1963


இன்னும் சில வாரங்களில் மாஸ்டர் அப்துல் பஹா மறைந்து ஒரு நூற்றாண்டு முடிவுறப் போகின்றது. அந்த நிகழ்வை உலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் ஒரு நினைவேந்தலாக அனுசரிக்கவிருக்கின்றனர். பஹாய் உலகில் இது போன்ற நூற்றாண்டுகள் சில வந்து சென்றுள்ளன. உதாரணத்திற்கு பாப், பஹாவுல்லா பிறந்தநாள்கள், பாப் பெருமானார் 1844-இல் செய்த பிரகடனம், 1863-இல் ரித்வான் தோட்டத்தில் பஹாவுல்லாவின் அறிவிப்பு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

1963-இல் உலகம் அழியப்போகிறது எனும் ஒரு செய்தி அங்காங்கே நிலவியது. கிராமப்புறங்களில் கூட இது பேசப்பட்டது. இதற்கான காரணம் பைபளில் காணப்படும் ஒரு தீர்க்கதரிசனமாகும். ஆனால் இந்த தீர்க்கதரிசனத்தின் உண்மையை அப்துல்-பஹாவும் ஷோகி எஃபெண்டியும் விளக்கியுள்ளனர். முக்கியமாக, ஷோகி எஃபெண்டி இந்த தீர்க்கதரிசனத்தை 1953-இல் அவர் ஆரம்பித்த பத்தாண்டுத் திட்டத்தின் முடிவுடன் ஒப்பிடுகின்றார். இந்த பத்தாண்டு உலகளாவிய அறப்போர் 1963-இல் முடிவுற்றது. ஆனால், 1957-இல் ஷோகி எஃபெண்டியின் எதிர்பாரா மறைவினால் ஏற்பட்ட நிகழ்வுகள் அதன் பின்னர் சில முக்கிய சம்பவங்களுக்கு வழிவகுத்தன.

1963-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட உலக நீதிமன்றத்தின் முதல் 9 உறுப்பினர்கள் (ஹியூ சான்ஸ், ஹூஷ்மன் ஃபாத்தியாஸம் அமோஸ் கிப்ஸன், லுட்ஃபுல்லா ஹாக்கிம், டேவிட் ஹோஃப்மன், போரா கேவ்லின், அலி நாக்ஜவானி, இயன் செம்ப்பல், சார்ல்ஸ் வால்கொட்)

லன்டனில், ஷோகி எஃபெண்டியின் எதிர்பாரா மறைவுக்குப் பிறகு சமயத்தின் தலைமைத்துவ பொறுப்பு ஷோகி எஃபெண்டியினால் நியமிக்கப்பட்ட, ‘தலைமை கலபதிகள்’ என்னும் கடவுள் சமயத்தின் திருக்கரங்கள் மீது விழுந்தது. இந்தத் திருக்கரங்கள் தங்களுள் இருந்து 9 பேரை தேர்ந்தெடுத்துக் கொண்டு, அந்த ஒன்பது பேர் கொண்ட குழு சில முடிவுகளுக்கு வந்தது. அதில் முக்கியமானது, ஷோகி எஃபெண்டி எந்த உயிலையும் விட்டுச் செல்லவில்லை என்பதும் அடுத்து என்ன செய்யப்பட வேண்டும் எனும் பொறுப்பு பஹாவுல்லா கித்தாப்-இ-அக்டாஸில் குறித்துள்ள உலக நீதிமன்றத்திற்கே உள்ளது என்பதும் ஆகும். ஆனால், உலக நீதிமன்றம் இன்னமும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. திருக்கரங்கள், பத்தாண்டுத் திட்டத்தில் மீதமிருந்த 6 ஆண்டுகளுக்குப் பிறகு 1963-இல் உலக நீதிமன்றத்தின் தேர்தல் நடைபெற வேண்டும் எனும் முடிவுக்கு வந்தனர். அது போன்றே, 1963-இல் உலக நீதிமன்றத்தின் தேர்தலும் நடைபெற்றது.

ராயல் அல்பர்ட் அரங்கில் முதலாம் உலக நீதிமன்றத்தின் உறுப்பினர்கள் அறிவிக்கப்படுகின்றனர்

உலக சமய வரலாற்றில் உலக நீதிமன்றத்தில் தேர்தல் போன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற்றதே இல்லை. “தள்ளாடிக்கொண்டிருக்கும் ஒரு நாகரிகத்தின் இறுதிப் புகலிடம்” என ஷோகி எஃபெண்டியினால் வர்ணிக்கப்பட்ட, தவறிழைக்காமை எனும் தன்மை வழங்கப்பட்ட, கடவுளின் சார்பாக உலகை நிர்வகிக்கும் ஒரு ஸ்தாபனம் 1963-இல் நிறுவப்பட்டது. இந்த நிகழ்ச்சியே பைபளில் தீர்க்கதரிசனமாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அப்துல்-பஹாவோ ஷோகி எஃபெண்டியோ அதை நேரடியாகக் குறிப்பிடவில்லை. மாறாக, ஷோகி எஃபெண்டி அதை பத்தாண்டு அறப்போரின் முடிவு எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த முதல் தேர்தல் ஹைப்பா நகரில் உள்ள மாஸ்டர் அப்துல்-பஹாவி்ன் இல்லத்தில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 56 தேசிய ஆன்மீக சபைகள் பங்குபெற்றன. இதைத் தொடர்ந்து, தேர்தலைப் பற்றியும் அதன் முடிவுகளை அறிவிக்கவும் லன்டனில் உள்ள ராயல் அல்பர்ட் அரங்கில் ஒரு மாபெறும் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் சுமார் 6000 பேர் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டுக்காக அந்த முதல் உலக நீதிமன்றம் அதன் முதல் செய்தியை வழங்கியிருந்தது. அதை இங்கு காணலாம்: