
8 அக்டோபர் 2021

ஆக்லாந்து, நியூசிலாந்து, 24 ஆகஸ்ட் 2021, (BWNS) – நியூசிலாந்த் நாட்டின், ஆக்லாந்தின் மானுரேவா பகுதியில், சில இளைஞர்கள் பெருந்தொற்றின் போது வெளிப்பட்ட சில பிரச்சினைகளைக் கவனத்திற்குக் கொண்டுவர இசையைப் பயன்படுத்துவதுடன், பஹாய் சமூக நிர்மாணிப்பு முயற்சிகளில் அவர்களின் அனுபவங்களைப் பற்றிய ஒரு நேர்மறையான கண்ணோட்டத்தை வழங்குகிறார்கள்.
“எங்கள் அண்டைப்புறத்தில் உள்ள இளைஞர்களின் வாழ்க்கையில் இசை உண்மையில் ஒரு பெரிய பகுதியாகும்” என்கிறார் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒருவரான ஜெஃப்ரி சபோர். “சமுதாய மாற்றத்திற்குப் பங்களிக்கும் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக மனுரேவாவில் 1,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உள்ளனர். ஆதலால், ‘இசையின் மூலம் இன்னும் பலருக்கு இந்த முயற்சிகளின் நுண்ணறிவுகளை எவ்வாறு விரிவுபடுத்துவது? பாடலின் கதையை மக்கள் தொடர்புபடுத்தும் விதத்தில் எவ்வாறு ஆழமான யோசனைகளைப் பற்றி எழுதுவது, என எங்களை நாங்களே கேட்டுக்கொள்வதன் மூலம் ஆரம்பித்தோம்.
“நாம் அனைவரும் இணைக்கப்பட்டிருக்கிறோம்” என்ற தலைப்பில் ஒரு பாடலில், ஒற்றுமையைக் கண்டுணர்வதற்கான மனித திறனாற்றலை தொற்றுநோய் எவ்வாறு எடுத்துக்காட்டுகிறது என்பது குறித்து இளைஞர்கள் கவனத்தை ஈர்க்கின்றனர். இந்தப் பாடல் மனித உடலின் உருவகத்தைப் பயன்படுத்தி மனிதகுலத்தின் சார்புநிலையை விவரிக்கின்றது. அதில், ஒரு வரி: “ஒவ்வொரு மனிதனும் தனக்கே என்பது அனுமானம், ஆனால் ஓர் உயிரணு சொந்தமாகத் தானே செயல்பட முடியாது,” என வருகிறது.

மனுரேவாவைச் சேர்ந்த மற்றோர் இளைஞரான ஃபியா சகோபோ, அனைத்து பாடல்களிலும் சமூகத்திற்கான சேவையே அடிப்படை கருப்பொருளாக விளங்குகிறது என விளக்குகிறார்: “மனிதகுலத்தின் ஒற்றுமையையும் இடையிணைப்பையும் ஏற்றுக்கொள்வதற்கு நமது சிந்தனையில் ஆழமான மாற்றம் தேவை. ஆனால், தங்களுக்குள் உன்னதமான எண்ணங்கள் மட்டுமே போதாது.
“அவை செயல்களாக மாற்றம் பெற வேண்டும். நம் சக மனிதர்களுக்கு தன்னலமற்ற சேவை என்பது மனிதகுலத்தின் ஒற்றுமை மீதான நம்பிக்கையின் இயல்பான வெளிப்பாடாகும். இந்த உண்மை தொடர்ந்து செயல்கள் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
ஜெஃப்ரி இந்த பாடல்கள் எவ்வாறு ஆன்மீகக் கருத்துக்களை தங்கள் சமூக மெய்நிலை எதிர்நோக்கும் பிரச்சனைகளுடன் தொடர்புப்படுத்துகின்றன என்பதை விவரிக்கின்றார். இன்று, நம்பிக்கையின்மையை ஊட்டி, உதாரணத்திற்கு, லௌகீக மனநிறைவைத் தேடுவது போன்ற இளைஞர்களுக்கு சந்தைப்படுத்தப்பட்ட இசைவெள்ளத்திற்கு எதிராக, புத்துணர்ச்சியூட்டும் வகையில் இப்பாடல்கள் கவனம் செலுத்துகின்றன.
“இந்தச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள மனுரேவாவின் இளைஞர்கள் தங்கள் சமுதாயத்தின் சவால்களை நன்கு அறிந்துள்ளனர், மேலும், அவர்கள் கூட்டு ஒருமைப்பாடு, அறிவு மற்றும் கல்வியைத் தேடுதல் மற்றும் உண்மையான செழிப்பின் அர்த்தம் மற்றும் ஆன்மீகப் பரிமாணங்கள் போன்ற கருப்பொருள்களைக் கையாளும் பாடல்கள் மூலம் தங்கள் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் அவர்கள் பேணி வளர்த்த நம்பிக்கை உணர்வை வழங்க விரும்புகிறார்கள்.

இந்த பாடல்களை உருவாக்கும் அணுகுமுறையை விவரித்து, ஃபியா மேலும் விரிவாக விவரிக்கிறார்: “அண்டைப்புறத்திலிருந்து பலர் இந்த மற்றும் பல கருத்துக்களை ஒன்றாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கிறார்கள். இடையில், நுண்ணறிவுகளை ஈர்த்திட நாங்கள் கேள்விகளைக் கேட்கிறோம், பின்னர் அதிக கலந்துரையாடல்களை நடத்துகிறோம், இறுதியில் மக்களின் கவலைகளை குறித்துரைக்கும் ஒரு பாடலை உருவாக்கிட முயல்கிறோம்.
“மக்கள் இந்தப் பாடல்களைக் கேட்கும்போது, அவர்கள் அவற்றில் தங்கள் சொந்தக் குரலைக் கேட்கிறார்கள்.”
“மானுரேவா கலைத் திட்டத்தின்” ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட இசையை இங்கே காணலாம்.