டைட்டானிக் கப்பலின் மறக்கப்பட்ட ஆனால் “பிழைத்துவந்தவர்”
(இக்கட்டுரை 2012-இல் எழுதப்பட்டது)
04/12/2012 10:26 am ET Updated Dec 06, 2017
https://www.huffpost.com/entry/abdul-baha_b_1419099
கதைகள் அனைத்திலும், மிகவும் அசாதாரனமான ஒரு கதை, ஓர் அறுபத்தெட்டு வயதுடைய பாரசீகரைப் பற்றியது. இவர் உண்மையில் அக்கப்பலில் போகவேண்டியவர் ஆனால் போகவில்லை.
அப்பாஸ் எஃபெண்டி – அப்துல்-பஹா அல்லது “கடவுளின் சேவகர்” என அறியப்பட்டவர். இவர் ஐரோப்பா மற்றும் ஐக்கிய அமெரிக்காவில், ஒரு தத்துவ ஞானி, அமைதிக்கான தூதர், இயேசுவின் மறுவருகை என நாளிதழ்களால் பாராட்டப்பட்டிருந்தார். அவரது அமெரிக்க அன்பர்கள் டைட்டானிக் கப்பலில் பிரயாணம் செய்வதற்காக அவருக்கு பல ஆயிரம் டாலர்களை அனுப்பி, பெரும் படாடோபத்துடன் (டைட்டானிக் கப்பலில்) பிராயணம் செய்திட வேண்டினர். ஆனால் அவரோ அதை மறுத்து, அப்பணத்தை தர்ம காரியங்களுக்கு வழங்கினார்.
“நான் டைட்டானிக் கப்பலில் பயணம் செய்திட கேட்டுக்கொள்ளப்பட்டேன், ஆனால் என் மனம் அதற்கு இடங்கொடுக்கவில்லை,” என அவர் பின்னர் கூறினார்.
அதற்கு மாறாக, அப்துல்-பஹா மிகவும் அடக்கமான SS செட்ரிக் கப்பலில் நியூ யார்க்கிற்கு பயணம் மேற்கொண்டார். நியூ யார்க் நகரின் எல்லா முக்கிய நாளிதழ்களும் ஏப்ரல் 11-இல் அவரது வருகை பற்றியும் அதைத் தொடர்ந்த ஐக்கிய அமெரிக்காவில் அவரது ஒரு கோடியிலிருந்து மறு கோடிவரையிலான பிரயாணங்கள் பற்றியும் எழுதின. “கிழக்கத்திய உடையில்” தோன்றிய இந்தத் தலைப்பாகை அனிந்த வெளிநாட்டவர் முதல் பக்க செய்தியினராக விளங்கினார்.

நியூ யர்க் டைம்ஸ் அவரது பணி “தப்பெண்ணங்களை அகற்றுவது” என அறிவித்தது… தேசியம், இனம், மதம் ஆகியவற்றின் தப்பெண்ணங்கள்.” அக்கட்டுரை அவரை நேரடியாக மேற்கோள் காட்டுகிறது: “மனித உலகின் ஒருமைக்கான பதாகையை உயர்த்துவதற்கான நேரம் வந்துவிட்டது. இதன்மூலம் பிடிவாத சூத்திரங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் முடிவுக்கு வரக்கூடும்.”
பத்திரிகைகள் அவரை ஒரு தீர்க்கதரிசி என குறிப்பாக ஒரு “பாரசீக தீர்க்கதரிசி” என அடிக்கடி அழைத்தன, (ஒலிபெயர்ப்பு!). ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் அவரது உரையைத் தொடர்ந்து, ஒரு தலைப்பில், பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது: “தீர்க்கதரிசியானவர் தாம் ஒரு தீர்க்கதரிசியல்ல எனக் கூறுகிறார்.” அவர் தீர்க்கதரிசி விஷயத்தைத் தொடர்ந்து மறுத்து வந்தாலும், அப்துல்-பஹா உண்மையில் அப்போதைய ஆரம்பகால பஹாய் சமயத்தின் தலைவராக இருந்தார்.

அனைத்து மதங்களின் ஒற்றுமையில் வேரூன்றிய தனது தந்தை பஹாவுல்லாவினால் 1800-களின் நடுப்பகுதியில் நிறுவப்பட்ட சமயத்தை அவர் போதித்தார். அந்த நேரத்தில் அமெரிக்காவில் சில நூறு பஹாய்கள் மட்டுமே இருந்தன; இன்று 150,000 பேர் உள்ளனர். ஒவ்வொரு நாளும், மாதத்திற்கு மாதம், அமெரிக்கா முழுவதும் (பெரும்பாலும் ஆயிரக்கணக்கில்) அவரது உரையைச் செவிமடுக்க கூட்டம் திரண்டது. யூத ஆலயங்களில் அவர் கிறிஸ்துவைப் புகழ்ந்தார். தேவாலயங்களில் அவர் முகமதுவின் போதனைகளைப் புகழ்ந்தார். அவரது பயணங்கள் முழுவதும் ஆண்ட்ரூ கார்னகி, அலெக்சாண்டர் கிரஹாம் பெல் மற்றும் கஹ்லில் ஜிப்ரான் போன்ற மேதைகள் அவரது தோழமையை நாடினர்.

அப்து’ல்-பஹா எவ்வாறு பலருக்கு உத்த்வேகமூட்ட முடிந்தது – மேற்கத்திய கலாச்சாரத்திற்கு வெளிப்படுத்தப்படாத, கிழக்கிலிருந்து அறியப்படாமல் இருந்த இந்த நபர், தமது மதத்திற்காக சுமார் 40 ஆண்டுகள் சிறையில் கழித்தார், அவர் பள்ளி சென்றவரும் இல்லை.
சொல்வது மட்டுமின்றி, அவர் என்ன செய்தார் என்பதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். “அவர் தமது இரவு உணவு மேஜையில் பாரசீக, ஜோரஸ்தரர், யூதர், கிரிஸ்துவர், மற்றும் இஸ்லாமியரை ஒன்று சேர்த்த ஒரே மனிதராவார்” என நியூயார்க் டிரிப்யூன் நாளிதழின் கேட் கேர்வ் (அவரது காலத்தின் லிஸ் ஸ்மித்) எழுதினார். பின்னர் அதே செய்தியில், அவரது நிருபர் முத்திரையின்றி, கீழ் கிழக்கு பக்கத்தில் போவரி மிஷனுக்கு அப்துல்-பஹாவின் விஜயத்தைப் பற்றி விவரிக்கப்படுகிறது – அங்கு அவர் தனிப்பட்ட முறையில் 400 வீடற்ற ஆண்களுக்கு வெள்ளி நாணயங்கள் வழங்கினார்.

தமது அமெரிக்க விஜயம் முழுவதிலும் அவர் உரையாற்றிய எல்லா இடங்களும் அனைத்து இன மக்களுக்கும் திறந்தே இருக்க வேண்டும் என வலியுறுத்தியதன் மூலம் இனவாரியாக பிரித்தல் எனும் சமூக முறையை ஒதுக்கித் தள்ளினார். அந்நேரத்தில் அது மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு பெரிய விஷயமாக இருக்கவில்லை. 57-வது தெருவில் உள்ள கிரேட் நார்த்தர்ன் ஹோட்டலின் (இப்போது பார்க்கர் மெரிடியன்), மேலாளர் தமது கட்டிடத்திற்குள் எந்த கறுப்பர்களையும் அனுமதிக்க வன்மையாக மறுத்துவிட்டார்.
“ஒரு கருப்பின நபர் என் ஹோட்டலுக்குள் நுழைவதை மக்கள் பார்த்தால், எந்த மரியாதைக்குரிய நபரும் அதில் காலடி எடுத்து வைக்கமாட்டார்,” என அவர் கூறினார். எனவே, அப்து’ல்-பஹா அதற்கு பதிலாக அவரது அன்பர்களுள் ஒருவரின் வீட்டில் ஒரு பல்லின விருந்தை ஏற்பாடு செய்தார். பல வெள்ளையர்கள் கறுப்பர்களுக்குச் சேவை செய்தனர் – அந்த நேரத்தில் அது ஒரு கீழறுக்கும் அபாயகரமான கருத்தாகும்.
மனிடரிடையில் மட்டுமே தோல் நிறம் முரண்பாட்டிற்கான ஒரு காரணமாக இருக்கின்றது என அப்துல்-பஹா ஒருமுறை குறிப்பிட்டார். “விலங்குகள், அவற்றுக்கு பகுத்தறிவோ புரிதலோ இல்லை என்னும் போதிலும், அவை வர்ணங்களை மோதலுக்குக் காரணமாக ஆக்குவதில்லை. பகுத்தறிவு உள்ள மனிதன் மட்டும் ஏன் முரண்பாட்டை உருவாக்க வேண்டும்?”
அப்துல்-பஹாவின் உரைகள் பார்வையாளர்களை ஒரு தீவிர எளிமையுடன் ஊடுருவின. அவர் அமெரிக்கர்கள் இன்னும் தொடர்ந்து ஒரு நூற்றாண்டு கழித்தும் போராடி வரும் கருத்துக்களை அன்று முன்வைத்தார்: உண்மையான இன நல்லிணக்கம் மற்றும் பாலின சமத்துவத்திற்கான தேவை; அதீத செல்வம் மற்றும் வறுமையை ஒழித்தல்; தேசியவாதம் மற்றும் மதவெறியின் அபாயங்கள்; மற்றும் உண்மையை சுயாதீனமாகத் தேடுதல் குறித்த வலியுறுத்தல். அவை ஒவ்வொன்றும் 2012-லும் எதிரொலிக்கின்றன அல்லவா?

நூறு ஆண்டுகளுக்கு முன்பு நமது நாடு முழுவதும் பரவிய அவரது ஒற்றுமைக்கான திருப்பணி, காந்தி, தலாய் லாமா மற்றும் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோரின் செய்திகளுடன் கொண்டாடப்பட வேண்டும்.
ஐந்தாவது அவென்யூ மற்றும் 10-வது தெருவில் உள்ள நியூயார்க்கின் சர்ச் ஆஃப் அசென்ஷனில் – அமெரிக்காவில் அவரது முதல் பொது உரையில் – அப்துல்-பஹா கலை, விவசாயம் மற்றும் வர்த்தகத்தில் அமெரிக்காவின் லௌகீக முன்னேற்றத்தை பாராட்டினார். ஆனால் நமது ஆன்மீக திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனும் ஓர் எச்சரிக்கையுடனேயே அதைச் செய்தார்.

“மனிதனுக்கு இரண்டு இறக்கைகள் அவசியம். ஓர் இறக்கை பௌதீக சக்தியும் லௌகீக நாகரீகமும்; மற்றது ஆன்மீக சக்தியும் தெய்வீக நாகரீகமும் ஆகும். ஓர் இறக்கையுடன் பறக்க முடியாது.”
இந்த சொற்பொழிவை அவர் 14 ஏப்ரல் 1912’இல் ஆற்றினார். அன்று அதே நாளில் டைட்டானிக் கப்பல் ஒரு பனிப்பாறையில் மோதியது.