
8 அக்டோபர் 2021
தன்னா, வனுவாத்து, 5 செப்டம்பர் 2021, (BWNS) – பொதுத்தலைவர்களும் உள்ளூர் தலைவர்களும் சமீபத்தில் செய்தி சேவையுடன் பேசுகையில், பஹாய் கோவில் நிறைவடைதல் குறித்த அதிகரித்திடும் எதிர்பார்ப்பு பற்றி மகிழ்ச்சியான உணர்வுகளையும் வலுவான உணர்வையும் தெரிவித்தனர். அவ்வேளை, தங்கள் சமுதாயத்தில் கோவிலின் ஒருங்கிணைக்கும் பங்கு குறித்தும் நம்பிக்கை தெரிவித்தனர்.
“இது உங்கள் இதயத்தில் மற்றொரு கோயிலைக் கட்டட்டுமாக” என மேற்கு தன்னாவின் பெத்தேல் கிராமத்தைச் சேர்ந்த தலைமை சாம் சுலி உசாமொலி, வழிபாட்டு இல்லம் பற்றிய தனது கருத்துகளில் கூறினார்.

“கோயில் கட்டி முடிந்தவுடன், நாம் மன்றத்திற்குள் பிரவேசிக்க வேண்டும், அதற்குள் பாடப்படும் வார்த்தைகள் நம் இதயத்தில் ஆழமாகப் பதியட்டும். … பின்னர் மாறுபட்ட நம்பிக்கைகள் கொண்ட மக்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி ஆலோசிக்க சிந்தனா ஒற்றுமையுடன் ஒன்றிணைவதால் முரண்பட்ட பார்வைகள் வெகுவாகக் குறையும்.
மற்ற கருத்துக்கள், மக்கள் அதிக ஒற்றுமையை அனுபவிக்கும் ஒரு நாள் வரும் என்பது குறித்த சில உள்ளூர் மரபுகளை எவ்வாறு கோயில் நிறைவேற்றிடும் என்பதை விவரித்தன.
“கோவிலின் வருகையும், தீவில் அது ஏற்கனவே ஏற்படுத்தியுள்ள தாக்கமும், தன்னா பாரம்பரியத்தை உறுதிப்படுத்துகின்றன, நம் மக்கள், தனித்த கரும்புகளாக இருந்து, ஒரு நாள் அவர்கள் ஒரே கட்டாகப் பிணைக்கப்படுவார்கள்” என்று வடக்கு தன்னாவின் இமாஃபின் கிராமத்தைச் சேர்ந்த முதல்வர் டாம் வாபின் கூறினார்.
“நீங்கள் ஒரு கரும்பை உடைக்கலாம், ஆனால் ஒரு கரும்புக் கட்டை உடைக்க முடியாது,” என அவர் கூறினார்.
மற்ற கருத்துகள் பஹாய் திருவாசகங்களில் மாஷ்ரிகுல்-அஸ்கார் எனக் குறிப்பிடப்படும் வழிபாட்டு இல்லத்தின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டிருந்தன. அதாவது “கடவுள் புகழ்ச்சியின் உதயஸ்தலம்”–அனைவருக்கும் திறக்கப்பட்ட ஓரிடமாக, பிரார்த்தனை மற்றும் சமுதாயத்திற்கான சேவை குறித்து ஊக்குவிக்கும் ஓரிடமாகத் திகழ்கின்றது.
“பலதரப்பட்ட மக்கள் ஏற்கனவே பிரார்த்தனை செய்து ஒன்றாக சேவை செய்வதைப் பார்க்கும்போது, வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக பயணிப்பார்கள், மற்றும் ஒரு சிறந்த வாழ்க்கை வரும் என எனக்குள் நம்பிக்கை பிறக்கிறது” என உள்ளூர் தேவாலயத்தின் பிரதிநிதி ஹெலன் வாப் கூறினார்.

அவர் மேலும் கூறுகிறார்: “பன்முகத்தன்மையில் ஒற்றுமை பற்றிய பஹாய் கருத்தை நான் கேட்கும்போது, அது ஒரு பிரகாசமாக ஒளிரும் ஓர் ஒளியைப் போன்றது. அதற்கு ஒவ்வொரு நபரும் தங்கள் சொந்த ஒளியைச் சேர்ப்பார்கள்.”
மேற்கு தன்னாவின் லோவினியோ பழங்குடியினரின் தலைவர் லவ்வா கோவிவி டேப், இந்த உணர்வுகளை எதிரொலித்து, இவ்வாறு குறிப்பிட்டார்: “முதல்வர்களாக, எங்கள் மக்களுக்கு கடினமான பிரச்சினைகளுக்கு உதவ நாங்கள் முயல்கின்றோம், மேலும் இந்த வழிபாட்டு மன்றம் அதற்கு எங்களுக்கு உதவிடும். தன்னாவில் உள்ள முதல்வர்கள் அனைவரும் அதன் அரவணைப்பில் ஒற்றுமையாக இருப்பதோடு, நம் சமுதாயத்திற்கு சேவை செய்ய இன்னும் அதிக உத்வேகம் பெறுவார்கள் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

மனிதகுலத்தின் ஒற்றுமை குறித்த கொள்கையின் வளர்ந்து வரும் விழிப்புணர்வைப் பற்றி குறிப்பிடுகையில், வனுவாத்துவின் பஹாய் தேசிய ஆன்மீக சபையின் உறுப்பினர் நாலாவ் மனகெல் கூறினார்: “2017 ஆம் ஆண்டில் கோவிலின் வடிவமைப்பை வெளியிட்டதிலிருந்து, கூட்டு வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகப் பிரார்த்தனை செய்ய விரும்பும் மக்களை மேன்மேலும் பார்க்கின்றோம்.”
மேற்கு வடக்கு தன்னாவைச் சேர்ந்த உள்ளூர் தலைவர் ஜோ நம்புவான் மேலும் கூறுகிறார்: “பலதரப்பட்ட மக்கள் முன்பு பார்க்கப்படாத வகையில் ஒன்றாகப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துள்ளனர். … பஹாய் வழிபாட்டு இல்லம் அமைதியை ஏற்படுத்துகிறது. இது சமூகங்களுக்கு ஒற்றுமையை நிலைநாட்டவும் பராமரிக்கவும் உதவும்.
தன்னாவில் உள்ள பஹாய் உள்ளூர் ஆன்மீக சபையின் உறுப்பினர் எலோடி நலாவாஸ் மேலும் விரிவாக விளக்குகிறார்: சமாதான கலாச்சாரத்திற்கு பங்களிக்கும் விருப்பமானது, சமூகத்திற்குச் சேவை செய்யும் திறனை வளர்க்கும் பஹாய் கல்வித் திட்டங்களின் மூலம் பேணப்படுகிறது.
“அனைத்து பின்னணியிலும் உள்ள மக்கள், கோயிலால் ஈர்க்கப்பட்டு, தங்கள் சமூகங்களுக்கு சேவை செய்ய விருப்பம் தெரிவிக்கிறார்கள், ஆனால் ‘நாங்கள் அதை எப்படி செய்வது?’ என கேட்கிறார்கள்.
“பஹாய் கல்வி முயற்சிகளில் பங்கேற்பதன் மூலம், அவர்கள், உதாரணத்திற்கு, இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் தார்மீகக் கல்விக்குப் பங்களிக்கும் திறனை வளர்த்துக் கொள்கிறார்கள். உணவு பாதுகாப்பு தொடர்பான விவசாய முயற்சிகள் போன்ற சமூக நடவடிக்கைகளுக்கான செயல்பாடுகளைப் பலர் மேற்கொள்கின்றனர். இத்தகைய முயற்சிகள் வெவ்வேறு நபர்களை ஒன்றிணைக்கவும், கலந்தாலோசிக்கவும், தங்கள் சமூகங்களில் உள்ள பல்வேறு சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கூட்டாகச் செயல்படவும் அனுமதிக்கின்றன.
உள்ளூர் வழிபாட்டு இல்லத்தின் கட்டுமானத்தில் நிலையான முன்னேற்றத்துடன், சமீபத்திய மைல்கற்களில் மத்திய கட்டிடத்தின் எஃகு அமைப்பு, அதன் கூரை மற்றும் உச்சவரம்பு மரச்சட்டத்தை நிறுவுதல் ஆகியவை அடங்கும். உட்புறம் பூட்டப்பட்ட கூறை பேனல்களும் அவற்றின் இடத்தில் அமைக்கப்படத் தொடங்கியுள்ளன. மூலாதாரம்: