(நன்றி: https://www.bahai.org/action/devotional-life/)
ஒரு கண்ணோட்டம்
உலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் நனவாக்கிட முயன்று வரும் சமூக வாழ்க்கைமுறையின் மையத்தில் சேவையும் வழிபாடுமே உள்ளன. அவை இரண்டும் தனித்துவமான, இருப்பினும் சமூகத்தின் வாழ்வை முன்னோக்கி உந்தித்தள்ளும் பிரிக்கப்பட முடியாத இரண்டு அம்சங்களாகும். “வெற்றியும் செழுமையும் சேவை மற்றும் கடவுள் வழிபாட்டைப் பொறுத்துள்ளன,” என அப்துல்-பஹா கூறுகின்றார்.

தனிநபர், சமூகம், அல்லது ஸ்தாபனங்களின் மட்டத்திலாயினும் பிரார்த்தனை என்பது பஹாய் வாழ்க்கையுடன் ஒருங்கிணைவானதாகும். நாள் முழுவதும் பஹாய்கள் பிரார்த்தனையுடன் தங்கள் இதயங்களை கடவுளின்பால் திருப்பி, அவரது உதவியை வேண்டுகின்றனர், தங்கள் அன்புக்கினியோரின் சார்பாக அவரிடம் மன்றாடுகின்றனர், போற்றுதலையும் நன்றியையும் வழங்குகின்றனர், தெய்வீக உறுதிப்பாடுகளையும் வழிகாட்டலையும் நாடுகின்றனர். மேலும், கலந்தாலோசனைக்கான கூட்டங்களும் ஏதாவது ஒரு செயல்திட்டத்தை மேற்கொள்வதற்கான நண்பர்களின் ஒன்றுகூடல்களும் பிரார்த்தனையுடன் ஆரம்பித்து பிரார்த்தனையுடன் முடிகின்றன.
நண்பர்களும் பஹாய்களும் மற்றும் பிறரும் பிரார்த்தனைக்காக ஒன்றிணையும் ஒன்றுகூடல்களை பஹாய்கள் ஏற்பாடு செய்கின்றனர். இவை பெரும்பாலும் ஒருவர் மற்றவரின் இல்லங்களில் நடைபெறுகின்றன. இது போன்று வழிபாட்டுக் கூட்டங்கள் பங்கேற்பாளர்களில் ஆன்மீக ஈர்ப்புத்திறத்தை தட்டி எழுப்பிட உதவுவதுடன், அவர்கள் மேற்கொள்ளும் சேவை செயல்களுடன் ஒன்றாக, பக்கி உணர்வினால் ஊடுருவப்பட்டதும் ஆன்மீக மற்றும் லௌகீக செழிப்பை அடைவதில் கவனம் செலுத்தும் ஒருவித சமூக வாழ்வு வடிவத்திற்கு வழிவகுக்கின்றன.

பக்தி மற்றும் சேவையின் ஒருங்கிணைவு, மாஷ்ரிஃகுல்-அஸ்கார் ஸ்தாபனத்தில் வெளிப்பாடு காண்கின்றது. இந்தக் கட்டமைப்பு ஒரு புவியியல் பகுதியில் வழிபாட்டு மையபுள்ளியாக இருக்கும் ஒரு மைய கட்டிடத்தை உள்ளடக்கியதுடன், சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்துடன் தொடர்புடைய கல்வி, சுகாதாரம் மற்றும் பிற சேவைகளை வழங்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட துணைஸ்தாபனங்களை உள்ளடக்கியதாகும். இன்று உலகில் சில மாஷ்ரிஃகுல்-அஸ்கார்களே இருந்தாலும், அவற்றை ஸ்தாபிப்பதற்கான வித்துகள் அதிகரித்து வரும் சமூகங்களில் விதைக்கப்படுகின்றன, மற்றும் எதிர்காலத்தில் ஒவ்வோர் உள்ளூரும் அத்தகைய பௌதீக கட்டமைப்பினால் பயனடையும்.