

8 அக்டோபர் 2021
அடிஸ் அபாபா, எத்தியோப்பியா, 1 அக்டோபர் 2021, (BWNS) – பஹாய் சர்வதேச சமூகத்தின் (BIC) அடிஸ் அபாபா அலுவலகம் சமீபத்தில் விஞ்ஞானிகள், சமய சமூகங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது சமூக அமைப்புகளை, காலநிலை மாற்றம் பற்றிய விவாதங்களுக்கு அறிவியல் மற்றும் மதத்தின் நுண்ணறிவுகள் எவ்வாறு அறிவூட்ட முடியும் என்பதை ஆராய ஒன்றுகூட்டியது.
“இறுதியில், சுற்றுச்சூழல் நெருக்கடியின் மையத்தில் ஒரு ஆன்மீக நெருக்கடி உள்ளது” என அடிஸ் அபாபா அலுவலகத்தின் சாலமன் பெலே கூறுகிறார்.
டாக்டர் பெலே, சுற்றுச்சூழல் பற்றிய சொல்லாடலில் அதிக கவனம் செலுத்தப்பட்ட போதிலும், குறிப்பாக 26-வது ஐக்கிய நாடுகள், COP 26 என அழைக்கப்படும், காலநிலை மாற்ற மாநாட்டிற்கு முன்னதாக நவம்பர் மாதத்தில், விஞ்ஞானம் மற்றும் மதம் இரண்டும் சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு ஒரு பயனுள்ள விடையிறுப்பை எவ்வாறு விளைவுத்திறத்துடன் வழிநடத்த முடியும் என்பதில் குறிப்பாக கவனம் செலுத்தும் சில கலந்துரையாடல் தளங்கள் உள்ளன என தொடர்ந்து விளக்குகிறார்.

அவர் மேலும் கூறுகிறார்: “நாம் அனைவரும் — ஒவ்வொரு நபர், நிறுவனம் மற்றும் நாடும் — சுற்றுச்சூழலின் பாதுகாவலர்கள். பிரச்சனையின் அளவானது, ஐக்கியப்பட்ட நடவடிக்கையை அவசியமாக்குகிறது, இந்த நடவடிக்கையானது, இருக்கின்ற சிறந்த அறிவியல் ஆதாரங்களால் அறிவூட்டப்படுவதுடன், நீதி மற்றும் மனிதகுல ஓருமை போன்ற ஆன்மீகக் கொள்கைகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளது.
இந்தக் கூட்டமானது, சுற்றுச்சூழலுக்கான சொல்லாடலுக்குப் பங்களிப்பதற்கான அடிஸ் அபாபா அலுவலகத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். மேலும் இவ்வொன்றுகூடல் அனைத்து ஆப்பிரிக்க தேவாலய மாநாடு (AACCP) மற்றும் ஐக்கிய மத முன்முயற்சி (URI) உடன் இணைந்து நடத்தப்பட்டது.
சுற்றுச்சூழல் நெருக்கடிக்கான தீர்வுகளை சமுதாயத்தின் எந்த ஒரு முறைமையில் மட்டுமே காண முடியாது என குழுவினர் விவாதித்தனர். “அறிவியல் மட்டும் போதாது அல்லது பொருளாதார தீர்வுகள் மட்டும் போதாது” என தென்னாப்பிரிக்க சமய சமூகங்களின் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் (SAFCEI) உறுப்பினர் பிரான்செஸ்கா டி காஸ்பரிஸ் கூறினார்.
“சமயத்திற்கு இதில் ஒரு மிக முக்கிய பங்கு உள்ளது,” என அவர் தொடர்ந்தார். ஏனென்றால், இது இதயங்களுக்கும் மனதிற்கும் இடையிலுள்ள தொடர்பாகும், மற்றும் அது ஆக்ககர செயலை ஊக்குவிக்கும் சக்தி கொண்டது.

அடிஸ் அபாபா அலுவலகத்தின் பிரதிநிதியான அதீனோ எம்போயா, தனிநபர் மற்றும் கூட்டு வாழ்க்கையின் புதிய வடிவங்களை உருவாக்க மதம் எவ்வாறு ஒரு சக்தியாக இருக்க முடியும் என்பதை விவரித்து, பின்வருமாறு குறிப்பிடுகிறார்: ” பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகியுள்ளோரே வளங்களின் சமமற்ற விநியோகத்தினாலும் பாதிக்கப்படுவது, செல்வம் மற்றும் வறுமைக்கு இடையிலான நீண்ட இடைவெளி குறித்த சவால்களில் ஒன்றாகும்.
தொடர்ந்து அவர், “நமது பொருளாதார மாதிரிகள் பூமி மற்றும் அதன் அனைத்து மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக, மானிடத்தின் ஒருமை போன்ற மதத்தால் வழங்கப்படும் ஆன்மீகக் கொள்கைகளின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்,” என்றார்.
சுற்றுச்சூழல் விஞ்ஞானியும் சர்வதேச சுற்றுச்சூழல் மன்றத்தின் தலைவருமான ஆர்தர் டால், காலநிலை நீதி மற்றும் சமுதாய மேம்பாடு பற்றிய விவாதங்களுக்கு அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையிலான நல்லிணக்கம் குறித்த பஹாய் கொள்கையின் இன்றியமையாமையை முன்னிலைப்படுத்தினார். “மோசமடைந்து வரும் சுற்றுச்சூழல் நெருக்கடியானது வளர்ந்து வரும் நுகர்வோர் கலாச்சாரம் மற்றும் குறுகிய கால லௌகீக ஆதாயத்திற்கான குறுகிய பார்வையால் இயக்கப்படுகிறது.”
“சுற்றுச்சூழலின் பாதுகாப்புக்கு, புதிய தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி நம்மைப் பற்றியும், உலகில் நமது நிலை பற்றியும் ஒரு புதிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இயற்கையுடனான நமது உறவு மற்றும் சமுதாயத்தைப் பராமரிக்கும் உறவுகளின் முழுமையான மறுசீரமைப்பு. இதைத்தான் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது’
“காலநிலை மாற்றம், நம்பிக்கை மற்றும் அறிவியல் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு” என்னும் தலைப்பிலான இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, அடிஸ் அபாபா அலுவலகம் பல்வேறு சமூக நடவடிக்கையாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சமய சமூகங்களுடன் சேர்ந்து, குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளின் சமூக மெய்நிலைக்குள், விவசாயம், கிராமப்புற பராமரிப்புத்திறம், இடம்பெயர்வு போன்ற பிரச்சினைகள் தொடர்புடைய கருப்பொருள்களை ஆராயத் திட்டமிட்டுள்ளது.
கதையை இணையத்தில் படிக்க அல்லது மேலும் புகைப்படங்களைப் பார்க்க, news.bahai.org -ஐப் பார்வையிடவும்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1537/