
19 அக்டோபர்
ஜோகன்னஸ்பர்க், தென்னாப்பிரிக்கா – பெருந்தொற்றானது, இனப் பிளவுகள், பொருளாதார சிரமங்கள், கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, ஓரங்கட்டப்பட்ட மக்களின் உரிமைகள் போன்ற ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய உன்னத இலட்சியங்களால் ஈர்க்கப்பட்ட மக்கள் ஒன்றுகூடும் போது, முன்னேற்றத்திற்கான சாத்தியங்களின்பால் பல சமூகங்களை எழுப்பியுள்ளது. .
அதே சமயம், உலகளாவிய சுகாதார நெருக்கடி தற்போது நிலவும் பல சிக்கல்களை மோசமாக்கியுள்ளது, பெண்களுக்கு எதிரான வன்முறை அவற்றில் முக்கியமானவை, ஐக்கிய நாடுகள் சபை இதை “நிழல் தொற்று” என வர்ணித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில், ஜனாதிபதி சிரில் ரமபோசா மார்ச் 2020-இல் முதல் நாடு தழுவிய முடக்கத்திற்கு சில வாரங்களுக்குப் பிறகு ஒரு திறந்த கடிதத்தில் இப்பிரச்சினை குறித்து தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தார்.
இந்த தேசிய உரையாடலுக்குப் பங்களிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தென்னாப்பிரிக்காவின் பஹாய் வெளியுறவு அலுவலகம் அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூக நடவடிக்கையாளர் மற்றும் கல்வியாளருடனான வரிசையான கலந்துரையாடல் மூலம் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் குடும்பத்தின் பங்கை எடுத்துக்காட்டி வருகிறது.
“பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் சமூகத்தில் உணரப்பட வேண்டிய ஒன்று மட்டுமல்ல, அது மனித இயல்பு பற்றிய ஒரு உண்மையும் ஆகும். மனித இனத்தின் உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் பகிரப்பட்ட அடையாளம் கொண்டுள்ள, பாலினம் இல்லாத ஆன்மா என கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் பஹாய் வெளியுறவு அலுவலகத்தின் மிலிங்கன் போஸ்வாயோ கூறினார்.
தொடர்ந்து அவர்: “இந்த உண்மையின் விழிப்புணர்வு தூண்டப்பட்டு செயல்பாட்டுக்கு வரக்கூடிய ஒரு சக்திவாய்ந்த சூழலை குடும்பம் வழங்குகிறது. ஆதலால், குடும்பம் மற்றும் சமூகத்திற்குள் சிறு வயதிலிருந்தே பெண்கள் மற்றும் ஆண்கள் சமத்துவம் பற்றிய தார்மீக கல்வி அவசியமாகும்.

துணிவார்ந்த சட்டம் அறக்கட்டளையின் நிறுவனர் பாபலெட்ஸ்வே டிஃபோகோ, தார்மீகக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார்: “பாலின சமத்துவம் பற்றி இளைஞர்களுக்குக் கல்வி கற்பிப்பதற்கு ஓர் உலகளாவிய அணுகுமுறை கிடையாது. எனவே, நமக்கு வழிகாட்ட கலாச்சாரம் மற்றும் சமூக விதிமுறைகளை நம்ப வேண்டியுள்ளது, அவற்றில் சில ஏற்கனவே காலாவதியானவை.”
கலாச்சார மாற்றத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, கல்வி மற்றும் சமூக சேவகரான தாலலே நாதனே இவ்வாறு கூறினார்: “கடந்த காலத்தில் பெண்கள் ‘இன்கோசிகாஸி’ என அழைக்கப்பட்டனர், இது மரியாதைக்குரிய சொல் (ஸூலு மொழியில்) மற்றும் இது குடும்பத்திலும் சமூகத்திலும் தலைமைத்துவம் மற்றும் முடிவெடுப்பதிலும் ஒரு முக்கிய பங்கு வகித்து வந்தது. . இருப்பினும், சமூகத்தில் பெண்களின் இடத்தை சிதைக்கும் சில மனப்பான்மைகளும் நடைமுறைகளும் வெளிப்பட்டுள்ளன.
தொடர்ந்து அவர்: “பெண்கள் மற்றும் ஆண்கள் சமத்துவத்தின் அடிப்படையில் தென்னாப்பிரிக்க குடும்பங்களில் நான் முன்னேற்றம் காண விரும்புகிறேன்.”
விவாதங்களைப் பிரதிபலிக்கும் விதமாக, தென்னாப்பிரிக்காவின் பஹாய் தேசிய ஆன்மீக சபையின் உறுப்பினர் ஷெமோனா மூனிலால், பஹாய் கல்வித் திட்ட அனுபவங்களின் அடிப்படையில் ஒரு நம்பிக்கைமிக்க கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொள்கிறார். “இந்த நிகழ்ச்சிகளில், இளம் பெண்களும் சிறுவர்களும் ஆன்மீக குணங்கள் மற்றும் கொள்கைகளைப் பற்றி ஒன்றாகக் கற்கின்றனர், இது அவர்களின் வாழ்க்கையின் தொடக்க ஆண்டுகளில் இருந்தே, ஒருவர் மற்றவரைச் சமமாகப் பார்க்கவும் உடனுழைத்தல் கலாச்சாரத்தைப் பேணவும் வாய்ப்புகளை வழங்குகிறது.”
அவர் மேலும் கூறுகிறார்: “இந்த முயற்சிகளில் பேணப்பட்ட அணுகுமுறைகள் மற்றும் முன்னோக்குகள் சமூகத்திற்குச் சேவை செய்யும் திறனையும் அவர்களுள் வளர்க்கின்றன. இளம் பெண்களும் ஆண்களும் ஒன்றாகக் கலந்தாலோசிக்கவும், முடிவுகள் எடுக்கவும், தங்கள் சமூகங்களின் ஆன்மீக மற்றும் லௌகீக நல்வாழ்வுக்காக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கவும் கற்றுக்கொள்கிறார்கள்.
“நாங்கள் என்ன காண்கின்றோம் என்றால், நாடு முழுவதும் உள்ள அண்டைப்புறங்கள் மற்றும் உள்ளுர் பகுதிகளில் அதிக இளைஞர்கள் இந்த செயல்பாட்டில் பங்கேற்கும்போது, பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவத்தின் வெளிப்பாடுகள் மேலும் அதிகரிக்கின்றன மற்றும் குடும்பங்களை பிணைக்கும் ஆன்மீக உறவுகள் வலுவாகின்றன.”
பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் ஆண்கள் மற்றும் சிறுவர்களின் பங்கு போன்ற விஷயங்களில் கூடுதல் விவாதங்களை நடத்த வெளிவிவகார அலுவலகம் திட்டமிட்டுள்ளது.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1542/