பஹ்ரேன்: ஒன்றாக வாழ்தல் மீதான தேசிய ஒன்றுகூடல் அப்துல்-பஹாவுக்கு மரியாதை செலுத்துகிறது.



5 நவம்பர் 2021


இந்த நிகழ்வு பஹ்ரைன் மன்னரைப் பிரதிநிதிக்கும் ஷேக் காலித் பின் கலீஃபா அல் கலீஃபாவையும், மற்ற முக்கிய நபர்களையும் ‘அப்துல்-பஹாவின் அமைதிக்கான அழைப்பைப் பற்றி பிரதிபலித்திட ஒன்றிணைத்தது.

மனாமா, பஹ்ரைன், 5 நவம்பர் 2021, (BWNS) – பஹ்ரைனின் மன்னர் ஹமட் பின் இசா அல் கலீஃபாவைப் பிரதிநிதிக்கும் ஷேக் காலித் பின் கலீஃபா அல் கலீஃபா, அந்த நாட்டு பஹாய்களால்,’அப்துல்-பஹாவின் மறைவின் நூறாம் நினைவாண்டைக் குறிக்கும் வகையில் சனிக்கிழமை நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

“உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நமது பஹாய் சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து, அமைதிக்காக அழைப்பு விடுத்த, தனது வாழ்க்கையையும் அவரது அனைத்து முயற்சிகளையும் மனிதகுல சேவைக்கு அர்ப்பணித்த ஒரு தனித்துவமான மற்றும் குறிப்பிடத்தக்க திருவுருவைக் கொண்டாடுவதற்கு நம்மை ஒன்றிணைத்ததற்காக [பஹாய்களுக்கு] நாங்கள் நன்றி கூறுகிறோம், என டாக்டர் ஷேக் காலித் பின் கலீஃபா அல் கலீஃபா கூறினார், அவர் King Hamad Global Center for Peaceful Coexistence அறங்காவலர் குழுவின் தலைவரும் ஆவார்.

அதிகாரபூர்வ அரச செய்தி நிறுவனம் மற்றும் பிற முக்கிய தேசிய செய்தி நிறுவனங்களால் ஒலி/ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்வு, ‘அப்துல்-பஹாவின் வாழ்க்கை, அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகள் ஆகியன பற்றி சிந்திக்க அரசாங்க அதிகாரிகள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மதத் தலைவர்களை ஒன்றிணைத்தது.

டார் அல்-பிலாத் செய்தித்தாள் குழுவின் தலைவர் அப்துல்நபி அல்-ஷோலா கூறியதாவது: “இந்தக் கூட்டம், அப்துல்-பஹாவின் கருத்துக்கள், சாதனைகள் மற்றும் செயல்களின் ஒப்புதலைப் பிரதிபலிக்கிறது, அவை அனைத்தும் பெண் மற்றும் ஆண்களுக்கிடையிலான சமத்துவம், அன்பு, மற்றும் அனைத்து மக்கள் மத்தியில் சகவாழ்வு ஆகியவற்றின் அடித்தளங்களை அடிப்படையாக கொண்டவை.

“எல்லா மதங்களையும் மதிப்பது மற்றும் ஏற்றுக்கொள்ளல், கடவுளின் ஒருமை மற்றும் ஒரே நம்பிக்கையின் கீழ் அனைத்து மனிதகுலத்தின் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் ஒரு வாழ்க்கை அவருடையதாகும்” என திரு. அல்-ஷோலா தொடர்ந்து கூறினார். “இதுவே அவரது தொலைநோக்கு, இதுதான் எல்லோருடைய கனவும் ஆகும்.”

மற்றொரு பங்கேற்பாளரும், கல்வி அமைச்சின் ஊடகப் பணிப்பாளருமான ஃபவாஸ் அல்ஷூரூக்கி, “பூமியில் உள்ள ஒவ்வொரு ஆத்மாவும் ஆதரிக்க வேண்டிய அப்துல் பஹாவின் செய்தியைப் பற்றிப் பேசினார்.

“இது உலகத்தின் சவால்கள் மற்றும் பிரச்சனைகளை தீர்க்க ஒற்றுமை… மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அழைப்பு. அவரது யோசனைகள் இக்காலத்தைச் சேர்ந்தவையாகும்.

பல பங்கேற்பாளர்கள் ‘அப்துல்-பஹாவால் விளக்கப்பட்ட கொள்கைகளின் தன்மைமாற்றும் சக்தியைப் பற்றி பேசினர். பஹ்ரைன் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் ஷரஃப் அல்-மெசால் கூறுகையில், “உலகம் முழுவதும் நன்கு அறிமுகமான ஒரு திருவுரு மறைந்த நூறாம் நினைவாண்டை இன்று மாலை நாம் நினைவுகூர்கின்றோம்.

அவர் மேலும் கூறியதாவது: “பஹ்ரைனில் உள்ள நாங்கள், ஒன்றுபட்ட மக்களாக, அவரது முன்மாதிரியை வரவேற்பதுடன் மகிழ்ச்சியும் அடைகிறோம். உலகம் முழுவதும் சகவாழ்வு மற்றும் உலகளாவிய அமைதி கொள்கையை ஊக்குவிக்க அவர் முயன்றார்.

டாக்டர் அல்-மெசால் தொடர்ந்து, எந்த அளவுக்கு மக்கள் இந்த கொள்கைகளைப் பின்பற்றுகிறார்களோ அந்த அளவுக்கு “பஹ்ரைனில் அதிக அமைதியும் ஒற்றுமையும் பரவும்” என கூறினார்.

பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த பிரபல கவிஞரான இப்ராஹிம் அல் அன்சாரி ‘அப்துல்-பஹா’வின் வாழ்க்கைக் கதைகளை விவரித்தார், ஒரு கலைஞர் மணல் ஓவியம் மூலம் அக்கதையின் சில பகுதிகளை விளக்கினார்.

சமீபத்திய ஆண்டுகளில், அமைதியான சகவாழ்வு என்னும் கருப்பொருள் பஹ்ரைனின் பொது நனவின் முன்னணியில் உள்ளது. பஹாய் சமூகத்தின் பிரதிநிதியான படீ ஜபேரி, இந்தச் சொல்லாடலுக்குப் பங்களிப்பதற்கான பஹ்ரைன் பஹாய்களின் முயற்சி குறித்து பேசினார், குறிப்பாக சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதில் மதத்தின் பங்கு பற்றி பேசினார்.

“இப்போது நாம் காணும் பன்முகத்தன்மை, ‘அப்துல்-பஹா எடுத்துக்காட்டியவற்றின் மிக அற்புதமான பிரதிபலிப்பாகும், அதாவது மதம் என்பது மக்களிடையே அன்புக்கும் ஒற்றுமைக்கும் காரணமாக இருந்து, அவர்கள் தங்களின் வேறுபாடுகளைக் கடந்திட உதவிட வேண்டும்” என டாக்டர் ஜாபெரி கூறினார்.

“மதமானது, நேர்மை, கருணை மற்றும் மன்னிப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் போது, அனைத்து மதங்களின் விசுவாசிகளும் சமுதாயத்தில் அருகருகே வாழவும் அதற்குச் சேவை செய்யவும் ஒரு பொதுவான அடித்தளம் உள்ளது.”

இந்த சிறு புத்தகம் (அரபு மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கும்), கூட்டத்திற்காக தயாரிக்கப்பட்டு, பங்கேற்பாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டது, ‘அப்துல்-பஹாவின் வாழ்க்கையின் சுருக்கமான வரலாறு மற்றும் அவரது எழுத்துக்களின் தேர்வுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இமாம் ஷேக் முஹம்மது அப்தோ, இளவரசர் முஹம்மது அலி தவ்பிக், ஷேக் அலி யூசுப், அமீர் அல்-பயான் இளவரசர் ஷாகிப் அர்ஸ்லான், அமீன் அல்- ரிஹானி, கஹ்லில் ஜிப்ரான், அகஸ்டே-ஹென்றி ஃபோரல், மற்றும் லியோ டால்ஸ்டாய் உள்ளிட்டோர் உட்பட கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளைச் சேர்ந்த அவரது சமகாலத்தவர்களால் எழுதப்பட்ட ‘அப்துல்-பஹாவின் அசாதாரண பண்பு பற்றிய விவரங்களும் இச்சிறு புத்தகத்தில் உள்ளன. .

மூலாதாரம்: https://news.bahai.org/story/1546/