
17 செப்டம்பர் 2021

பாக்கு, அஜர்பைஜான், 17 செப்டம்பர் 2021, (BWNS) – அஜர்பைஜானில் தேசிய நிலையிலான பிரச்சினைகளை ஆராயும் ஒரு புதிய வீடியோ கலந்துரையாடல் திட்டம் நாட்டின் பஹாய் வெளியுறவு அலுவலகத்தால் துவங்கப்பட்டுள்ளது.
அந்த அலுவலகத்தின் ரமஸான் அஸ்கர்லி, “சொல்லாடல் டிவி” என தலைப்பிடப்பட்ட இந்தத் திட்டம், அஜர்பைஜானி பஹாய் சமூக முயற்சிகளின் ஒரு பகுதியாக சமூக ஊடகத் தளங்களில் வெளியிடப்படுகிறது என விளக்குகிறார்.
“பல ஆண்டுகளாக, ஒரு நீண்ட காலத்திற்கு தொடர்ந்து ஒரு தலைப்பைக் குறித்துரைக்கும் சில சமூகத் தளங்களே இருப்பதை நாங்கள் கவனித்தோம். அதனால்தான், ஆண்கள் மற்றும் பெண்களின் சமத்துவம், சமூகத்திற்கு சேவை செய்யும் திறனாற்றலை உருவாக்குவதில் தார்மீகக் கல்வியின் பங்கு, சமூகத்தில் ஊடகங்களின் பங்கு, மற்றும் அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையிலான நல்லிணக்கம் போன்ற தலைப்புகளின் தொகுப்பை மீண்டும் பார்வையிடும் ஒரு கலந்துரையாடல் திட்டத்தை உருவாக்க முடிவு செய்தோம்” என அவர் கூறுகிறார்.
அஜர்பைஜானில் உள்ள பலர் இணையதளத்தில் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதால், வீடியோ திட்டத்திற்கான வெளியீடாக சமூக ஊடகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன என திரு. அஸ்கர்லி தொடர்ந்து விளக்குகிறார். ஆனால், இந்தப் பரிமாற்றங்கள் ஒன்று மற்றொன்றுடன் தொடர்பில்லா பல துணுக்குகளாக உள்ளன. இதனால், எந்த ஒரு தலைப்பின் மீதும் சிந்தனா பரிணாம வளர்ச்சியைக் காண்பது கடினமாக்கப்பட்டுள்ளது.
அவர் மேலும் கூறுகிறார்: “இந்தத் திட்டத்தை உருவாக்குவதன் மூலம், பல்வேறு சமூக முன்னணியாளர்ககள் பிரச்சினைகளை ஆழமாக ஆராய ஒரு கலந்துரையாடல் தளத்தை வழங்குவோம் என நம்புகிறோம். இதன் மூலம், காலப்போக்கில் சிந்தனை எவ்வாறு விரிவடைகிறது என்பதை மக்கள் பார்க்க முடியும்.”
பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் குறித்த பஹாய் கொள்கை மீதான சமீபத்திய நிகழ்ச்சியில், ஒரு கவிஞரான அடிலே நசார், இந்த முயற்சிக்குத் தனது பாராட்டை வெளிப்படுத்தினார்: “இணைய தளங்களில் சமத்துவம் பற்றிய சொற்பொழிவை ஊக்குவிப்பது இந்த முக்கிய கொள்கையின் புரிதலை வலுப்படுத்த பெரிதும் பங்களிக்கும். தாஹிரியின் (பஹாய் வரலாற்றின் ஆரம்பத்தில் ஒரு முக்கிய நபர்) ஓர் அபிமானி என்னும் முறையில், அவர் ஆதரித்த போதனைகள் மேலும் மேலும் பேசப்பட வேண்டும்.”
தேசிய கலாச்சார சங்கத்தின் தலைவரும், அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையிலான நல்லிணக்கம் குறித்த ஒரு அத்தியாயத்தில் விருந்தினராக கலந்து கொண்ட ஃபுவாட் மம்மடோவ் கூறுகிறார்: “இந்த முன்முனைவு நமது சமூகத்திற்கு ஒரு முக்கியமான பங்களிப்பாகும்.

இத்தலைப்புகளிலான உரையாடல்கள் பெரும்பாலும் கல்வி மட்டத்தில் மட்டுமே ஆராயப்படுகின்றன,” என டாக்டர் மம்மடோவ் தொடர்ந்தார், “ஆனால் இந்தத் திட்டம் இந்த கலந்துரையாடல்களில் மேலும் பலரைச் சேர்ப்பதற்கு உதவும்.”
திட்டத்தின் எதிர்காலத்தைப் பார்க்கும்போது, இந்த முன்முனைவு போர் மற்றும் முரண்பாட்டைக் கடந்து செல்வதற்கான மனிதத் திறனை மறுக்கும் மனித இயல்பு பற்றிய பாழான அனுமானங்களுக்கு சவாலிட இயலுமென வெளியுறவு அலுவலகம் நம்புகிறது என திரு. அஸ்கர்லி விளக்குகிறார்.
அவர் பின்வருமாறு கூறுகிறார்: “ஊடகங்களில் பரப்பப்படும் பல செய்திகள் மனிதர்களின் தாழ்ந்த இயல்பை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் வரும் உரையாடல்கள் மக்களின் ஆன்மீக இயல்பை முன்னிலைப்படுத்த முடியுமென நாங்கள் நம்புகிறோம். அவ்வாறு செய்வதன் மூலம், நமது சமூக மேம்பாட்டிற்கான நடவடிக்கையை ஊக்குவிக்கின்றோம்
“சொல்லாடன் தொலைக்காட்சியின்” நிகழ்ச்சிகளை இந்த யூடியூப் சேனலில் காணலாம்
மூலாதாரம்: https://news.bahai.org/story/1533/