்தைகளை மூழ்கடித்தது. எங்கு பார்த்தாலும் மீண்டும் மீண்டும் அதே காட்சி. கிழக்கிலிருந்து விஜயம் செய்துள்ள அவ்வற்புத மனிதரைச் சந்தித்திட மக்கள் அவரை நோக்கி விரைந்தவாறு இருந்தனர்; அவர்களிலிருந்து ஆழ்ந்த உணர்ச்சிவயம் வெளிப்பட்டது. அப்துல்-பஹா எல்லா சூழ்நிலைகளையும், பெருந்தகைமையோடும் அமைவடக்கத்துடனும் யாவற்றையும் உள்ளடக்கும் அன்புக்கருணையுடனும் இரக்கத்துடனும் எதிர்கொண்டார்.
(HM Balyuzi, “‘Abdu’l-Bahá – The Centre of the Covenant of Bahá’u’lláh”, pp. 174-175)