மலேசியா: பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஒற்றுமையை ஊக்குவித்தல்


மலேசிய பஹாய்கள் தங்கள் சமுதாயத்தில் ஒரு குறுக்குவெட்டினரிடையே, அதிக சமுதாய ஒத்திசைவை எவ்வாறு ஏற்படுத்துவது என்பது குறித்த ஓர் ஆக்ககரமான உரையாடலைப் பேணி வருகின்றனர்.

14 September 2021


கோலாலம்பூர், மலேசியா – கலாச்சார, மத மற்றும் மொழியியல் பன்முகத்தன்மை கொண்ட மலேசியாவில், மேலும் அதிக சமூக ஒற்றுமையை எவ்வாறு பேணுவது என்பது பற்றிய தேசிய உரையாடலானது சமுதாய ஸ்தாபனங்கள், அரசாங்கம் ஆகியவற்றின் பொறுப்புகளில்–குறிப்பாகப் பெருந்தொற்றின் போது–கவனம் செலுத்துகிறது. எவ்வாறிருப்பினும், சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளும் ஒற்றுமையை ஸ்தாபிப்பதற்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது பற்றி மிகக் குறைவான விவாதமே உள்ளது.

மலேசியாவின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் இந்த அவதானிப்பே, ஒற்றுமையின் ஆழமான தாக்கங்கள், மனிதகுல ஒற்றுமை குறித்த கொள்கை ஆகியவற்றை ஆராய கல்வியாளர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் நாட்டின் சமய சமூகங்களின் பிரதிநிதிகளை ஒன்றிணைக்கும் “ஒற்றுமையின் முன்னணியாளர்கள்” என்னும் தலைப்பில் ஒரு கலந்துரையாடல் தொடருக்கு உந்துதலாக அமைந்தது.

“ஒற்றுமை என்பது எல்லாரின் நாட்டமாக இருக்கவேண்டும்; எல்லாருமே நம் நாட்டின் மேம்பாட்டிற்குப் பங்களிக்க முடியும் என்பதை நாம் அங்கீகரித்தே ஆக வேண்டும்” என்றார் வெளிவிவகார அலுவலகத்தின் திரு வித்யாகரன் சுப்ரமணியம்.

அவர் மேலும்: “இதில் தனிநபர்களுடன், சமூகங்கள், சமுதாய ஸ்தாபனங்கள் ஆகிய ஒவ்வொன்றுக்கும் ஒரு பங்குள்ளது; ஒற்றுமையின் ஸ்தாபிதம், இந்த குறிக்கோளை நோக்கி இந்த மூன்று முன்னணியாளர்களும் எவ்வளவு சிறப்பாக ஒன்றுசேர்ந்து பணிபுரிகிறார்கள் என்பதைப் பொறுத்துள்ளது.”

ஒரு மேலும் ஒத்திசைவான சமுதாயத்தை நிர்மாணிப்பதில் உரையாடலின் பங்கு குறித்த சமீபமான ஓர் ஒன்றுகூடலில், பங்கேற்பாளர்கள் பஹாய் கொள்கையான கலந்தாலோசனையை ஆராய்ந்தனர்.  “பொது தளங்களில், பல உரையாடல்கள் சொற்போர் உருவில் நடைபெறுகின்றன—வெவ்வேறு குழுவினர் தங்களின் கருத்துகளை வெளியிடுகின்றனர்; இந்த கருத்துகள் ஒன்று மற்றொன்றுடன் முரண்படுவதாக அனுமானிக்கப் படுகின்றது.  “இணக்கத்தையும் ஒற்றுமையையும் உருவாக்குவதில் இவ்வித பரஸ்பர செயற்பாடுகள் சிறிதளவே பங்களிக்கின்றன,” என்றார் வெளிவிவகார அலுவலகத்தின் மற்றோர் உறுப்பினரான டிலேன் ஹோ.

மலேசிய பஹாய் வெளிவிவகார அலுவலகம் நடத்திய ஒரு கலந்துரையாடல் தொடரில் ஒற்றுமையை வளர்ப்பதில் பொது சமூக அமைப்புகளின் பங்கைப் பிரதிபலிக்கும் பல்வேறு அமைப்புகளின் நிறுவனர்கள் மற்றும் இயக்குனர்கள்.

அவர் மேலும் தொடர்ந்து, “ஒரு பொது புரிந்துணர்வை உருவாக்குவதற்கு நம்பிக்கை தேவைப்படுகின்றது,” என்றார். ஒரு பாதுகாப்பான, எல்லாருக்குமான மரியாதை உணர்வால் ஊடுருவப்பட்டுள்ள, மக்கள் மரியாதையுடன் பேசி, ஒரு திறந்த மனப்பான்மையுடன் ஒரு பணிவுமிகு நிலையில் மற்றவர்கள் கூறுவதை செவிமடுக்கும் ஒரு கலந்துரையாடல் தளம் உருவாக்கப்படும்போது நம்பிக்கை ஸ்தாபிக்கப்படுகின்றது.  உரையாடல்களை நாம் இவ்விதம் அணுகும்போது, வேறுபட்ட குறிக்கோள்களைக் கொண்டவர்களாகக் காணப்படும் பல்வகையான பின்னணிகளிலிருந்து வரும் மக்கள், பொது உடன்பாட்டுக்கான விஷயங்களைக் காண முடிந்தும் வேறுபாடுகளைத் தாண்டிவரவும் முடிகிறது.”

வெவ்வேறு அமைப்புகளின் ஸ்தாபகர்கள் மற்றும் நிர்வாகிகளை உள்ளடக்கிய மற்றோர் ஒன்றுகூடலின் பங்கேற்பாளர்கள், மேலும் அதிக ஒற்றுமைக்குப் பங்களிப்பதில் பொது சமுதாய அமைப்புகளின் பங்கு குறித்துப் பிரதிபலித்தனர்.

மனிதர்களின் மேன்மைத் தன்மையின் மீது வைக்கப்பட வேண்டிய திடநம்பிக்கை அங்கு வெளிப்பட்ட மற்றொரு பொது கருப்பொருள்.  ஒவ்வொரு நரும் நிறையவே பங்களிக்கூடியவராவார்..  எல்லாரிடத்திலும் நல்ல விஷயங்கள் உள்ளன என்பதை நாம் நம்ப வேண்டும். இதை நாம் நம்பும்போது, ஒற்றுமைக்கு எதிரான பல அச்சங்களையும் தடைகளையும், குறிப்பாக பிறரைப் பற்றிய பயத்தை நாம் வெற்றிகொள்ள இயலும்.

இந்தக் கலந்துரையாடல் தொடரின் பிற கலந்துரையாடல்கள், பெண் ஆண் சமத்துவம் குறித்த கொள்கையின் அடிப்படையில் குடும்பம் என்னும் ஸ்தாபனத்தை மறுபரிசீலனை செய்வதன் அவசியம் குறித்து ஆராய்ந்துள்ளன.

தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியத்தின் முன்னாள் துணை இயக்குநர் (கோட்பாடு) அஞ்ஜிலி டோஷி, “முரண்பாடுகளைத் தீர்க்க நாம் கற்றுக்கொள்ளும் விதம் குடும்பத்திற்குள் தொடங்குகிறது,” என்றார்.

குடும்பத்திற்குள் பேணப்படும்போது, முரண்பாடுகளைத் தீர்க்கும் திறன், பொது நன்மையை நோக்கிய முயற்சிகளின் மூலம் எவ்வாறு வெளிப்பாட்டைக் காண முடியும் என்பதை டாக்டர் தோஷி தொடர்ந்து விளக்கினார். “நாம் அனைவரையும் மனிதராகப் பார்க்க வேண்டும்; நமது சொந்த இனமக்களின் நலனில் மட்டும் அக்கறை கொள்ளாமல் ஒருவர் மற்றவருக்கு உதவ வேண்டும்;,” என அவர் கூறினார்.

எதிர்கால ஒன்றுகூடல்கள், ஒற்றுமையை வளர்ப்பதில் ஊடகங்கள் மற்றும் மதத்தின் பங்கை ஆராயும். இந்தத் தொடர் முடிந்தவுடன், பஹாய் வெளிவிவகார அலுவலகம், சமூக ஒற்றுமை பற்றிய சொல்லாடலுக்கான ஒரு பங்களிப்பாகக் கலந்துரையாடல்களில் இருந்து அகப்பார்வைகள் மற்றும் அனுபவங்களை ஒரு வெளியீடாக ஒன்றுதிரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1532/