திருவருட்பா அச்சிடப் பட்டதும் தொடர்ந்து வள்ளலாருக்கு ஏற்பட்ட எதிர்ப்பும்.

வள்ளலாரின் படைப்புகள் அனைத்திற்கும் திருவருட்பாவென பெயரிட்டது ஒரு பெரிய எதிர்ப்பையே கிளரிவிட்டது. இதற்கு முக்கிய பங்காற்றியவர் இலங்கையின் ஆறுமுக நாவலர் எனும் ஒரு தமிழ்ப் புலவர். பன்னிரு திருமுறைகளே திருவருட்பாவென வழங்கத்தகுந்தவை என்பது இவர் வாதம். ஆறுமுக நாவலர் ஒரு பழுத்த சைவர். இவருக்கு வள்ளலாரின் சன்மார்க்க கொள்கைகள் பிடிக்கவில்லை. சைவ மடத் தலைவர்களால் தூண்டிவிடப்பட்ட இவர், வள்ளலார் படைப்புக்கள் அனைத்தும் ‘அருட்பாக்கள்’ அல்லவென்றும் அவை மருட்பாக்கள் என்றும் வாதம் செய்தார். முக்கியமாக வள்ளலார் போதனைகள் பிற சமயத்தாருக்கு இடம் கொடுக்கும் வகையில் பரந்தநோக்கோடு இருப்பதாக இவர் எண்ணினார். பத்திரிக்கைகளில் வள்ளலார் ஆறுமுக நாவலர் வாதம் பற்றிய செய்திகள் அடிக்கடி வெளிவரலாயின. ஆறுமுக நாவலரின் எதிர்ப்பு எவ்வித பயனும் அளிக்காதது கண்டு நாவலர் வள்ளலார் மீது ஓர் அவதூறு வழக்குத் தொடுத்தார். வள்ளலார் ஆறுமுக நாவலரைத் தூற்றியதாகவும் அவரும் அவருடைய ஆட்களும் தம்மை அடிக்கத் திட்டமிடுவதாகவும் நீதி மன்றத்தில் வழக்குப் போட்டார். வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் நாவலர் அதில் தோல்வியே கண்டார். இருந்தும் வள்ளலாரைத் தூற்றியது பல காலம் வரை நீண்டது. வள்ளலாரை சன்மார்க்க சங்கத்தவர்களே உணர்ந்துகொள்ளாமல் ஞானசபை வழிபாட்டு விதிமுறைகளை மீறினர். அதனால் வள்ளலார் ஞானசபையையே மூடினார். ஆக, நாவலரைப் போன்ற வெளியோர் வள்ளலாரை எதிர்த்ததில் எவ்வித ஆச்சர்யமுமில்லை.
இறுதி நாட்கள்
தம்முடைய இறுதி நாட்களில் வள்ளலார் மேட்டுக்குப்பம் என்னும் ஊரில் வாழ்ந்தார். அங்கு ‘சித்தி விளாகம்’ எனும் சிறிய மாளிகையில் வசித்து வந்தார். வள்ளலாருக்கு வேண்டிய மன அமைதி தரும் இடமாகவும் அவரது இறை வழிபாட்டுக்குத் தகுந்த இடமாகவும் இச்சித்தி விளாகம் அமைந்திருந்தது. வள்ளலாரின் மிக முக்கிய அறிக்கைகள் உபதேசங்கள் அனைத்தும் இவ்விடத்திலிருந்தே வந்தன. தம்முடைய கடைசி நாட்களில் அவர் அடிக்கடி தனிமையை நாடிச் செல்வதும் நாட் கணக்கில் காணாமல் போவதுமாகவும் இருந்தார். இறுதியில் ஒரு நாள் அவர் தம்முடைய சீடர்களை அழைத்து தாம் தம்முடைய தனி அறையில் நுழைந்து சமாதி அடையப்போவதாகவும், கதவை அவர் சாத்திய பிறகு அதை யாரும் திறக்கக்கூடாது என்றும் அப்படித் திறந்தாலும் தாம் யார் கண்ணுக்கும் தென்படமாட்டார் என்றும் அறிவித்தார். இவ்விதமாக அவர் அறைக்குள் நுழைந்து தாளிட்டுக்கொண்டு காணாமல் போனவுடன், அப்போதைய வெள்ளையர் அரசாங்கம் ஓர் ஆய்வு நடத்தி அவர் காணாமல் போனதன் உண்மையை உறுதிபடுத்தினர். அரசாங்கக் குறிப்பேட்டில் ‘1874ல் கருங்குழியை அடுத்த மேட்டுக்குப்பத்தில் தாம் நிரந்தரமாக சமாதி அடையும் அறைக்குள் புகுப்போவதாகவும், சிலகாலத்திற்கு அறையைத் திறந்து பார்க்க வேண்டாமெனச் சீடர்களுக்குக் கூறித் தாழிட்டுக் கொண்டார். அதன் பின் அவர் காணப்படவில்லை. அவ்வறை இன்னும் பூட்டப்பபட்டே உள்ளது” என குறிக்கப்பட்டுள்ளது.
வள்ளலார் யார்?
வள்ளலார் யார் என்பதை பஹாய்களாகிய நாம் புறிந்துகொள்வதோடு அவர் தமது வாயால் தம்மைப்பற்றி என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். முதலாவதாக அவர் தாம் இறைவனின் ‘ஒளியைப்’ பெற்றவர் என கூறுகிறார். சிதம்பரக் கோவில் தரிசனத்தின் போதொரு நாள் இறைவன் தமக்கு அவரது ‘அருட்பேரொளியை அளித்தாகவும் மற்றுமொரு நாள் கோவிலில் ‘சூரிய ஒளியைவிட’ பேரொளியான வடிவில் இறைவனைக் கண்டதாகவும் வள்ளலார் பாட்டொன்றில் கூறுகிறார். இவ்வருட்பேரொளியான இறைவன் யாராக இருக்கக் கூடும் என்பது தெள்ளத் தெளிவு. இவ்வுலகை உய்விக்க வந்த ‘அருட்பெருஞ்சோதி’, இறைவன் கண்கானதவர் – ஆனால் ‘கண்கண்ட தெய்வமாய்’ நமக்காகத் தம்மைத் தியாகம் செய்தவர் எவரோ அவர் தான் அருட்பேரொளியாகவும் அருட்பெருஞ்சோதியாகவும் வள்ளலாருக்குத் தோன்றி அவரை ஆட்கொண்டவர். ஆனால், அதே சமயம் ‘தவறிழைக்காமை’ (Infallibility) தமக்கில்லை என்பதை அவர் தெளிவாக உணர்த்துகிறார். நண்பரொருவரின் வினாவுக்கு பதிலளிக்கையில் ‘ஐய ! நீர் அஞ்சற்க. யாம் எழுதிய வாசகத்தினுஞ் செய்யுளினும் அளவிறந்த குற்றங்களிருக்கின்றன; என் செய்வேம் விசார வசத்தால் ஆங்காங்குந் தவறினேம். அதனைப் பெருங் கருணையுள்ள எமது கடவுள் மன்னிப்பார். மற்றையரு மன்னித்தல் வேண்டும். யாம் யார்? எமக்கு யாது தெரியும்? புமுவினுங் கடைய புலையரிற் சிறியேம் இதனால் நாணுடலடையேம்’ என கூறுகிறார். சன்மார்க்க சங்கம் அமைத்த போது அதன் தலைவர் இறைவன் என்றும் தாம் அதன் முதல் ஆனால் சாதாரண அங்கத்தினர் எனவும் அறிவிக்கின்றார். ஆனால் அவர் சொன்னதை எல்லாம் மறந்துவிட்டு அவரைத் தெய்வமாக வணங்குபவர் அன்றும் இருந்தனர் இன்றும் உள்ளனர். எவ்வகைப்படுத்திப் பார்த்தாலும் இராமலிங்கர் ‘அருட்பெருஞ்சோதி’யான ஆண்டவரின் உலக வருகையை அறிவிக்கவும் அதற்காக மக்களை, முக்கியமாக தமிழ் மக்களைத் தயார் செய்யவுமே பிறந்தவர். பஹாவுல்லாவைப் பற்றி அறிவிக்கும் போது, “நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த நிருத்தமிடும் தனித்தலைவ ரொருத்தரவர் தாமே வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணமிது கூவகின்றே னுமையே’ எனக் கூறுகின்றார். அதாவது நீதி நிலைபெறவும் ஆன்மீக வாழ்க்கை மக்கள் மத்தியில் நிலைபெறவும் ஆண்டவன் தாமே நேரில் இவ்வுலகில் தோன்றி மக்களை ஆட்கொள்வார் எனக் கூறுகிறார். பஹாவுல்லா, இராமலிங்கர் போன்றோரைப் பற்றி அறிவிக்கும் போது, ‘ஒவ்வொரு மண்ணிலும் ஓர் அறிவொளியை நிர்மாணித்துள்ளோம், முன் விதிக்கப்பட்ட நேரம் நேரிடும் போது, எல்லாம் அறிந்தவரும் சர்வ ஞானியுமான இறைவன் ஆணையால் அது அதன் கீழ்வானத்திற்கு மேல் பிரகாசிக்கும்’ என இராமலிங்கர் போன்றோரைப் பற்றி பஹாவுல்லா குறிப்பிடுகின்றார். வள்ளலார் குறிப்பிட்டது போன்று வள்ளலார் உலகில் தோன்றியதன் நோக்கம் அவர் முன்கூறிய வடக்கிலிருந்து வருவோர் மூலம் அவரது நோக்கம் நிறைவேறுவது நிச்சயம்.
தொடரும்