பஹாய்கள் எனும் முறையில் நாம் ஒரு தவறையோ, செய்யக்கூடாத ஒன்றை செய்திருந்தாலோ நாம் கடவுளின்பால் திரும்பி அவரிடத்தில் மன்னிப்பைக் கோர வேண்டும். பாவமன்னிப்பு எனும் ஒன்று பஹாய் போதனைகளில் கிடையாது; செய்த பாவத்திற்காக மனிதர்பால் திரும்பி பாவமன்னிப்பு கோருதல் அனுமதிக்கப்படவில்லை. கடவுளிடம் மன்னிப்பைக் கோருவதற்குப் பல பிரார்த்தனைகள் உள்ளன, மற்றும் அது குறித்த திருவாக்குகளும் உள்ளன. பின்வரும் பிரார்த்தனைகளைக் கவனிப்போம். இவை ஒரு மனிதன் தன் படைப்பாளரை நோக்கி பூரண நம்பிக்கையுடன் தன் செயல்களை மன்னிக்குமாறு கோரும் பிரார்த்தனைகள்.
பிரபுவே, நீர் போற்றப்படுவீராக; எங்களின் பாவங்களை மன்னிப்பீராக; எங்கள் மீது கருணை காட்டி, எங்களை உந்தன்பால் திரும்பிட உதவுவீராக. எங்களை உம்மையன்றி வேறெதன்மீதும் நம்பிக்கை வைக்க விட்டுவிடாதீர்; உமது வள்ளன்மையின் மூலம் நீர் நேசிப்பனவற்றையும் விழைவனவற்றையும், உமக்குப் பொருத்தமானவற்றையும், எங்கள்பால் வழங்கியருள்வீராக. உண்மையாகவே நம்புகின்ற வர்களின் ஸ்தானத்தினை உயர்த்தி, உமது அருள்மிகு மன்னிப்பினைக் கொண்டு அவர்களை மன்னித்திடுவீராக.
மெய்யாகவே, ஆபத்தில் உதவுபவரும், சுயஜீவியும் நீரேஆவீர்.
-பாப்
என் கடவுளே, என் பிரபுவே, என் தலைவரே! நான் உமது அன்பைத் தவிர வேறெந்த இன்பத்தை நாடியதற்கும், உமது அருகாமையைத் தவிர வேறெந்த சுகத்தை நாடியதற்கும், உமது நல்விருப்பமன்றி வேறெந்த மகிழ்ச்சியை நாடியதற்கும், உம்முடன் தொடர்புறவில் அல்லாது வேறெதனிலும் வாழ்வை நாடியதற்கும், என்னை மன்னித்தருளும்படி உம்மிடம் இறைஞ்சுகின்றேன்.
-பாப்
அடுத்து கடவுளின் ஒரு பண்பாக, அவரை சர்வ மன்னிப்பாளர் என அழைக்கின்றோம். அவர் மனிதனை எந்நேரமும் தமது அன்பினால் சூழச் செய்துள்ளார். பஹாவுல்லாவின் திருவாக்குகளிலிருந்து சில பொறுக்குமணிகள் எனும் நூலில் பின்வருவனவற்றைக் காண்போம்:
“மெய்யாகவே, அவர், என்றென்றும் மன்னிப்பவர், அதி வள்ளன்மை வாய்ந்தவர்.”
“உனது பிரபு, மெய்யாகவே, அருள்மிகுந்தவர், மன்னிப்பவர்.”
அவர் உண்மையிலேயே மன்னிப்பவர், கருணையே உருவானவர்.”
ஆகவே, எனது சொற்களில் கவனஞ் செலுத்தி, நீங்கள், இறைவன்பால் திரும்பி, செய்த தவறுக்காக வருந்துங்கள்; அதனால், அவர், தனது அருளின் வாயிலாக உங்கள்மீது கருணைக்கொண்டு, உங்களின் பாவங்களைக் கழுவி, உங்கள் தவறுகளை மன்னித்திடக் கூடும்.”
“அவர், தன் தவறுக்கு வருந்துவாராயின், இறைவன் நிச்சயமாக அவரை மன்னிப்பார்.”
“அவர் பாவியை மன்னிக்க வேண்டும்; என்றுமே அவனது தாழ்ந்த நிலையை இழித்துரைக்கலாகாது; ஏனெனில், தனது சொந்த முடிவு எவ்வாறிருக்கும் என்று யாருக்குமே தெரியாது.”
“நீர் எழுதியுள்ள வார்த்தைகள், எனது முன்னிலையில் வாசிக்கப் பட்ட உடனேயே, அவை, என்னுள் விசுவாசம் என்னும் கடலைப் பொங்கி எழச்செய்து, எனது மன்னிப்பு என்னும் தென்றலை உமது ஆன்மாவின்மீது வீசச்செய்தது;…”
மேற்கூறியவற்றிலிருந்து, கடவுள் மனிதனை எப்போதும் மன்னிக்கின்றார். மனிதன் எச்சூழலிலும் கடவுளிடம் மன்னிப்பைக் கோர வேண்டியவன் என்பது தெளிவு. அவரது மன்னிப்பு எனும் அருட்கரம் மனிதனை நித்தியமாக அரவணைக்கின்றது.
கடவுள் சர்வ மன்னிப்பாளர் எனும்போது, மனிதனில் நிலை என்ன? அவனுக்கு மன்னிக்கும் குணம் உள்ளதா? இங்கு மன்னிப்பென்பது செய்த தவறு மறக்கப்படுவது என்பதாகாது. அதற்கு முறையான நிவர்த்திகள் செய்யப்பட வேண்டும். ஆனால், அது பழிவாங்கும் உணர்வோடின்றி, அது கருணை மனப்பான்மையுடன், தவறு செய்தவன் திருந்துவதற்காகவும் அவனுடைய நன்மைக்காகவும் செய்யப்பட வேண்டும். ஆனால், இன்று நடப்பதென்ன?
- பழிவாங்கும் எண்ணம்
- நட்பை முறித்துக்கொள்ளல்
- அவன் என்னை எப்படி இவ்வாறு சொல்லலாம்
- அவன் என்னை என்ன வார்த்தை கேட்டுவிட்டான்
- நான் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்குக் கெட்டவன்
- பழிக்குப் பழி
- பல வருட குடும்பப் பகையைக் கைவிடமாட்டேன்
- என்றோ நடந்த தவறை மாமாங்கமாக மனதில் வைத்துப் புழுங்கிக் கொண்டிருப்பது
- ஒருவர் செய்த தவறை மன்னித்து மறக்காமல் அதை ஊர் முழுவதும் பறைசாற்றுவது
என அடுக்கிக் கொண்டே போகலாம்.
நாம் ஏன் மன்னிப்பு எனும் பண்பைப் பெற்றிருக்க வேண்டும்? மன்னிப்பு என்றால் என்ன? நம்மைப் படைத்த கடவுளே நம்மை என்றும் மன்னித்து வரும் போது, நாம் மட்டும் அக்குணத்தை பெற்றிராமல் இருப்பது எப்படி?
மன்னிப்பு என்பது வெறும் வார்த்தைகளால் மட்டுமல்ல. நமக்குத் தவறிழைத்தவர் மன்னிப்பிற்குப் பாத்திரமானவரோ இல்லையோ, நம்மைப் பொறுத்த வரை, மன்னித்தல் என்பது நமது உள்ளத்தில் ஏற்பட்டுள்ள எதிர்மறை உணர்வுகளை அகற்றுவதற்கு நாம் விழிப்புணர்வுடன் ஈடுபடுகின்ற, ஓர் ஆக்கரமான செயல்முறையாகும். அதை நடைமுறையாக்கிட நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
நம் மனதில் மன்னிக்கும் குணம் இல்லாவிடில் அதனால் நமக்கு ஏற்படும் பின்விளைவு என்ன?
காழ்ப்பு, பொறாமை, பகைமை, பொல்லாப்பு, வன்மம், கறுவுதல், மாற்சரியம், மனவெறுப்பு, பழிவுணர்வு போன்றவை எதிர்மறையான உணர்வுகளாகும். அவை ஒருவகை மனப்புற்றுநோய்கள் ஆகும். அவை நீடித்துக்கொண்டே இருக்கும் வரை புற்றநோயைப் போல் அவையும் வளர்ந்துகொண்டே இருக்கும், மற்றும் வேரூண்றி அழிவுக்கு வழிவகுத்துவிடும். சுவற்றின் ஒரு சிறு துவாரத்தில் ஆலமர விதை ஒன்று விழுந்தால் அது சிறுகச் சிறுக வேரூண்றிக் கட்டிடத்தையே பிளந்துவிடுவது போன்று மேற்குறிப்பிட்ட குணங்கள் ஆன்மாவையே அழித்துவிடும்.
நற்செய்தி: மன்னிக்கும் செயலானது, நமது உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மை பயப்பதாகும். அது இருதய நோய்க்கான அபாயத்தைத் குறைக்கின்றது, கொழுப்புச் சத்தைக் குறைக்கின்றது, தூக்கத்தை மேம்படுத்துகின்றது, தலை வலி போன்ற உடல் வலி, இரத்த அழுத்தம், பதட்டம், மனவுளைச்சல், மனவழுத்தும் ஆகியவற்றைக் குறைக்கின்றது,
மன்னிப்பு ஒளி, மன்னிக்காமை இருள்.