பஹாவுல்லா கூறுகிறார்: கோப்பை ஏந்தி வருபவர், எவ்வாறு, தேடுபவரைக் காணும் வரை அதனை வழங்க முன்வரமாட்டாரோ, எவ்வாறு, அன்பர் ஒருவர் தன் நேசரின் அழகினை நோக்கிடும்வரை, தனது இதயத்தின் ஆழத்திலிருந்து குரலெழுப்ப மாட்டாரோ, அவ்வாறே விவேகிகள், கேட்க ஒருவர் கிடைத்தாலன்றி, பேசமாட்டார்… (பாரசீக மறைமொழிகள் 36)
மாஸ்டரின் அக்காநகர் இல்லத்தில் குழந்தைகளுக்கு பிரெஞ்சு மொழியை கற்பிப்பதற்காக ஹைஃபாவில் ஓர் ஏழை குடும்பத்திலிருந்து வந்த மேடமுய்ஸேல் (குமாரி) லெட்டீஷியா என்பவரைப் பற்றி ஒரு கதை கூறப்படுகின்றது. அப்பெண்மணி ஒரு கத்தோலிக்கராக இருந்தபோதும், கான்வென்ட்டிலுள்ள கன்யாஸ்த்ரீகள் அவரை கவனித்து வந்த போதும் அவர் அப்துல்-பஹாவின் இல்லத்தில் மகிழ்ச்சியாகவே இருந்தார். ஒரு நாள், பிரெஞ்சு புனிதப் பயணி ஒருவர் வருகையளித்திருந்தார். மொழிபெயர்ப்பாளர் ஒருவர் தேவைப்பட்டது. யாருக்குமே பிரெஞ்சு மொழி தெரியாததால் லெட்டீஷியாவின் உதவி கோரப்பட்டது. மேடமூய்ஸேல் இக்கட்டுக்கு ஆளாகி அந்நிகழ்ச்சி குறித்து கன்யாஸ்த்ரீகளிடம் தெரிவித்துவிட்டார்.
அதன் பிறகு பல நாட்களுக்கு லெட்டீஷியா முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டிருந்தார். இதைக் கண்ணுற்ற அப்துல்-பஹா அவரைத் தம்மிடம் அழைத்து அவரைச் சாந்தப்படுத்த ஓர் உறுதிமொழியை வழங்கினார். லெட்டீஷியா, உனது மதிப்புக்குரிய கன்யாஸ்த்ரீகளிடம் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம் என கூறிவிடு. என் இல்லத்தில் யாருக்குமே பிரெஞ்சு மொழி தெரியாததால்தான் மொழிபெயர்ப்பு செய்திட நான் உன்னைக் கேட்டுக்கொண்டேன், உனக்கு (பஹாய் சமயத்தைப்) போதிப்பதற்காக அல்ல. தங்களுக்குப் கற்பிக்குமாறு உளமாறவும் முழு அன்புடனும் கெஞ்சியவாறு பன்மடங்கான பஹாய்கள் இங்கு வருகின்றனர். அவர்களுக்கு மட்டுமே நாங்கள் எங்களின் விலைமதிப்பற்ற போதனையை வழங்குகிறோம். நான் (எங்கள் போதனையை) உனக்கு வழங்குவதற்கு முன் நீ அதற்காகப் பலமுறை கெஞ்சி (கூத்தாட) வேண்டும். அப்போதும் கூட நான் அதை உனக்கு வழங்குவேன் என்பது உறுதியல்ல; ஏனெனில், விரும்பப்படாத இடத்தில் அதை வழங்க வேண்டிய அளவுக்கு அது மலிவானதல்ல.
‘எங்கள் இல்லத்தில் இருக்க விரும்பினால் இரு, இங்கு உனக்கு மகிழ்ச்சியாக இல்லையெனில் நீ போகலாம்.
நீ இங்கு தங்க விரும்பினால் அது எங்களுக்கு மகிழ்ச்சியே, ஆனால் நாங்கள் உன்னை ஒரு பஹாய் ஆக்கிட முயல்வோம் எனும் பயத்தை உன் இதயத்திலிருந்து நீக்கிவிடு.’
அன்னமேரி ஹொன்னொல்ட் – அப்துல்-பஹா வாழ்க்கையிலிருந்து சில காட்சிகள்