வழிபாட்டு இல்லங்கள்: நூற்றாண்டு நினைவேந்தல்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன
விசேஷ பிரார்த்தனைகள், கண்காட்சிகள், கலை விளக்கக்காட்சிகள், கோவில் வளாகங்களில் கலந்துரையாடல்கள் போன்றவற்றுடன் உலகம் முழுவதுமுள்ள பஹாய் வழிபாட்டு இல்லங்களில் அப்துல்-பஹா மறைந்து ஒரு நூற்றாண்டு நிறைவின் நினைவேந்தலுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
வில்மட், ஐக்கிய அமெரிக்கா, 23 நவம்பர் 2021, (BWNS) – மனிதகுலத்திற்கான அப்துல்-பஹாவின் சேவை குறித்த கருப்பொருள்களை ஆராயும் அவரது வாழ்க்கையுடன் தொடர்புள்ள விசேஷ பிரார்த்தனைகள், கண்காட்சிகள், கலை விளக்கக்காட்சிகள், கோவில் வளாகங்களில் கலந்துரையாடல்கள் போன்றவற்றுடன் உலகம் முழுவதுமுள்ள பஹாய் வழிபாட்டு இல்லங்களில் அப்துல்-பஹா மறைந்து ஒரு நூற்றாண்டு நிறைவின் நினைவேந்தலுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தக் கோவில்கள், அவற்றின் சமூகங்களின் மையத்தில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கங்களென வீற்றிருந்து, குறிப்பாக பெருந்தொற்றின்போது, மக்களில் பிரார்த்தனை மற்றும் சேவைக்கான உத்வேகத்தை, வழங்கிவருகின்றன.
உலகிலுள்ள அத்தனை வழிபாட்டு இல்லங்களிலும் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள வில்மட் வழிபாட்டு இல்லம் அப்துல்-பஹாவுடன் ஒரு விசேஷ தொடர்பைக் கொண்டுள்ளது—அக்கோவிலைத் திட்டமிடுதலில் நேரடியாக ஈடுபட்டு, 1912-இல் அமெரிக்காவுக்கான அவரது வரலாற்று முக்கியத்துவமிக்க விஜயத்தின்போது அக்கோவிலுக்கான அடிக்கல்லை அவரே நாட்டினார்.
அந்த விசேஷ முக்கியத்துவமிக்க நாளின் நூறாம் ஆண்டினைக் குறிக்க, உலக நீதிமன்றம் வெளியிட்ட ஒரு செய்தியில் பின்வருமாறு உள்ளது:
“நூறு வருடங்களுக்கு முன்பு ரித்வான் பண்டிகையின் 11-ஆம் நாளன்று, பிற்பகலின் மத்திய நேரத்தில், நூற்றுக்கணக்கில் திரண்டிருந்த மக்களுக்கு முன் அப்துல் பஹா நின்று கொண்டு தொழிலாளர் கோடரியை கையிலெடுத்து வட சிக்காகோ நகரின் குரோஸ் பொயிண்டியிலுள்ள கோவில் நிலத்தின் மேற்பகுதியைப் பெயர்த்தார். அந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கென அழைக்கப்பட்டவர்கள் பல்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்கள். அவர்களுள் சிலர் நோர்வேஜியர்கள், இந்தியர்கள், பிரெஞ்சு நாட்டவர்கள், ஜப்பானியர்கள், பாரசீகர்கள், அமெரிக்காவின் பூர்வீகக் குடியினர் ஆகியோரும் அடங்குவர். ஒŕவொரு வழிபாட்டு இல்லத்தின் நிறைவேற்றத்திற்காக, அந்த நில தகர்ப்பு சடங்கின்போது, அப்துல் பஹா தெரிவித்த விருப்பங்களை இன்னமும் கட்டப்பட்டிராத அந்த வழிபாட்டு இல்லம் நிறைவு செய்வதுபோல் இருந்தது: ‘ஒன்றுகூடுவதற்காக ஓர் இடத்தை மானிடம் கண்டடைய வேண்டும்,’ மற்றும் ‘மானிடத்தின் ஒருமைப்பாட்டினுடைய பிரகடனம் அதன் புனிதமான திறந்த அரங்குகளிலிருந்து வெளிப்பட்டு முன்செல்ல வேண்டும்.’”
பஹாய் கோயில்களின் படங்கள் மற்றும் அவற்றின் தனித்துவமான வடிவமைப்புகளின் தொகுப்பையும், இந்த வழிபாட்டு மற்றும் சேவைத் தலங்களில் நூற்றாண்டு நினைவு தினங்களுக்கான திட்டங்களின் கண்ணோட்டத்தையும் கீழே அல்லது news.bahai.org -இல் காணலாம்.
அப்பியா, சமோவா
நூற்றாண்டு நினைவேந்தலை முன்னிட்டு, அனைத்து வயதினரும், ‘அப்துல்-பஹா’வின் வாழ்க்கை வரலாற்றைச் செவிமடுக்க, கோவில் மைதானத்தில் கூடி வருகின்றனர். நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் நிகழ்ச்சியில் இளைஞர்களின் வழிபாடுகள், பாரம்பரிய பாடல்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை அடங்கும்.
பத்தம்பாங், கம்போடியா
வரும் நாள்களில், உள்ளூர் தலைவர்களும் வாசிகளும் இந்த வழிபாட்டு இல்லத்தில் நடைபெறும் வழிபாடுகளில் கலந்துகொள்வர். சுற்றிலும் உள்ள பஹாய் சமூகங்களில் மேலும் பல நூற்றாண்டு நினைவேந்தல்கள் நடைபெறும்.
ஃபிராங்ஃபர்ட், ஜெர்மனி
இந்த வழிபாட்டு இல்லத்தின் திட்டங்களில் பிரார்த்தனைக் கூட்டங்கள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான அப்துல்-பஹாவின் பங்களிப்புகள் பற்றிய விளக்கக்காட்சிகள் அடங்கும். விண்ணேற்ற இரவில், இளைஞர்கள் தன்னலமற்ற சேவை மற்றும் அன்பு குறித்த கருப்பொருள்கள் தொடர்பான ‘அப்துல்-பஹாவின் வாழ்க்கையைப் பற்றிய கதைகளைப் பகிர்ந்து கொள்வர், அடுத்த நாள், குழந்தைகள் நிகழ்ச்சியில் கைவினை விளக்குகள் தயாரித்தல் அடங்கும்.
கம்பாலா, உகான்டா
அப்துல்-பஹா’வை கௌரவிக்கும் நிகழ்ச்சி இந்த வார இறுதியில் நடைபெறும், கம்பாலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் மற்றும் கடவுளின் அருகாமை, அமைதி போன்ற கருப்பொருள்களில் ‘அப்துல்-பஹாவின் எழுத்துக்களைப் பற்றி சிந்திக்கவும் பிரார்த்தனை செய்யவும் ஒன்றுதிரட்டப்படுவர்,
மாத்துன்டா சோய், கென்யா
மாத்துன்டா சோய்-இல் உள்ள உள்ளூர் பஹாய் வழிபாட்டு இல்லத்தில் தலைவர்கள், உள்ளூர் அதிகாரிகள், கிராமப் பெரியவர்கள், பல்வேறு நம்பிக்கைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிற பகுதிவாசிகள் தொடர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்பர். இந்த நிகழ்வுகள் சனிக்கிழமையன்று ஒரு கூட்டத்தில் முடிவடையும், இதில் உள்ளூர் பாடகர் குழுவின் சிறப்பு நிகழ்ச்சியும் அடங்கும்.
புது டில்லி, இந்தியா
இந்த வழிபாட்டு இல்லத்தைச் சுற்றியுள்ள சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள், தாமரை மலரால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பால் “தாமரை கோயில்” என்று பிரபலமாக குறிப்பிடப்படும், வழிகாட்டப்பட்ட விஜயங்களுக்காக கோயில் தளத்தில் கூடுகிறார்கள். ஒவ்வொரு விஜயத்தின் போதும், ‘அப்துல்-பஹாவைப் பற்றி சமீபத்தில் வெளியிடப்பட்ட உதாரணபுருஷர் திரையிடல்-அவரது வாழ்க்கையைப் பற்றிய ஒரு கண்காட்சியைப் பார்ப்பது, மற்றும் பிரார்த்தனைகள், இசை மற்றும் பஹாய் எழுத்துக்களின் மேற்கோள்களின் வாசிப்புகளைக் கொண்ட பக்தி நிகழ்ச்சி ஆகியவை அடங்கும்.
நோர்ட்டெ டெல் கௌக்கா, கொலம்பியா
நகர மேயர்கள், அருகிலுள்ள நகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற இடங்களில் வசி்ப்போரும் இந்த வழிபாட்டு இல்லத்தில் நூறாம் ஆண்டு நினைவேந்தல் குறித்த ஒரு விசேஷ நிகழ்வுக்காக ஒன்றுகூடுவர்.
பனாமா நகர், பனாமா
வரும் நாள்களில், உள்ளூர் பஹாய் ஸ்தாபனங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் இந்த வழிபாட்டு இல்லத்தில் நடைபெறும். நிகழ்ச்சியில் குழந்தைகளால் இசைக்கப்படும் பிரார்த்தனைகள், இளைஞர்களால் சொல்லப்பட்ட கதைகள் மற்றும் மதத்தின் ஒருமைப்பாடு போன்ற ‘அப்துல்-பஹா குறித்துரைக்கும் கருப்பொருள்கள் பற்றிய பேச்சுக்கள் அடங்கும்.
சாந்தியாகோ, சில்லி
பஹாய் சமூகத்தை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளில் பங்கேற்கும் பார்வையாளர்கள் உட்பட, ‘அப்துல்-பஹாவின் வாழ்க்கை மற்றும் பணியைப் பற்றி மேலும் அறிந்திட, வரவிருக்கும் நாட்களில் வழிகாட்டப்பட்ட விஜயங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. ‘அப்துல்-பஹாவின் உயில் மற்றும் சாசனத்தில் இருந்து இசைப் பகுதிகளை அமைக்கும் புதிய பாடல்களை கோயில் பாடகர் குழு தயாரித்துள்ளது. இந்த பாடல்கள் வாரம் முழுவதும் நூற்றாண்டு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக வழங்கப்படும்.
சிட்னி, ஆஸ்த்திரேலியா
பிரார்த்தனைக்கான ஒன்றுகூடல்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அனைத்து மக்களிடமும் ‘அப்துல்-பஹாவின் அன்பைப் பற்றிய கதைகளைக் கேட்க ஒரு சிறப்பு நிகழ்ச்சி மற்றும் சமூகத்திற்கு சேவை செய்யும் கருப்பொருள் பற்றிய விவாதங்கள் உட்பட., நூற்றாண்டு நினைவேந்தலைக் குறிக்கும் பல கூட்டங்கள் இந்த வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ளன.
தன்னா, வானுவாத்து
சமீபத்தில் திறக்கப்பட்ட பசிபிக் பகுதியில் உள்ள முதல் உள்ளூர் பஹாய் கோவிலான இந்த வழிபாட்டு இல்லம் ஒரு வழிபாட்டு நிகழ்ச்சியுடன் நூற்றாண்டு விழாவைக் குறிக்கவிருக்கின்றது. பங்கேற்பாளர்களில் பாரம்பரிய தலைவர்கள், பல்வேறு நம்பிக்கை சமூகங்களின் உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர்.
வில்மட், ஐக்கிய அமெரிக்கா
கோவிலின் பிரதான மண்டபத்தில் நடைபெறும் பக்தி கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும், ‘அப்துல்-பஹாவுடன் தொடர்புடைய காப்பகப் பொருட்களின் கண்காட்சியைப் பார்ப்பதற்கும் அப்பகுதிவாசிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். அவர் தொட்ட ஆரம்பகால அமெரிக்க பஹாய்களின் வாழ்க்கை குறித்த பல்வேறு பொருட்களும் இந்த கண்காட்சியில் அடங்கும்.