பிற போதனைகள் (தொடர்ச்சி)
உருவ வழிபாடு
இறைவழிபாட்டைப் பொறுத்த வரையில் ‘இராமலிங்கர் உருவவழிபாடு செய்யக்கூடாது என்று சொல்லவில்லை. அன்று அவரைச் சுற்றியிருந்தோர் எல்லோரும் உருவ வழிபாட்டு முறையில் வந்தவர்கள். இதை மனதிற் கொண்டுதானோ என்னவோ விக்கிரக ஆராதனை முறையை அனுமதித்தார். இறைவன் சகல நிலைகளைக் கடந்து இருந்தாலும் உருவ வழிபாடு செய்வதை அவர் தடை செய்யவில்லை. ஆனால் சன்மார்க்க சங்கத்தினருக்கென அமைத்த ஞானசபையில் எந்தவொரு சிலை வழிபாடும் விதிக்கப்படவில்லை. சன்மார்கிகள் சபைக்கு உள்ளே நின்று வணங்கலாம் என்றும் சன்மார்கி அல்லாதார் வெளியே நின்று மெல்லெனத் துதி மட்டுமே செய்ய முடியும் என்றார். இசை, தீபாராதனை, பிரசாதம், தேங்காய், பழம், திருநீறு முதலியவை ஞானசபை வழிபாட்டுக்கு முரண்பாடானவை என்றார்.
சன்மார்க்கசங்க கோவில் நிறுவியது

சன்மார்க்க சங்கத்தை நிறுவிய இராமலிங்கர் சங்கத்துக்கான கொள்கைகளை விவரித்ததோடு, சங்கத்துக்கென பிரத்தியேகமான கோவில் ஒன்றையும் நிறுவினார். இராமலிங்கர் வாழ்ந்த வடலூரிலேயே இக்கோவில் நிர்மாணிக்கப்பட்டது. இதில் சிலை வழிபாடு இல்லாமையே இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இக்கோவிலை ‘ஞானசபை’ என வித்தியாசமாக இராமலிங்கர் குறிப்பிடுகிறார். அக்காலத்தின் வெள்ளையர் அரசாங்க குறிப்பேடுகளில் இக்கோவிலைப்பற்றிப் பின் வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.– ‘1872’இல் நன்கொடை வசூல் மூலம் பார்வதிபுரத்திலுள்ள வடலூரில் விநோதமான எட்டுக்கோன (domed roof) வடிவிலான கோவில் ஒன்று அவரால் (இராமலிங்கரால்) கட்டப்பெற்றது. சிதம்பரம் நடராஜர் கோவில் அங்கிருந்து தெரிவதனால் அவ்விடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அது சாதாரண கோவிலன்று. வழிபாட்டு முறைகள் அதில் மிகவும் வேறுபட்டவை,’ எட்டு பக்கங்கள் கொண்ட இக்கோவிலை நிர்மாணித்ததின் முக்கிய நோக்கம் மக்கள் உண்மையான இறை வழிபாடு செய்யவும், உலக வாழ்க்கை பிணிகளில் இருந்து விடுபடவும், மரணமிலாப் பெருவாழ்வு வாழவும், பேரின்பமான ஆன்ம வாழ்வு வாழவும் எனக் கூறுகிறார் வள்ளலார். கோவில் பற்றிய விளம்பரங்களில் இறைவன் இப்பூமிக்கு எழுந்தருளப்போகிறார் எனவும் அருட்பெருஞ்சோதியான அவரே இக்கோவிலில் வணங்கப்படவேண்டும் எனவும் இராமலிங்கர் வலியுறுத்துகிறார். இறைவன் அருட்- பெருஞ்சோதியாக இப்பூமிக்கு வரவிருக்கின்றார் எனக் கூறிய வள்ளலார் அவ்வருகை எவ்விதம் நடக்கும் எனத் தெளிவாக எங்கும் குறிப்பட்டதாகத் தெரியவில்லை. சில நேரங்களில் இறைவன் ஞானசபையில் வீற்றிருப்பார் எனவும் மற்ற நேரங்களில் கீழ்கண்டது போலும் விளக்குகிறார்.- ‘சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும். இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை. தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந் தொட்டு அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும். அதற்கு மேலும் வழங்கும். பலவகைப்பட்ட சமய பேதங்களும் சாத்திர பேதங்களும் ஜாதி பேதங்களும் ஆசார பேதங்களும் போய், சுத்த சன்மார்க்கப் பெருநெறி யொழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம். இது (உயுகூ) மாதத்திற்கு மேல், இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள் மூர்த்திகள் கடவுளர் தேவர் அடியர் யோகி ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல. இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும் எல்லாத் தேவர்களும் எல்லாக் கடவுளரும் எல்லாத் தலைவர்களும் எல்லா யோகிகளும் எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்ளைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித் தலைமைப் பெரும்பதி. இது உண்மையாயின் அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன், பெறுகின்றேன், பெற்றேன். என்னை யடுத்து தாங்களும் பெறுதற்கு யாதொரு தடையுமில்லை. பெறுவீர்கள், பெறுகின்றீர்கள், பெற்றீர்கள், அஞ்சவேண்டாம்’. எனவும் ‘நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த நிருத்தமிடுந் தனித் தலைவ ரொருத்தரவர் தாமே வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணமிது கூவுகின்றே னுமையே’ என்றும் பாடுகிறார். இந்த வருகையை ஈரேழுபதிநான்கு உலகவாசிகளும் கண்டு வியந்து என்னே இது என்னே இது என்று மயங்குவர் என்றும் மற்றுமொரு இடத்தில் கூறுகிறார். மற்றுமொரு அறிவிப்பில் – “ஆண்டவர் ஒருவர் உள்ளார் என்றும், அவர் பொதுப்பட உலகத்தி லுள்ளார் யாவரும் சன்மார்க்கப் பெரும் பயன் பெற்று நித்திய வாழ்வு வாழ்தற் பொருட்டு வெளிப்படக் காரியப்படுகின்றனர் என்றும், அதுகாலையில் நாமும் ஆன்மலாபத் தைப் பெற்றுக்- கொள்ளுவோம்….” என அறிவிக்கின்றார். சுருங்கக் கூறவேண்டுமாளால் இறைவன் ஏதோவொரு வகையில், ஆளால் இதுவரை நடைபெறாத வகையில், பூமிக்கு வருகையளிக்க இருக்கின்றார் என்றே அந்நேரம் இராமலிங்கர் தம்மைச்சுற்றியுள்ளவர்களிடம் போதித்துள்ளார். தம்மைச் சூழ்துள்ளவர்களில் சிலர் மட்டுமே அவர் போதனைகளை கடைபிடிப்பது கண்டு மனமுடைந்த இராமலிங்கர்.-“இவ்வகில உலக சகோதரத்துவ சங்கத்தின் உறுப்பினராவதற்கு நீங்கள் அருகரல்லர். உலக சகோதரத்துவத்தின் உண்மையான உறுப்பினர்கள் இந்தியாவுக்கு வடக்கே வெகு தொலைவில் இருக்கிறார்கள். எனக்கு செவிசாய்க்கவில்லை. நான் உபபேசிப்பதை நீங்கள் பின்பற்றவில்லை. நான் சொல்லுவதை ஏற்றுக் கொள்ளுவதில்லை என்று நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள் போலும், ரஷ்யாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் இன்னும் வெளி நாடுகளிலிருந்தும் வந்து இதே அகில உலக சகோதரத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை, அப்போதுதான் நான் உங்களுக்கு வீனில் இப்போது சொல்லிவரும் பேருண்மைகளை உணர்ந்து பாராட்டுவீர்கள். வடக்கே வெகுதொலைவில் வாழும் அச் சகோதரர்கள் இந்தியாவுக்கு வந்து வியக்கத்தக்க பணிகளால் நம்நாட்டிற்கு அளவிடற்கரிய நன்மைகளைச் செய்வதை நீங்கள் காண்பீர்கள்’. இந்த வடக்கிலிருந்து வரும் சகோதரர்கள் நாங்கள்தான் என குறிப்பிட்ட சில சங்கத்தினர் கூறிக்கொள்கின்றனர். ஆனால் இவர்கள் இந்தியாவில் செய்த வியக்கத் தக்க பணிகள் என்ன என்று விளங்கவில்லை. புது டில்லியில் எழுந்திருக்கும் தாமரைக் கோவில் போன்ற வியக்கத்தக்க பணியை யார் செய்தனர் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இணை நிலையங்கள் (சத்திய தருமச்சாலை)
ஜீவகாருண்யமெனும் சன்மார்க்க சங்கத்தின் முக்கிய கொள்கைக்கு சின்னமாக தருமச்சாலை ஒன்றை நிறுவினார். அப்போது அங்கு நிலவிய முக்கிய நோயாகிய ‘பசி’ என்ற நோய் தீர, முடிந்ததைச் செய்ய நிறுவப்பட்டதே இந்த சாலை. ‘கடவுளியற்கை விளக்கத்திற்கு இடமாகிய சிவதேகங்ளென்கிற ஆலயங்கள் பசியினால் பாழாகுந் தருணத்தில் ஆகாரங் கொடுத்து அவ்வாலயங்களை விளக்கஞ் செய்விப்பதே சீவகாருணியம்’ எனக் கூறுகிறார் வள்ளலார். பாட்டொன்றில் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்” எனக் கூறுகிறார். இத்தருமச்சாலையில் ஜாதி பேதமின்றி பசியென்று வருவோருக்கு பசிபோக்க வேண்டும் எனவும் விதித்தார்.
சன்மார்க்க போதினி (பாடசாலை)
தருமச்சாலை நிறுவிய அதே ஆண்டிலேயே (1867) அவர் சன்மார்க்க போதினி என்னும் பாடசாலை ஒன்றையும் நிறுவினார். இப்பாடசாலையில் சிறியவர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் கல்வி வழங்கப்பட்டது. இங்கு தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் கற்பிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டது.
சன்மார்க்க சங்க பத்திரிகை
சன்மார்க்க கொள்கை பிரச்சாரத்துக்கான கருவியாக பத்திரிகை ஒன்று வள்ளலாரால் தொடங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டது. இது பற்றி பிற விபரங்கள் இல்லை.
திருவருட்பா
வள்ளலார் அளித்த பாடல்களும் போதனைகளும் தொகுக்கப்பட்டு திருவருட்பா எனப் பெயரிடப்பட்டது. அவருடைய சீடர்கள் அவற்றை அச்சிடுவதற்காக இராமலிங்கரிடம் அனுமதி கேட்டனர். ஆரம்பத்தில் இதற்கு ஒப்புக்கொள்ளாத இராமலிங்கர் பிறகு தாம் பாடிய பாடல்களைத் தவிர்த்துவிட்டு அருட்பெருஞ்சோதியர் அருளால் தாம் பாடிய பாடல்களை மட்டும் அச்சிட அனுமதி தந்தார். தம் பாடல்கள் அச்சிடப்படுவது அவ்வளவு அவசியமில்லை என்று கூறிவிட்டார். திருவருட்பா முகப்பில் வள்ளலாரை இராமலிங்கசாமி எனப்பெயரிட அவர் சீடர்கள் அனுமதி கோரினர். அதற்கு இராமலிங்கர் “இராமலிங்கசாமி யென்று வழங்குவிப்பது என் சம்மதமன்று. என்னை ? ஆரவாரத் திற்கு அடுத்த பெயராகத் தோன்றுதலில். இனி அங்ஙனம் வழங்காமை வேண்டும். ஜீவகாருண்யமும் சிவானுபவமும் அன்றி மற்றவைகளை மனத்தின்கண் மதியாயிருத்தல் வேண்டும்.’
(தொடரும்)