BAHÁ’Í உலக மையம், 8 நவம்பர் 2021, (BWNS) – மாஸ்ரா’யி மாளிகை என அழைக்கப்படும் பஹாய் புனித யாத்திரைத் தளத்தைப் பாதுகாக்கும் திட்டம் இப்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. மிகவும் குறிப்பாக, பஹாவுல்லாவின் அறை இப்போது வருகையாளர்களுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை அனைத்து பஹாய் தேசிய ஆன்மீகக் சபைகளுக்கும் எழுதிய கடிதத்தில் உலக நீதிமன்றம் இந்தப் புனித ஸ்தலத்தை, “அந்த அமைதியும் புனிதமும் மிக்க இடமும், அக்காநகர சுவர்களுக்குள் ஒன்பது ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு பஹாவுல்லாவின் முதல் குடியிருப்பும்,” என வர்ணித்துள்ளது.
பஹாவுல்லாவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் ஜூன் 1877-இன் தொடக்கத்தில் மாஸ்ரா’யி-யில் குடியேறினர்; அங்கு யாத்ரீகர்கள் பஹாவுல்லாவை தரிசிக்க முடிந்ததுடன், அங்கு அவர் பல நிருபங்களையும் எழுதினார்.
ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கிய பாதுகாப்புப் பணிகள், முற்றம் மற்றும் அதன் சுவர்கள், தளத்தின் வழியாக செல்லும் நீர்வழியின் பகுதிகள், தொழுவங்கள் மற்றும் மாளிகைக்கு அருகிலுள்ள பிற கட்டமைப்பு கூறுகள் மற்றும் தளத்தின் பிற பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டன.
உலக நீதிமன்றம் மேலும் கூறுவதாவது: “வரவிருக்கும் ஆண்டுகளில், மாளிகையின் மற்ற அறைகளில் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், இந்த ஆசீர்வதிக்கப்பட்ட திருவிடத்தின் அமைதியான ஆவியை ஈர்க்க விரும்பும் பார்வையாளர்கள், அவ்விடத்தைச் சுற்றிலும் நடந்து ரசிப்பதற்காக ஒரு பெரிய, திறந்தவெளியை வழங்குவதற்கு சுற்றியுள்ள பகுதி நிலவடிவமைப்பு செய்யப்படும்.
பஹாவுல்லாவின் அறையின் உட்புற காட்சி
சுவர்களிலிருந்து பழைய வர்ணப் பூச்சு மற்றும் காரைகளை அகற்றும் பணியின் போது ஒட்டோமன் காலத்து சித்திரங்கள் வெளிப்பட்டன.
பல ஆண்டுகளுக்கு முன்பு பூசப்பட்ட பாரம்பரிய மலர் ஓவியங்களின் நெருக்கமான தோற்றம், அவை இப்போது பாதுகாப்புப் பணியாளர்களால் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய கண்ணாடி உருவாக்க தொழில்நுட்பத்தின் மூலம் பஹாவுல்லா அறையின் ஜன்னல் கண்ணாடிகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
பஹாவுல்லா, தோப்புகளையும், மலைகளையும் கடலையும் இந்த ஜன்னல்களின் வழி பார்த்து வந்தார்.
பஹாவுல்லாவின் அறைக்கு அருகில் உள்ள மாளிகையின் வெளிப்புறச் சுவர் அதன் அசல் நிலைக்குத் திரும்பியது மற்றும் மூடப்பட்ட ஒரு ஜன்னல் மீட்டெடுக்கப்பட்டது. இடதுபுறத்தில் மறுசீரமைப்புக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம். வலதுபுறத்தில் வீட்டின் அதே பகுதியின் தற்போதைய காட்சி.
பஹாவுல்லாவின் அறையின் வெளிப்புறச் சுவர்களில் இருந்து சாயம் மற்றும் பிளாஸ்டரை அகற்றியதில், பழைய ஜன்னல்களின் வெளிப்புறங்கள் வெளிப்படுத்தப்பட்டன. அவை காரைகளால் நிரப்பப்பட்டிருந்தன. ஜன்னல்களை மீட்டெடுக்கும் பணியின் வெவ்வேறு கட்டங்களில் அறையின் கிழக்கு முகப்பின் ஒரு பகுதியின் காட்சிகள் இங்கே காணப்படுகின்றன.
வீட்டை ஒட்டிய முற்றத்தில், பாதை புனரமைக்கப்பட்டு, சுவர்கள் பல்வேறு கட்டங்களில் பழுதுபார்க்கப்பட்டு, அவற்றின் மையத்தை வலுப்படுத்தி, மீண்டும் பூச்சு பூசப்பட்டுள்ளன.
முற்றத்தின் சுவர்களை மறுசீரமைக்கும் செயல்பாட்டின் போது, 1700-களின் நடுப்பகுதி சார்ந்த பல செதுக்கல்கள் மீட்டெடுக்கப்பட்டன, இப்போது அவை தெளிவாகத் தென்படுகின்றன. அக்காலத்தில் அக்காநகர் கடல் வழியாகச் சென்ற ஒரு பாய்மரக் கப்பலின் மாதிரியைச் சித்தரிக்கும் அத்தகைய ஒரு செதுக்கல் இங்கே படத்தில் காணப்படுகிறது.
முற்றத்தின் கடைசியில், சமயலைறைக்கு இட்டுச் செல்லும் படிக்கட்டுகளை அகழ்வாராய்ச்சி பணிகள் வெளிப்படுத்தியுள்ளன. அவை அக்கால வழக்கப்படி வெளியே அமைக்கப்பட்டிருந்தன. சமயலறையின் மீது மரத்திலான கூரை அமைக்கப்பட்டுள்ளது.
குதிரை லாயத்தில் மரத்திலான கூரை அமைக்கப்பட்டுள்ளது; சுவர்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன; தரை மீட்டெடுக்கப்பட்டுள்ளது.தளத்தின் வழி செல்லும் ஒரு கால்வாய் மீட்கப்பட்டுள்ளது. இந்தக் கால்வாய் பஹாவுல்லாவின் காலத்தில் சிதைவுற்றிருந்தது, ஆனால், அக்கநகர் ஆளுனர் ஏதாவது சேவையை வழங்கிட முன்வந்த போது, பஹாவுல்லாவின் ஆலோசனைப்படி அது மறுபடியும் கட்டப்பட்டு செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது
மாஸ்ரா’யி வழி செல்லும், மீட்கப்பட்ட கால்வாயின் மற்றொரு பகுதியின் காட்சி
கட்டிடத்தின் வடபகுதியில், அதன் பெரும் அளவுக்கும் கொத்துக் கட்டுமானத்திற்கும் தனித்தன்மையுடைய கிணறு மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
கிணற்றுக்கு அருகே ஒரு பெரிய நீர்ப்பாசன குளம் உள்ளது. அதன் சுவர்களும் தரையும் இப்போது மீட்டெடுக்கப்பட்டு மறுவலுப்படுத்தப்பட்டடுள்ளன.
அக்கா சிறைநகரில் ஒன்பது ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு, இந்தச் சூழலில்தான் நாட்டுப்புறத்தின் அழகையும் பசுமையையும் காண பஹாவுல்லாவின் கண்களுக்கு வாய்ப்பேற்பட்டது.