
8 அக்டோபர் 2021

இஸ்தான்புல், துருக்கி, 10 ஆகஸ்ட் 2021, (BWNS) – கலாச்சாரம் பெண்கள் குறித்த கண்ணோட்டத்தை எப்படி வடிவமைக்கிறது? பாலின சமத்துவத்தை அடைய கலாச்சாரத்தின் எந்தக் கூறுகள் பங்களிக்கின்றன மற்றும் எவை தடையாக செயல்படுகின்றன?
“அதிகாரிகள், கல்வியாளர்கள், பொது சமூக அமைப்புகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் போன்ற பல்வேறு நபர்களுடன் கடந்த பல மாதங்களாக இந்தக் கேள்விகள் குறித்து ஆராய்வதற்கு நாங்கள் ஒன்றுகூடி வருகிறோம்” என்கிறார் துருக்கியின் பஹாய் வெளிவிவகார அலுவலகம் ஏற்பாடு செய்த தொடர் வட்டமேசை விவாதங்களின் பங்கேற்பாளர்களுள் ஒருவரான இஸ்தான்புல்லிலிருந்து வரும் ஒரு நாவலாசிரியர்.
துருக்கியில் பாலின சமத்துவம் பற்றிய சொற்பொழிவில், கலாச்சாரம் குறித்த கேள்வியை ஆராய ஒரு வாய்ப்பை வழங்கும் சில விவாதத் தளங்கள் உள்ளன. இந்த அவதானிப்பின் அடிப்படையில், கல்வி, கலைகள், குடும்ப வாழ்க்கை ஆகியன தொடர்புடைய கருப்பொருள்களைத் தொடும் இந்தத் தொடர் வட்டமேஜைகளை அலுவலகம் தொடங்கியது.

“சமூக மாற்றத்திற்கான அடிப்படையாக பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான சமத்துவம் குறித்த முக்கிய கொள்கை இந்த உரையாடல்களின் மையத்தில் உள்ளது” என வெளிவிவகார அலுவலகத்தின் சூஸன் கராமன் கூறுகிறார்.
இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்ட ஒரு பரவலான குறுக்களவு மக்கள் தங்கள் சமூகத்தின் மெய்ம்மையை ஆராய்வதற்கும் சமூக சக்திகளின் செயல்பாட்டை பகுப்பாய்வு செய்வதற்கும் ஒரு அரிய வாய்ப்பை வட்டமேஜைகள் வழங்கியுள்ளன என திருமதி கராமன் விளக்குகிறார்.
கல்வி குறித்த கருப்பொருளில் சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், பெண்கள் சக்தியளிப்பில் கவனம் செலுத்திய ஓர் அமைப்பின் பிரதிநிதி, கல்வியின் ஒவ்வோர் அம்சத்தையும் ஆராய வேண்டியதன் அவசியம் குறித்து கருத்து தெரிவித்தார். பாலினப் பாத்திரங்கள் குறித்த மக்களின் எண்ணங்கள் எவ்வாறு உருவாகலாம் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகப் பாடப்புத்தகங்களை மேற்கோள் காட்டி, அவர் குறிப்பிட்டார்: “ஒரு கணித பாடப்புத்தகத்தில் உள்ள விளக்கங்கள் கூட, சில பாத்திரங்களில் மட்டுமே பெண்களைச் சித்தரித்து, ஒரே மாதிரியான வடிவங்களை வலுப்படுத்தும்போது, அது சிந்தனா முறைகளை பாதிக்கவே செய்யும்.”
நாட்டின் ஒரு பெரிய பல்கலைக்கழகத்தின் மதத் துறையின் சமூகவியல் துறை தலைவரான மற்றொரு பங்கேற்பாளர் மேலும் விரிவுபடுத்தினார்: “கலாச்சாரத்தில் மாற்றம் என்பது கலாச்சார பன்முகத்தன்மையை அல்லது கலாச்சாரத்தின் நேர்மறையான அம்சங்களை சீர்குலைப்பதல்ல, மாறாக ஆணாதிக்க மரபுகள், ஸ்டீரியோடைப்புகள், சமத்துவத்தை அடைவதற்கு தடையாக இருக்கும் தலைமுறைகளாகக் கடந்து வந்துள்ள பாலின பாத்திரங்கள் ஆகியவற்றை மாற்றுவதாகும். “
கல்வி பெரும்பாலும் பொருளாதார இயக்கம் மற்றும் அதிக வேலை வாய்ப்புகளுக்கான வழிமுறையாகக் காணப்பட்டாலும், ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் மக்கள் அதிக அளவில் ஒற்றுமையைத் தேடுவதற்கும் சமூக மாற்றத்தை நோக்கிச் செயல்படுவதற்கும் ஒரு வகையான கல்வி தேவை என்பதை பங்கேற்பாளர்கள் அவதானித்தனர்.
“சமத்துவம் என்பது நமது சமுதாயத்தின் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கின்றது” என வட்டமேஜைகளின் பங்கேற்பாளரான உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுவதாவது: “இது வரலாறு முழுவதும் மனித குடும்பத்தின் மிகவும் புறக்கணிக்கப்பட்ட மற்றும் மீறப்பட்ட விழுமியங்களில் ஒன்றாகும். நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தாலும், சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் பங்களிக்கும் ஒவ்வொரு முயற்சியும் ஒரு வழிபாட்டைப் போன்றது, ஆதலால் அது பாராட்டத்தக்கதாகும். சமூகத்தில் இந்த விழுமியத்தைப் பற்றிய ஆழமான புரிதலை ஊக்குவிப்பதும், ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைவது முக்கியமாகும்.
செய்திச் சேவையுடன் பகிரப்பட்ட கருத்துக்களில், இக்கூட்டங்களின் ஒன்றிணைக்கும் சூழ்நிலையை ஓர் ஆசிரியர் விவரிக்கிறார்: “துருக்கியின் பல்வேறு பகுதிகளிலிருந்து, நாங்கள் ஒருவர் மற்றவரிடமிருந்து கற்றுக்கொள்ள எங்கள் கணினிகளுக்கு விரைகிறோம் – நாங்கள் பேசுகிறோம், செவிமடுக்கின்றோம், கேள்வி கேட்கிறோம், புரிந்துகொள்கிறோம். சில வழிகளில் நாம் அனைவரும் வித்தியாசமாக இருந்தாலும், நாம் ஒருவரை ஒருவர் நேசிக்கவும் நம்பவும் ஆரம்பித்திருக்கிறோம். இந்த வாய்ப்பு அதிக புரிதலையும் ஒற்றுமையையும் உருவாக்கியுள்ளது. இந்தச் சிரமங்கள் நிறைந்த உலகில் இது நம் ஆன்மாக்களுக்கும் இதயங்களுக்கும் மகிழ்ச்சியளித்துள்ளது.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1523/