அப்துல்-பஹா: ப்ரொங்க்ஸில் (Bronx) பிறந்தநாள்


ப்ரோங்க்ஸில் பிறந்தநாள்

ஜூலியட் தாம்ஸனும் பிற பஹாய்களும் மாஸ்டருக்கு ஒரு பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்திட தீர்மானித்தார்கள். சிலர் பிறந்தநாள் கேக் ஒன்றையும் செய்தனர். நாங்கள் பல வாடகை டாக்சிகளில் பிராங்க்ஸ் சென்றோம். முதல் டாக்சியில் மாஸ்டர் பிராயணம் செய்தார். மாஸ்டரின் டாக்சி அங்கு சென்றடைந்தவுடன், அவர் இறங்கி அருகிலுள்ள பூங்காவினுள் எல்லோருக்கும் முன்பாக நடந்து சென்றார்.

சில பையன்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு சிரிக்கவாரம்பித்தனர். அவர்களுள் சிலர் அவர் மீது கற்களை எறிந்தனர். அதைக் கண்டு மனம் பதறிய சில நண்பர்கள் அவரை நோக்கி விரைந்தனர். ஆனால், அவர் அவர்களை வரவேண்டாமென தடுத்தார். அச் சிறுவர்கள் மாஸ்டரின் அருகில் வந்து அவரைப் பார்த்து கேலி செய்தும், அவரது மேலங்கியைப் பிடித்து இழுக்கவும் செய்தனர். மாஸ்டர் அதற்கெல்லாம் பதட்டப்பாடமல் நிதானமாக இருந்தார். அவர் அச்சிறுவர்களைப் பார்த்து பிரகாசத்துடன் புன்னகைத்தார். ஆனால், அச்சிறுவர்கள் தொடர்ந்து தங்கள் செய்கைகளில் ஈடுபட்டவாறே இருந்தனர். பிறகு மாஸ்டர் நண்பர்களின்பால் திரும்பி, “நீங்கள் தயாரித்த கேக்கைக் கொண்டுவாருங்கள்” என்றார். கேக் ஒன்று செய்யப்பட்டிருப்பதை யாருமே அவரிடம் அதுவரை தெரிவித்திருக்கவில்லை.

எங்களில் சிலர், “ஆனால், அப்துல்-பஹா, கேக்கை நாங்கள் உங்கள் பிறந்நாளுக்காக அல்லவா செய்தோம்,” என்றோம். அப்பஞ்சு போன்ற கேக்கை ஒரு நண்பர் கொண்டுவந்தார். அதன்மீது பனி போன்று வெள்ளை ‘ஐஸிங்’ செய்யப்பட்டிருந்த அந்த கேக்கை அந்த நண்பர் அப்துல்-பஹாவிடம் கொடுத்தார். அச்சிறுவர்கள் அந்த கேக்கைக் கண்டவுடன் அமைதியடைந்தும் பிறகு அந்த கேக்கையே பசியோடு பார்த்துக்கொண்டும் இருந்தனர்.

மாஸ்டர் அந்த கேக்கை தமது கைகளில் எடுத்து அதை ஆனந்தத்துடன் பார்த்தார். சிறுவர்கள் இப்போது அவரைச் சுற்றி நின்றுகொண்டிருந்தனர். “ஒரு கத்தி கொண்டுவாருங்கள்” என அப்துல்-பஹா கூறினார். ஒரு நண்பர் அவர் கேட்ட கத்தியைக் கொண்டுவந்தார். மாஸ்டர் தம்மைச் சுற்றிலும் நின்றுகொண்டிருந்த சிறுவர்களை எண்ணிக்கையிட்டு அந்த கேக்கை அதே எண்ணிக்கையில் வெட்டினார். பையன்கள் ஒவ்வொருவரும் ஒரு துண்டை ஆவலுடன் பெற்றும், அதை ஆர்வத்துடன் சாப்பிட்டனர். பிறகு அவர்கள் ஓடி மறைந்தனர்.