

14 நவம்பர் 2021
லெனகெல், வனுவாத்து, 14 நவம்பர் 2021, (BWNS) – சனிக்கிழமை, வானுவாத்து முழுவதிலும் இருந்து சுமார் 3,000 பேர், சில சமயங்களில் முழு கிராமங்களாகவும், தன்னா தீவில் உள்ள லெனகெலில் பசிஃபிக்கின் முதல் உள்ளூர் பஹாய் வழிபாட்டு இல்லத்தின் அர்ப்பணிப்பு விழாவிற்கு ஒன்று கூடினர்..
தொடக்க நிகழ்ச்சியில் உலக நீதிமன்றம் அந்நிகழ்வுக்கு அதன் பிரதிநிதியாகக் குறிப்பிட்டிருந்த ஹென்றி தமாஷிரோவின் உரை அடங்கியிருந்து. திரு. தமாஷிரோ கூட்டத்திற்கு வழங்கப்பட்டிருந்த உலக நீதிமன்றத்தின் கடிதத்தைப் படித்தார்: “இந்தப் புனிதமான கட்டிடம் ஒளியின் கலங்கரை விளக்காகப் பிரகாசிக்கின்றது. அது ஆன்மீக சக்திகள் பரவும் மையமாக மாறட்டும், அது இறைவனின் ஒளியைப் பரப்பட்டும், விடியலின் ஒளிரும் கதிர்களைப் போல, அது உங்கள் முன் அடிவானத்தை பிரகாசமாக்கட்டும்.

பிரதம மந்திரி பொப் லாஃப்மன் மற்றும் இதர அரசாங்க அதிகாரிகள், மல்வத்துமௌரி தேசிய மன்ற தலைவர்கள் மற்றும் நிகோலேடன் சபை தலைவர்களின் பிரதிநிதிகள், பல்வேறு மத சமூகங்களின் உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் மற்றும் தேசிய பஹாய் ஸ்தாபனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
விழாவில், பிரதமர் லாஃப்மன் தமது உரையில், வனுவாத்துவில் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஆலமரத்தின் உருவப்படத்தை வரைந்து, கோவிலை ஒற்றுமை மற்றும் அமைதிக்கான சக்தியாக விவரித்தார். “எல்லாவிதமான பறவைகள், எல்லா வண்ணங்களிலும், ஆலமரத்திற்கு வந்து, அதன் பழங்களைத் தின்று, அதன் நிழலில் தஞ்சம் அடைகின்றன. அதேபோன்று, இந்த வழிபாட்டு இல்லம் அனைத்து மதங்கள், நம்பிக்கைகள் மற்றும் பின்னணியைச் சேர்ந்தவர்களுக்கும் திறக்கப்பட்டுள்ளது. இதில் அனைவரும் பயன்பெற்றிட வரவேற்கிறோம்.
“தன்னா மற்றும் வனுவாட்டு மக்கள், இளைஞர்கள், தலைவர்கள், அனைவரையும் வழிபாட்டு இல்லத்திற்குச் செல்ல நான் ஊக்குவிக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

இந்த உணர்வுகளை லெனாகெல் மேயர் நாக்கோ சாமுவேல் எதிரொலித்தார்: “பிரார்த்தனைக்கும் சேவைக்கும் இடமான இந்த வழிபாட்டு இல்லத்திற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
“இந்த ஆலயம் அனைவருக்கும் சேவை செய்யும். நீங்கள் எந்த நம்பிக்கையில் இருந்தாலும் அது உங்களுக்கு சேவை செய்யும். இது உங்கள் வீடு. இது தஃபியாவிற்கும் (தன்னா அமைந்துள்ள மாகாணம்) மற்றும் அனைத்து வனுவாத்துவிற்குமான இல்லம்.

நிகழ்ச்சி முழுவதும், கடந்த தலைமுறைகளின் சேவைகளுக்கான ஒப்புகையுடன் எதிர்காலத்திற்கான ஆர்வநம்பிக்கையின் வெளிப்பாடுகள் பின்னிப்பிணைந்தன. வழிபாட்டு இல்லத்தின் தோற்றம் 1950-களின் முற்பகுதியில் இந்த மண்ணில் சமயத்தை ஏற்றுக்கொண்ட முதல் பஹாய்களின் முயற்சிகளுடன் இந்த வழியில் இணைக்கப்பட்டது.

இன்று தன்னாவில், இளைஞர்கள் முன்னணியில் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கின்றனர்.
தன்னாவைச் சேர்ந்த ஓர் இளைஞரான செராஹ் இவ்வாறு கூறினார்: “நம் சமூகத்திற்கு நாம் தன்னலமற்ற மனப்பான்மையுடனும், பிரார்த்தனையுடன் கூடிய பக்தியுடனும் சேவை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டு இல்லம் எங்கள் இதயங்களில் இந்த எண்ணத்தையே ஆழமாக ஊன்றியுள்ளது.
அவர் மேலும் கூறியதாவது: “இந்த அர்ப்பணிப்பு விழாவால் நாங்கள் மிகவும் ஊக்கமடைகின்றோம், எங்கள் சமூகங்களுக்குத் திரும்பிச் செல்லவும் இந்த யோசனைகளைச் செயல்படுத்தவும் நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.”

சமீபத்தில்தான் கட்டி முடிக்கப்பட்ட இந்த கோவில் நி-வானுவாத்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அம்சங்களை பிரதிபலிக்கின்றது. வானுவாத்துவின் பஹாய் தேசிய ஆன்மீக ஆன்மிகச் சபையின் உறுப்பினரான நலாவ் மனகேல் இவ்வாறு கூறினார்: “வழிபாட்டு இல்லத்தின் வடிவமே எரிமலையை நினைவூட்டுகிறது. மேலும், கூரையின் ஒன்பது இறக்கைகள் நிலத்தையும் பள்ளத்தாக்குகளையும் அவற்றுக்கு இடையே ஓடும் ஆற்றங்கரைகளையும் குறிக்கின்றன..
“கூரையின் பிற அம்சங்கள் பழங்குடியினரின் தலைவர்கள் அணியும் இறகுகளையும், டோக்கா நடனக் கலைஞர்கள் பயன்படுத்தும் நடனக் குச்சிகளையும் பிரதிபலிக்கின்றன. இது, ஆலயத்தின் குவிமாடத்தின் உச்சியை மரியாதைக்குரிய அடையாளமாக சுட்டிக்காட்டுகிறது.”

இந்த நிகழ்வைப் பிரதிபலிக்கும் வகையில், உலக நீதிமன்றத்தின் பிரதிநிதியான திரு. தமாஷிரோ, வழிபாட்டு இல்லத்தின் கருத்தாக்கத்தை விரிவுபடுத்தினார்: “ஒரு சுடருக்கு அந்துப்பூச்சிகளைப் போல, நாங்கள் இந்த ஆலயத்தின்பால் ஈர்க்கப்படுகின்றோம். ” ஒன்றுகூடி நமது ஜனன மூலத்துடன் தொடர்புகொள்ளவும், உத்வேகம் பெறவும், நமது சமூகங்களின் ஆன்மீக மற்றும் லௌகீக மேம்பாட்டிற்கு பங்களிக்கவும் இது நம் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றது.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1550/