
8 அக்டோபர் 2021

ரெய்க்ஜாவிக், ஐஸ்லாந்து-கித்தாப்-இ-அக்டாஸ் திருநூல் முதன்முறையாக ஐஸ்லாந்தியில் வெளியிடப்பட்டுள்ளது, இது ஒரு முழு மக்களுக்கும் பஹாவுல்லாவின் அதிப் புனித நூல் கிடைப்பதற்கு வழி செய்கிறது.
“இது ஐஸ்லாந்து பஹாய்களின் நீண்ட நாள் கனவின் நிறைவேற்றமாகும்” என்கிறார் ஐஸ்லாந்து பஹாய் தேசிய ஆன்மீக சபையின் உறுப்பினர் ஹால்டார் தோர்கெயர்சன். “அப்துல்-பஹா மறைவின் நூறாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த இத்தருணத்தில் இது மிகப்பெரிய சாதனையாகும்.”
கித்தாப்-இ-அக்டாஸ் என்பது பஹாவுல்லாவின் சட்டப் புத்தகமாகும், இது முதன்முதலில் 1873-இல் அரபு மொழியில் எழுதப்பட்டது. அப்போது, பஹாவுல்லா அக்காநகர சிறையில் இருந்தார்.
கித்தாப்-இ-அக்டாஸ் அறிமுகத்தில் உலக நீதிமன்றம் எழுதியது: “பஹாவுல்லாவின் திருவாக்குகளைக் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில், கிடாப்-இ-அக்தாஸ் தனித்துவ முக்கியத்துவம் வாய்ந்தது. ‘உலகம் முழுவதையும் புதிதாக உருவாக்குதல்’ என்பது அவரது செய்தியில் அடங்கியுள்ள கோரிக்கையும் சவாலுமாகும், மேலும் கித்தாப்-இ-அக்டாஸ் பஹாவுல்லா எழுப்ப வந்த எதிர்கால உலக நாகரிகத்திற்கான ஒரு சாசனமும் ஆகும்.
கித்தாப்-இ-அக்டாஸின் முதல் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு 1992-இல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. இது பஹாவுல்லா மறைந்து நூறாம் நினைவாண்டை குறித்தது. அதன் பின்னர் கடந்த மூன்று தசாப்தங்களாகப் பிற மொழிகளிலும் மொழிபெயர்ப்புகள் வந்தவன்னமாக இருக்கின்றன.
உரையை தட்டச்சு செய்து, வெளியீட்டிற்தகு தொகுப்பைத் தயாரிக்க உதவிய ஜெஃப்ரி பெட்டிபீஸ், ஐஸ்லாந்திய மொழிபெயர்ப்பை உருவாக்கும் முயற்சி எவ்வாறு ஒரு முக்கியத்துவமிக்க முயற்சியாக இருந்தது என்பதை விளக்குகிறார்.
“ஐஸ்லாந்தியர்களுக்கு எங்கள் மொழியை மிகவும் முக்கியமாகும்,” என அவர் கூறுகிறார். “ஒலிநயம் மற்றும் உருவகம் போன்ற கவிதைக் கூறுகளைப் பயன்படுத்தும் அதே வேளை, இந்த மொழிபெயர்ப்பு அர்த்தங்களின் துல்லியத்தையும் பராமரிக்கின்றது.”
திட்டத்தின் முன்னணி மொழிபெயர்ப்பாளரான எட்வர்ட் ஜான்சன், புதிய வெளியீட்டின் முக்கியத்துவம் குறித்து பிரதிபலிக்கிறார்: “பஹாவுல்லாவின் திருவாக்குகள் மனிதகுலத்திற்கு ஒரு புதிய வகையான மொழியை வழங்குகின்றன – அஃதாவது, ஆன்மீக மெய்நிலையைப் பற்றிய அகப்பார்வையைக் கொடுக்கும் மொழி.”
கடவுள் திருவாக்கு ஒருவரின் சொந்த மொழியில் கிடைக்கும்போது அது இதயத்தில் ஓர் ஆழமான விளைவை உண்டாக்குகின்றது. இது வெளிப்பாட்டின் புதிய வடிவங்கள் மற்றும் கருத்துகளால் நிரப்பப்பட்ட ஒரு கடலுக்குள் ஈர்க்கப்படுவது போன்றதாகும். காலங்காலமாக ஐஸ்லாந்து இலக்கியத்தில் இது போன்ற ஒன்று என்றுமே இருந்ததில்லை.