ஜோர்டான்: ஓர் ஒத்திசைவான வாழ்க்கை மீதான வானொலி தொடர் நம்பிக்கை மற்றும் செயல்பாட்டை ஊக்குவிக்கின்றது12 அக்டோபர்


அம்மான், ஜோர்டான் – தொற்றுநோயின் தொடக்கத்தில், ஜோர்டானின் பஹாய் வெளியுறவு அலுவலகம் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக நடவடிக்கையாளர்களிடையில் ஊடகம் முன்னேற்றத்திற்கான ஒரு சக்தி எனும் ஒரு கலந்துரையாடல் தொடரை ஆரம்பித்தபோது, ​​பங்கேற்பாளர்கள் தங்கள் உரையாடலின் விளைவாக , ஓர் ஒத்திசைவான வாழ்க்கையை எப்படி வாழ்வது மற்றும் சமூக நன்மைக்கான ஆதாரமாக இருப்பது எப்படி என்பதை ஆராயும் பொது கருத்தரங்கை வழங்கும் ஒரு புதிய வானொலி நிகழ்ச்சியின் ஆரம்பத்தை எதிர்ப்பார்க்கவில்லை.

இப்போது முடிவடைந்துள்ள எட்டு வார தொடர் நிகழ்ச்சிகள், வெளியுறவுத்துறை அலுவலகத்துடன் இணைந்து ரேடியோ அல்-பலாட்டினால் தயாரிக்கப்பட்டதாகும்.

“உலகளாவிய சுகாதார நெருக்கடி உளவியல் அழுத்தங்களை தீவிரப்படுத்திய நேரத்தில் நாங்கள் ஆர்வநம்பிக்கை, மெய்நம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டு வர முயன்றோம்” என்கிறார் ரேடியோ அல்-பலாட்டின் தொகுப்பாளர் தக்ரீத் அல்-டாக்மி.

“இந்த நிகழ்ச்சி பல்வேறு பின்னணியிலிருந்து வரும் நேயர்களுக்கு மனித வாழ்க்கையின் ஆன்மீக மற்றும் லௌகீகப் பரிமாணங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கவும் தற்போதைய நேரத்தில் விஷயங்கள் எவ்வளவு கடினமாக இருப்பினும், எதிர்காலத்திற்கான ஆர்வநம்பிக்கை இருக்கிறது என்பதை உணரவும் ஒரு வாய்ப்பையும் வழங்கியது.”

“உடலும் ஆன்மாவும்” எனும் தலைப்பில் வானொலி நிகழ்ச்சி பரவலாக பார்வையாளர்களைச் சென்றடைந்ததுடன் நல்ல வரவேற்பையும் பெற்றது, நேயர்களிடையே சிந்தனைமிக்க உரையாடல்களையும் தூண்டியது.

“இந்த நிகழ்ச்சியானது ரேடியோ நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் இல்லாத ஆழமான கருத்துகள் மற்றும் உயர் அபிலாஷைகளை ஆராய உதவுகிறது” என நிகழ்ச்சியின் கேள்விகேட்கும் பகுதியின் போது ஒரு நேயர் கூறினார்.

“இது கூட்டு சமுதாய விழிப்புணர்வை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது, மேலும் பொது நன்மைக்குப் பணியாற்றல், நீதி, இரக்கம் ஆகியன போன்ற நமது வாழ்க்கையின் முக்கியமான கொள்கைகளைப் பற்றி சிந்திக்க உதவுகிறது” என அவர் தொடர்ந்தார்.

வெளியுறவு அலுவலகத்தின் தஹானி ருஹி, வானொலி நிகழ்ச்சியின் எழுச்சியூட்டும் மற்றும் வசீகரிக்கும் சூழ்நிலையானது அலுவலக உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடையில் நடந்த பல நுண்ணறிவுமிகு உரையாடல்களுக்கும் தொடர்ந்து, வானொலி ஒளிபரப்புகளுக்கும் வழிவகுத்ததுடன் அவர்களிடையே நட்பின் வலுவான பிணைப்புகளையும் உருவாக்கியது என கூறினார்.

“கடந்த வருடத்தில் நாங்கள் அனைவரும் நல்ல நண்பர்களாகினோம்,” என அவர் கூறுகிறார். “இது நிகழ்ச்சிக்கு அதன் நட்பு மற்றும் அழைப்புவிடுக்கும் உணர்வைக் கொடுத்ததுடன், இத்திட்டம் அதற்கு வழிவகுத்த செயல்முறையின் பிரதிபலிப்பாகவும் இருந்தது.

திருமதி ரூஹி தொடர்கிறார்: நிகழ்ச்சிக்கான தலைப்புகளானவை, நம்பிக்கையை வளர்ப்பதில் மதம் மற்றும் ஊடகங்களின் பங்கு உட்பட முந்தைய கலந்துரையாடல் கூட்டங்களில் ஆராயப்பட்ட கருப்பொருள்களின் உத்வேகம் பெற்றவை என விளக்குகிறார்–சமூக ஊடகங்களில் பிளவுகளை எதிர்கொள்தல் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தல்; பல்வேறு மக்களிடையே ஒற்றுமையை உருவாக்குவதில் கூட்டு பிரார்த்தனையின் முக்கியத்துவம்; சமூகத்திற்குச் சேவை செய்யும் போது தன்னலமின்மை குறித்த கருத்தாக்கம்; பெருந்தொற்றின் போது தங்கள் சமூகங்களுக்குச் சேவை செய்வதில் இளைஞர்களின் பங்கு; மற்றும், சமூகத்தில் கலைகளின் இடம்.

நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட மிகுந்த நேர்மறையான ஆர்வத்தினால், ரேடியோ அல்-பலாட் மற்றும் பஹாய் வெளியுறவு அலுவலகம் இப்போது “வாழ்க்கை சுழற்சி” எனும் தலைப்பில் ஒரு புதிய தொடரைத் தயாரிக்கின்றன, இது குழந்தை பருவத்திலிருந்து முதிர்வு வரை வாழ்க்கையின் உயர்ந்த நோக்கத்தை ஆராயும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1540/