கடவுள் அருட்பெருஞ்சோதியானவர்
(அருட்பெருஞ்சோதி அகவல்)
இறைவன் அருட்பெருஞ்சோதி என்னும் நம்பிக்கையின் விளைவாகப் பாடிய அருட்பெருஞ்சோதி அகவல் அருட்பெருஞ்சோதி என ஆரம்பித்து அருட்பெருஞ்சோதி என முடிகிறது. பழங்காலம் தொட்டு இந்நாள் வரை தமிழில் பாடப்பெற்ற பாடல்களிலேயே மிகவும் நீண்டது இதுவேயாகும். அருட்பெருஞ்சோதி என்னும் வாக்கியம் 1000 முறைகளுக்கு மேல் இப்பாடலில் வருகிறது. இராமலிங்கரின் எழுத்துப் படைப்புக்களிலேயே இந்த அகவலே நடு மையமாக விளங்குகிறது. இவ்வருட்பெருஞ்சோதியான ஆண்டவர், பூமியில் கூடிய விரைவில் தோன்றி மக்களை ஆட்கொள்வார் என இராமலிங்கர் வாக்களிக்கின்றார். பின்னாளில் அவர் எழுத்துக்கள் பெரும்பாலும் இவ்வருகை தொட்டே எழதப்பட்டுள்ளன. இவ்வருகைக்காக மக்கள் அனைவரும் அருளோடும் தூய சிந்தையுடனும் இருக்கவேண்டும் எனவும் கூறுகிறார்.
சிறு தெய்வ வழிபாடு கூடாது
சிறு தெய்வ வழிபாடு அறவே கூடாது என்று வள்ளலார் வலியுறுத்துகின்றார். சிறு தெய்வங்கள் இறைவனுடன் ஒப்பிடுகையில் தூசியைப் போன்றவர்கள் என்றும், பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்னும் மும்மூர்த்திகளும் இச்சிறு தெய்வக் கூட்டத்தினர் என்பது வள்ளலாரின் கூற்று. (இங்கு ருத்திரன் என்பது சிவம் அல்லவென்றும் விளக்குகிறார். சிவன் முழுமுதற்பொருள், ருத்திரன் அவருடைய அம்சம்) இவர்கள் மூவரும் ஒரு காலத்தில் சமயத் தலைவர்கள். அருட்பெருஞ்சோதியரை வேண்டிக் கொண்டு, பிரம்மா சிருஷ்டிக்கும் சக்தியையும், விஷ்ணு சிருஷ்டி, காத்தல் சக்தியையும், ருத்திரன் சிருஷ்டி, காத்தல், அழித்தல் என்ற மூன்று சக்தியையும் பெற்றதாக வள்ளலார் கூறுகிறார். இவர்களை வணங்குவதால் இவர்கள் கொண்டுள்ள அற்பசக்திகளே வணங்குவோரைச் சாறும் என்றும் எல்லாம் வல்ல அருட்சோதி ஆண்டவரை வணங்குவதே எல்லா அருளையும் பெறும் மார்க்கம் என வள்ளலார் அறிவுறுத்துகிறார்,
இச்சிறு தெய்வங்கள் பெயரால் உயிர்ப்பலி கொடுப்பதையும் வள்ளலார் வன்மையாகக் கண்டிக்கின்றார்.
புலால் உண்ணாமை
சன்மார்க்கச் சங்கத்தினர் சைவ உணவே உட்கொள்ளவேண்டும் என்பது வள்ளலாரின் மற்றுமொரு கொள்கை. காலப்போக்கில் புலால் உணவு கைவிடப்படும் என அவர் மேலும் கூறுகிறார்.
சாதி சமய வேற்றுமைகள் கூடாது
இக்கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு பிரார்த்தனையை வள்ளலார் ஓதுகின்றார்:
எல்லாம் உடைய அருட்பெருஞ் சோதி அற்புதக்கடவுளே! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடையாகிய சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார கங்கற்ப விகற்பங்களும் வருணம் ஆசிரம முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதிற் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்ம நேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்தருளல் வேண்டும். எல்லாமாகிய தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ் சோதியாண்டவரே! தேவரீர் திருவருட் பெருங் கருணைக்கு வந்தனம்! வந்தனம்!
– சுத்த சன்மார்க்க சத்திய சிறுவிண்ணப்பம்.
மேலும்,
சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச்சண் டையிலே ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே
என்றும் ஜாதி சமய வேறுபாட்டால் அழிவை நோக்கிச் செல்லும் மக்களுக்கு உபதேசிக்கின்றார். இக்காலத்தில் சகலவிதமான தத்துவங்கள் யாவற்றையும் அருட்பெருஞ்சோதியர் பயிர்களுக்கு எருவாக மாற்றி சுத்த சன்மார்கமே நிலைக்கச் செய்துள்ளார் எனவும் மார்க்கங்கள் எல்லாம் ஒன்றாகும் என்றும் சகல மார்க்கங்களையும் தாம் மதிப்பதாகவும் இராமலிங்கர் கூறுகிறார்.
ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை
இக்கோட்பாடு, எல்லா உயிரும் தன்னுயிர் போல எண்ண வேண்டும் எனவும் தளக்கெதுவோ அதுவே பிற உயிர்க்கும் என்னும் கருத்தைக் கொண்டது. இச்சிந்தை கொண்டவர்களுக்குச் சேவை செய்ய ஏங்கினேன் என்கின்றார் வள்ளலார். இச்சிந்தை கொண் டோரின் உள்ளங்கள்தான் இறைவன் திருவிளையாடல் நடைபெறும் தளம் எனவும் மேலும் சொல்கிறார்.
தற்போதுள்ள சமய நூல்கள் முடிவான உண்மையை தெரிவிப்பன அல்ல
இதையொட்டி இராமலிங்கர் கூறுவது, ‘இதற்கு மேற்பட, நாம் முன் பார்த்தும் கேட்டும் லதியம் வைத்துக்கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்கவேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறி யன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள் . அணுமாத் திரமேனும் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை (மனித உடம்பின் அமைப்பை) அண்டத்தில் (தெய்வலக்ஷணமாக) காட்டிளார்கள். யாதெனில், கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதி யென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பது போல அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
அவற்றில் லக்ஷியம் வைத்தால், ஆண்டவரிடத்தில் வைத்துக்கொண்டிருக்கிற லக்ஷியம் போய்விடும். ஆண்டவரிடத்தில் லக்ஷியம் போய்விட்டால் நீங்கள் அடையப்போகிற பெரிய பிரயோஜனம் போய்விடும்.
…… இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றி குழூஉக்குறியாகக் குறித் திருக்கிறதே யன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் – அவ்வச்சமய மதங்களிலும் – அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமே யல்லாது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆள்மானுபவத்தை பெற்றுக்கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில், நமக்குக் காலமில்லை. மேலும் இவைகளுக்கு சாக்ஷியாக நானே யிருக்கிறேன், நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வள வென்று அளவு சொல்லமுடியாது.
…….. அந்த லக்ஷியம் இப்போது எப்படி போய்விட்டது. பார்த்திர்களா!
…….ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்த தென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது. இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமே லேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருத்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை.
இறந்தவரை புதைத்தலல்லாது எரிக்கக்- கூடாது.
பிணத்தை எரிப்போரைப் பார்த்து ‘பிணங்கழுவி எடுத்துப்போய் சுடுகின்றீர் இனிச்சாகும் பிணங்க ளேநீர்’ என்று திட்டுகிறார் வள்ளலார். பரன் அளிக்கும் தேகம் இது, சுடுவது அபராதம், சுட்டால் அது தான் கொலையாம்’ எனவும் கூறுகிறார்.
இறந்தவர் உயிரபெற்றெழுவர்
இக்கோட்பாடு ‘ரிசரெக்ஷன்’ எனும் கிருஸ்தவ கோட்பாட்டை ஒட்டியுள்ளது. அருட்பெருஞ்சோதி ஆண்டவர் இவ்வுலகில் தோன்றும் தருணம் இது. அப்போது இறந்தவர் உயிர்பெற்று எழக்காணலாம் என இராமலிங்கர் கூறுகிறார்.
பிற போதனைகள்
சன்மார்க்கம் விளங்கும் காலம் இக்காலமென்பது தெரிந்த தெரியாத இறந்தவர்களெல்லாம் உயிர்பெற்று சங்கத்தின் உறுப்பினர்களாகும் காலம். இதையொட்டி கலியுகம் என்பது 5000 வருடங்களே என்றும் சமஸ்கிருத பண்டிதர்கள் கூறுவது போல் 4,32,000 வருடங்கள் அல்லவென்று கூறுகிறார். அவருடை சீடர்கள் இதைக் குறிப்பிடுகையில் (1882ல்) இன்னும் 10 வருடங்களில் முழுதாக கலி திர்ந்துவிடும் எனக்கூறுகின்றனர்.
(தொடரும்)