பஹாய் சமயத்தின் முன்னோடி அவதாரமான பாப் பெருமானார் தாம் ஒரு கடவுளின் அவதாரம் என 23 மே 1844-இல் பிரகடனப்படு்த்திக் கொண்டார். இந்தப் பிரகடனத்தை முதன்முதலில் செவிமடுத்தவர் முல்லா ஹுசேன் ஆவார். பாப் பெருமானாரின் இந்தப் பிரகடனத்தைத் தொடர்ந்து பல்லாயிரக் கணக்கான இரானிய மக்கள் பாப் பெருமானாரின் நம்பி்க்கையாளர் ஆகினர்.
பாப் பெருமானார் 9 ஜூலை 1850-இல் ஓர் அவசர விசாரனைக்குப் பிறகு மரண தண்டனை விதிக்கப்பட்டு தப்ரீஸ்நகர் சதுக்கம் ஒன்றில் 750 துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானார். காலப்போக்கில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட இவருடைய நம்பி்க்கையாளர் பலர் வீரமரணத்திற்கு உட்படுத்தப்பட்டனர்.
பாப் பெருமானார் தியாகமரணத்தால் மனநிலை பாதிக்கப்பட்ட சில பாப்’யி இளைஞர்கள், பாப் பெருமானாரின் மரணத்திற்கு அந்நாட்டின் ஷா மன்னனே பொறுப்பாளி என முடிவு செய்து, அவரைக் கொலை செய்யும் முயற்சியில் இறங்கினர். அந்த முயற்சியில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களுள் இருவர் சம்பவம் நடத்த இடத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டனர், மற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கொலை முயற்சியில் வேறு யாருக்கும் சம்பந்தமில்லை என கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வலியுறுத்திய போதும், அப்போது பாப்’யிக்களுள் மிகவும் பிரபலமாக இருந்த மிர்ஸா ஹுசேய்ன் அலி எனப்படும் பஹாவுல்லாவே இதைத் தூண்டிவிட்டார் என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
கைது ஆணை பிறப்பிக்கப்பட்டபோது, பஹாவுல்லா தெஹரான் நகருக்கு அருகிலிருந்த அஃப்சே எனப்படும் கிராமத்தில் இருந்தார். ஷா மன்னனின் ஆணையிலிருந்து அவரை தப்பிக்க வைக்க அவரது நண்பர்கள் முயன்றனர், ஆனால் பஹாவுல்லா அதற்கு இணங்காமல் தம்மைக் கைது செய்ய வந்தோரை சந்திப்பதற்காக நேரில் சென்றார்.

கை செய்யப்பட்ட பஹாவுல்லா, உச்சி வெய்யிலில், தலையில் தலைப்பாகை இன்றி, வழிநெடுக கால்நடையாக தெஹரான் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வழியில் இருபுறமும் வேடிக்கைப் பார்ப்பதற்காகக் கூடியிருந்த மக்கள் அவர்மீது கற்களையும் கையில் கிடைத்த பொருட்களையும் கொண்டு தாக்கியதுடன் பெரும் அவமதிப்புக்கும் அவரை ஆளாக்கினர்.
இவ்வாறாக, பஹாவுல்லா கொண்டு செல்லப்பட்டு, தெஹரான் நகரில், கருங்குழி (சிய்யாச்சால்) என அழைக்கப்பட்ட, ஒரு காலத்தில் நீர்த்தேக்கமாகப் பயன்பட்ட ஒரு நிலவறைக்குள் சிறை வைக்கப்பட்டார். இந்தக் கருங்குழி, அதன் துர்நாற்றம், அசுத்தம் மற்றும் காரிருளுக்கு பெயர்போன ஒன்றாக அப்போது இருந்தது. இங்குதான் பஹாவுல்லா தம்மில் உள்ளார்ந்திருந்த தெய்வீக திருவெளிப்பாட்டின் முதல் அறிகுறிகளைப் பெற்றார்.
பின்னர் அவர் இவ்வாறு எழுதினார்: “அரசனே, பிறரைப் போன்று நானும் என் மஞ்சத்தில் துயில் கொண்டிருந்தேன். அவ்வேளை, சர்வ பேரொளிமிக்கவரின் தென்றல் என்மீது தவழ்ந்து சென்று, இதுவரையிலான அனைத்தைப் பற்றிய அறிவையும் எனக்குப் புகட்டியது. இது என்னிடமிருந்து வந்ததல்ல; சர்வ வல்லவரும் எல்லாம் அறிந்தவருமான ஒருவரிடமிருந்து வந்துள்ளது. மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையில் என் குரலை ஒங்கச் செய்யுமாறு அவர் என்னைப் பணித்தார்.” (ஓநாயின் மைந்தனுக்கான நிருபம்)
ஆனாலும், இத்திருவெளிப்பாட்டைப் பகிரங்கமாக அறிவிக்கும் நேரம் அப்போது கனிந்திருக்கவில்லை.
சிய்யாச்சால், ஒரு காலத்தில் நீர்தேக்கமாகப் பயன்பட்டும் பின்னர் கைவிடப்பட்டு, பின்னர் ஒரு நிலவறையாக மாற்றப்பட்டிருந்தது. ஒளி அறவே புகமுடியாத அந்த நிலவறைக்குள் இறங்குவதற்கு மூன்று தளமான படிக்கட்டுகள் இருந்தன. முறையான கழிவறை கிடையாததுடன் அது மிகவும் சிறிய இடமாகவும் இருந்தது.
பஹாவுல்லா அங்கு சிறைப்பட்டிருந்த போது அவருடன் சுமார் 150 பேர், பல்வேறு குற்றங்களுக்காக சிறைப்பட்டிருந்தனர்.
இந்த சிய்யாச்சாலில் பஹாவுல்லா நான்கு மாத காலம் சிறைப்பட்டிருந்தார். அந்த அனுபவத்தை அவர் தமது சொந்த வார்த்தைகளில் விவரிக்கின்றார்:
இத் தவறிழைக்கப்பட்டோனும் அது போன்று தவறிழைக்கப்பட்ட பிறரும் அடைக்கப்பட்டிருந்த அந்த நிலவறையைப் பார்க்கும் போது, ஒரு குறுகலான குழி அதைவிட சிறந்ததாகும். அங்கு நாங்கள் வந்தடைந்த போது, நாங்கள் ஓர் காரிருள் சூழ்ந்த தாழ்வாரம் வழி வழிநடத்தப்பட்டோம். அங்கிருந்து மூன்று செங்குத்தான படிக்கட்டுளில் இறங்கி எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்தோம். அந்த நிலவறையில் காரிருள் சூழ்ந்திருந்தது. எமது சக கைதிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நூற்றைம்பது ஆன்மாக்களாகும்: திருடர்கள், கொலைகாரர்கள், வழிப்பறி கொள்ளையர். அங்கு கூட்டம் நிறைந்திருந்த போதும், அதிலிருந்து வெளியேறுவதற்கு நாங்கள் வந்த வழியைத் தவிர வேறு வழி கிடையாது. எந்த எழுதுகோலும் அந்த இடத்தை விவரிக்கவியலாது, அல்லது எந்த நாவும் அதன் துர்நாற்றத்தை வர்ணிக்கவியலாது. அம்மனிதர்களுள் பெரும்பான்மையினருக்கு உடைகள் கிடையாது அல்லது தூங்குவதற்குப் படுக்கை கிடையாது. மிகுந்த துர்நாற்றம் வீசிய, இருண்ட இடத்தில் எமக்கு என்ன நேர்ந்தது என்பதை கடவுள் மட்டுமே அறிவார்! [3]
நாங்கள் அனைவரும் ஒரே அறையில் குழுமியிருந்தோம்; எங்கள் கால்கள் மரச்சட்டங்களில் பூட்டப்பட்டும் கழுத்துகளில் படுமோசமான சங்கிலிகள் பொருத்தப்பட்டும இருந்தது. நாங்கள் சுவாசித்த காற்று படு அசுத்தம் நிறைந்ததாக இருந்தது. நாங்கள் உட்கார்ந்திருந்த தரை மாசு படர்ந்தும் பூச்சிப்புழுக்கள் நிறைந்ததாகவும் இருந்தது. அந்த கொள்ளைநோய் நிலவறையை ஊடுருவதற்கு அல்லது அதன் பனிபோன்ற குளிரை சூடாக்கிட எந்த ஒளிக் கதிரும் அனுமதிக்கப்படவில்லை. [4]
ஒவ்வொரு நாளும் எமது சிறை காவலாளிகள், எமது அறைக்குள் நுழைந்து, எமது சகபாடியருள் ஒருவரின் பெயரை உச்சரித்து, அவரைத் தூக்குமேடைக்குத் தம்மைப்பின்த்தொடர்ந்து வரும்படி ஆணையிடுவர். [5]
(ஓநாயின் மைந்தனுக்கான நிருபம்)
பஹாவுல்லா இங்கு சிறைப்பட்டிருந்த காலத்தில், அவரது கழுத்தில் இரண்டு சங்கிலிகள், ஒன்று அல்லது மற்றொன்று மாட்டப்பட்டிருக்கும். அச்சங்கிலிகள், அவை ஒவ்வொன்றும் அவற்றின் சொந்தப் பெயர்களைப் பெற்றிருக்கும் அளவிற்கு பிரசித்திபெற்றிருந்தன.
எப்பொழுதாவது மாட்சிமை பொருந்திய ஷா அவர்களின் பாதாளச் சிறையைக் காண நேரிடுமாயின், காரா-குஹார் மற்றும் சலாசில் எனும் இரு சங்கிலிகளை உங்களுக்குக் காண்பித்திடுமாறு இயக்குநர் மற்றும் தலைமை சிறைக்காவலர் ஆகியோரிடம் கேளுங்கள். நீதி என்னும் பகல் நட்சத்திரத்தின்மீது சாட்சியாக, நான்கு மாதமாக இத்தவறிழைக்கப்பட்டோன் சித்திரவதை செய்யப்பட்டு அந்தச் சங்கிலிகளில் ஒன்றினாலோ மற்றொன்றினாலோ யாம் பிணைக்கப்பட்டிருந்தோம்.[5]
இச்சங்கிலிகளுள் ஒன்று 51 கிலோகிராம் எடையுடையது, அவற்றின் பாரமானது அத்தகையதாக இருந்ததனால், அவற்றின் பலுவைச் சுமப்பதற்கு உதவியாக ஒரு மரத்திலான கவைக்கோல் அவற்றுக்கு வழங்கப்பட்டிருந்தது.
எமது கழுத்தில், அச்சங்கிலிகளின் தழும்புகள் இன்னமும் உள்ளன. எமது உடலில் ஓர் அடங்கா கொடுமையின் தடயங்கள் பதிந்துள்ளன. [6]
ஒரு நாள், தமது தந்தையாரைச் சந்திப்பதற்காக அப்துல்-பஹா கொண்டுசெல்லப்பட்டார் (அப்போது அவருக்கு வயது ஒன்பது) என அடிப் தாஹெர்ஸாடே பதிவுசெய்துள்ளார்.
அவர் படிக்கட்டுகளில் பாதி தூரம் மட்டுமே இறங்கியிருப்பார். அப்போது பஹாவுல்லா அவரைக் கண்டுகொண்டு, சிறுவரான அப்துல்-பஹாவை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்படும்படி ஆணையிட்டார். வெளியே சிறை முற்றத்தில் கைதிகள் அனைவரும் தூய்மையான காற்றுக்காக ஒரு மணி நேர அவகாசத்தில் வெளியே கொண்டு வரப்படும் வரை அப்துல்-பஹா காத்திருப்பதற்கு அனுமதிக்கப்பட்டார். தமது சகோதரர் மகனுடன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த தமது தந்தையாரை அப்துல்-பஹா கண்ணுற்றார்… அவர் பெரும் சிரமத்துடன் நடந்துவந்தார், அவரது தாடியும் முடியும் திருத்தப்படாமல் இருந்தன, ஒரு கனமான எஃகு வளையத்தின் பலுவினால் அவரது கழுத்து காயப்பட்டும் வீங்கியும் இருந்தது, சங்கிலியின் கனத்தினால் அவரது முதுகு வளைந்திருந்தது. இந்தக் காட்சியைக் கண்ட அப்துல்-பஹா மயக்கமுற்று, பிரக்ஞையற்ற நிலையில் வீட்டிற்குத் தூக்கிச் செல்லப்பட்டார். [அடிப் தாஹெர்சாடே, பஹாவுல்லாவின் திருவெளிப்பாடு 1853-63, பக். 8]
மிகவும் இருள்சூழ்ந்த இந்த நேரத்தில், பஹாவுல்லா தனியாக இல்லை. தமது சகாக்களை “இறைவன் எனக்குப் போதுமானவர்…” எனும் பிரார்த்தனையைப் பாடுவதில் வழிநடத்துவார்.
எப்பொழுதாவது மாட்சிமை பொருந்திய ஷா அவர்களின் பாதாளச் சிறையைக் காண நேரிடுமாயின், காரா-குஹார் மற்றும் சலாசில் எனும் இரு சங்கிலிகளை உங்களுக்குக் காண்பித்திடுமாறு இயக்குநர் மற்றும் தலைமை சிறைக்காவலர் ஆகியோரிடம் கேளுங்கள். நீதி என்னும் பகல் நட்சத்திரத்தின்மீது சாட்சியாக, நான்கு மாதமாக இத்தவறிழைக்கப்பட்டோன் சித்திரவதை செய்யப்பட்டு அந்தச் சங்கிலிகளில் ஒன்றினாலோ மற்றொன்றினாலோ யாம் பிணைக்கப்பட்டிருந்தோம்.[5]
மிகவும் இருள்சூழ்ந்த இந்த நேரத்தில், பஹாவுல்லா தனியாக இல்லை. தமது சகாக்களை “இறைவன் எனக்குப் போதுமானவர்…” எனும் பிரார்த்தனையைப் பாடுவதில் வழிநடத்துவார்.
மற்றோர் உணர்வில் பஹாவுல்லா தனியராக இருக்கவில்லை.
தெஹ்ரான் சிறையில் நான் கிடந்த நாள்களின் பொது, சங்கிலியின் அபார பாரமும் துர்நாற்றம் நிறைந்த காற்றும் எனக்கு மிகக் குறைவான தூக்கத்தையே அனுமதித்த போதிலும், அவ்ப்போதான இலேசான துயிலின் போது, ஓர் உயர்ந்த மலையின் உச்சியினின்று பூமியின் மீது பொழிந்திடு ஒரு வலிய புயலைப் போன்ற, எதோ ஒன்று எனது சிரசின் உச்சியினின்று மார்பின் மீது வழிந்தொடுவதாக நான் உணர்ந்தேன். அதன் விளைவாக, என் உடலின் ஒவ்வோர் அங்கமும், தீப்பற்றிக்கொள்ளும். அத்தருணங்களில், எந்த மனிதனும் செவிமடுக்க முடியாதவற்றை எனது நா உச்சரித்தது. [7]
ஓரிரவு, ஒரு கனவில், இம்மேன்மைமிக்க சொற்கள் எல்லா பக்கங்களிலும் செவிமடுக்கப்பட்டன: “மெய்யாகவே உம்மாலும் உமது எழுதுகோலினாலும் உம்மை யாம் வெற்றியடையச் செய்வோம். உமக்கு நேர்ந்தவற்றினால் நீர் கவலையுற வேண்டாம், அல்லது அச்சமுறவும் வேண்டாம், ஏனெனில், நீர் பாதுகாப்பாக இருக்கின்றீர். விரைவில் பூமியின் பொக்கிஷங்கள, உம்மூலமாகவும் தம்மைக் கண்டுணர்ந்தோரின் இதயங்களை அவர் உயிர்ப்பித்துள்ள உமது நாமத்தின் மூலமாகவும் கடவுள் வெளிக்கொணர்வார்.”[8]
“துயரங்களால் சூழ்ந்துள்ள வேளையில், யாம் மிக அற்புதமான, மிக இனிமையானதொரு குரல், எமது தலைக்கு மேல் குரல் எழுப்பப்படுவதைச் செவிமடுத்தோம். எமது வதனத்தை யாம் திருப்பியபோது, – எமதாண்டவரின் நாமமெனும் நினைவின் திருவுருவாக இருக்கும் – எம்முன் அந்தரத்தில் இயங்கிநிற்கும் ஒரு தேவதையைக் கண்டேன். அவள் தனது ஆன்மாவினுள் எத்துனை பெருமகிழ்ச்சி கொண்டிருந்தாள் என்றால், அவளது வதனம் கடவுளின் நல்விருப்பம் எனும் அனிகலனால் பிரகாசித்தது; மேலும் அவளது கன்னங்கள் சர்வ கருனைமிக்கவரின் பிரகாசத்தினைக் கொண்டு கனலொளி வீசின. மண், விண் ஆகியவற்றுக்கிடையே அவள் மனிதர்களின் இதயங்களையும் மனங்களையும் வயப்படுத்திடும் ஓர் அழைப்புக் குரலை எழுப்பினாள். எனது அகம், புறம் ஆகிய இரண்டு ஜீவனிடமும், எனதான்மாவையும், கடவுளின் மதிப்பிற்குரிய ஊழியர்களின் ஆன்மாக்களையும் மகிழ்வுறச் செய்திடும் நற்செய்திகளை அவள் பகிர்ந்து கொண்டாள்.
எமது சிரசை நோக்கி அவளது விரலைக் காட்டி, விண்ணிலுள்ள அனைவரையும் மண்ணிலுள்ள உள்ள அனைவரையும் நோக்கி அவள் இவ்வாறு கூறினாள்: கடவுளின் பெயரால்! இவர்தாம் உலகங்களின் அதிநேசராவார்; ஆயினும் நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. அதனை நீங்கள் புரிந்துகொள்ளக் கூடுமாயின், இவர்தாம் உங்கள் மத்தியிலுள்ள கடவுளின் திருவழகாவார், உங்களுள் இருக்கும் அவரது மாட்சியிமையின் சக்தியுமாவார். அறிந்துணர்வோருள் ஒருவராக நீங்கள் ஆகினால், இவர்தான் கடவுளின் மர்மமும் அவரது பொக்கிஷமும் ஆவார்; திருவெளிப்பாடு, படைப்பு ஆகிய இராஜ்யங்களுள் உள்ள அனைவருக்கும் கடவுளின் சமயமும் அவரது புகழொளியும் ஆவார். இவர்தாம் நித்தியமெனும் இராஜ்யவாசிகள், புகழொளி என்னும் திருக்கூடாரத்தினுள் வசிப்போர் அனைவரின் தீவிர ஆவலாவார். அவ்வாறிருந்தும் நீங்கள் அவரது திருவழகிடமிருந்து அப்பால் திரும்புகின்றீர்.”[9]
1868-ஆம் ஆண்டில், இந்த சியாச்சால் சிறை மண்ணால் நிரப்பப்பட்டு அதன் மீது ஒரு ஓப்ரா சங்கீத மண்டபம் கட்டப்பட்டது. இந்த இடம் 1954 முதல் 1979 இஸ்லாமிய புரட்சி வரை இந்த இடம் பஹாய்களின் கைவசம் இருந்தது.
[ஓநாயின் மைந்தனுக்கான நிருபம்]