ஒரு தெய்வீகக் காதல் கதை


என் இனிய அன்பே … (நாம்) பிரிந்த நேரம் முதற்கொண்டு வர்ணிக்க முடியாத அளவிற்குத் துக்கம் கடுமையாகியுள்ளது… (பாப் பெருமானார் தமது மனைவிக்கு எழுதிய கடிதம். H.M. Balyuzi, Khadijih Bagum: Wife of The Bab)

(இங்கு வெளிப்படுத்தப்படும் சில கருத்துகள் தனிநபர் கருத்துகளாகும், சில தருணங்கள் தவிர்த்து அவை அதிகாரபூர்வ கருத்துகளைப் பிரதிநிதிக்கவில்லை.)

இறைத்தூதர்கள் இருவிதமான தன்மைகளைக் கொண்டுள்ளனர் என்பது நமக்குத் தெரியும். ஒருபுறம் அவர்கள் கடவுளின் நிலையில் செயல்படுகின்றனர். மறுபுறம் அவர்கள் மனித நிலையில் வாழ்கின்றனர். மனித நிலையில் எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் அதே உணர்வுகளும் விருப்பங்களும் வேதனைகளும் தேவைகளும் அவர்களுக்கும் இருக்கின்றன. சாதாரன மனிதர்களைப் போன்றே அவர்களும் திருமணம் புரிந்துகொள்கின்றனர், பிள்ளைகளைப் பெற்றுக்கொள்கின்றனர். பஹாவுல்லாவும் இது போன்றே வாழ்ந்தார், திருமணம் புரிந்துகொண்டார், பிள்ளைகள் பெற்றார், வாழ்க்கையில் அன்பு, துன்பம், சித்திரவதை ஆகியவற்றை அனுபவித்தார்.

அதே போன்று பாப் பெருமானாரும் இவ்வுலகில் ஒரு மனித வாழ்க்கை வாழ்ந்தார். திருமணம் புரிந்துகொண்டார். திருமண வாழ்வைப் பொறுத்தமட்டில் பாப் பெருமானாரின் வாழ்க்கை சற்று வேறுபட்டதாகும். பஹாவுல்லாவுக்கு அவரது தமக்கையார் பெண் பார்த்து ஆஸிய்யா காஃனுமைத் திருமணம் செய்து வைத்தார். பாப் பெருமானாரின் வாழ்க்கைத் துணைவியை அவரது தாயாரே தீர்மானித்து அவருக்குத் திருமணம் செய்து வைத்தார். ஆனால், பாப் பெருமானாரும் அவரது வருங்கால மனைவியும் அறிமுகமற்றவர்கள் அல்ல. குழந்தைப் பருவம் முதற்கொண்டே அவர்கள் ஒருவர் மற்றவருடன் நன்கு பழக்கமானவர்கள்.

பாப் பெருமானாரும் அவரது மனைவியான கத்திஜா பேகம் இருவரும் உறவினர்கள் ஆவர். அவர்களின் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினராக இருந்தனர். அதன் காரணமாக பாப் பெருமானாரும் அவரது மனைவியும் குழந்தைப் பருவம் முதல் ஒன்றாக வளர்ந்தனர், ஒன்றாக விளையாடினர். ஆனால், அவர்களுக்கு வயது வந்தபோது, ஒரு வயது வந்த ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவருடன் நெருங்கிப் பழகக் கூடாது என்னும் இஸ்லாமிய விதியைக் கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று. பாப் பெருமானாரின் பதின்ம வயதில் அவர் தமது மாமன்மார்களின் வணிகத்தைக் கவனிப்பதற்காக புஷீர் நகரத்திற்கு சென்றார். (அப்துல்-பஹாவின் மனைவியான முனிஃரி கானும், தமது திருமணத்திற்கு முன் அக்காநகர் செல்லும் வழியில் பாப் பெருமானாரின் இல்லத்தில் கத்திஜா பேகத்துடன் சிறிது காலம் தங்கியிருந்தார். பாப் பெருமானார் புஷீர் நகரம் செல்வதற்கு முன் அவரது தாயார் கத்திஜா பேகத்தின் வீட்டிற்கு பெண் கேட்பதற்காக வந்தார் என கத்திஜா பேகம் கூறியதாக முனிரி கானும் தமது நினைவுக்குறிப்புகளில் விவரிக்கின்றார். பாப் பெருமானார் கர்பிலாவிலிருந்து ஷிராஸ் திரும்பிய பின்னரே அவர் தாயார் பெண் கேட்பதற்காக கத்திஜா பேகத்தின் வீட்டிற்குச் சென்றதாக வேறு குறிப்புகள் கூறுகின்றன. ஒரு வேளை பாப் பெருமானாரின் தாயார், பாப் பெருமானார் புஷீர் செல்வதற்கு முன்பாக அவருக்குக் கத்திஜா பேகத்தை நிச்சயம் செய்திட விரும்பியிருக்கலாம், பின்னர் அவர் கர்பிலாவிலிருந்து ஷிராஸ் திரும்பியவுடன் திருமண ஏற்பாடுகளை கவனித்திருக்கலாம்.)

கத்திஜா பேகத்தின் திருமணம் குறித்து முனிஃரி கானும் வினவிய போது, பாப் பெருமானாரின் தாயார் தம்மைப் பெண் கேட்பதற்காக வருவதற்கு சில காலத்திற்கு முன்பு கத்திஜா பேகம் கனவு ஒன்றைக் கண்டார் என கத்திஜா பேகம் கூறுகின்றார்.

“ஒரு நாள் இரவு, நான் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த போது, நபி முகம்மது அவர்களின் மகளான பாத்திமா, அவ்வில்லத்து பெண்களுள் ஒருவர் அவரது மகனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமெனும் விருப்பத்துடன்  அவர்களின் இல்லத்திற்கு வருகின்றார். என் சகோதரிகளும் நானும் அவரை வாஞ்சையுடனும் மரியாதையுடனும் வரவேற்றோம். அவர் அமர்ந்த பிறகு, எங்களை உன்னிப்பாகக் கவனித்தார், பின்னர் இருக்கையிலிருந்து எழுந்து வந்து என் நெற்றியில் முத்தமிட்டார்.” Munirih Khanum, Episodes in the life of Munirih Khanum, Marriage of Khadijah to the Bab, pp. 32-33.

பாப் பெருமானாரின் மனைவி அடக்கம் செய்யப்பட்டிருக்கும் தளம்

“அடுத்தநாள் காலை, நான் எழுந்த போது நான் காற்றில் மிதப்பது போன்ற உணர்வை அடைந்தேன். ஆனால், நான் கண்ட கனவை யாரிடமும் கூறுவதற்கு எனக்கு வெட்கமாக இருந்தது. அதே நாள் பிற்பகலில் பாப் பெருமானாரின் தாயார் எங்கள் இல்லத்திற்கு வந்தார். என் சகோதரிகளும் நானும் அவரை வரவேற்கச் சென்றோம். ஆச்சரியப்படும் வகையில் அவர் நான் கனவில் கண்ட அதே விதத்தில் தமது இருக்கையை விட்டு எழுந்து, புன்னகையுடன் என்னிடம் வந்து, என் நெற்றியில் முத்தமிட்டு என்னை அரவணைத்தார். சிறிது சம்பாஷனைக்குப் பிறகு அவர் விடைபெற்றார். என் மூத்த சகோதரி, பாப் பெருமானாரின் தாயார் என்னைத் தமது மகனுக்குப் பெண் கேட்டு வந்தார் என என் காதில் முனுமுனுத்தார். “நான் எத்தகைய பாக்கியசாலி” என்றேன் . அதன் பின்னர் முன்னிரவில் நான் கண்ட கனவைப் பற்றி கூறி, இந்தக் கனவு நனவாகியது என் உள்ளத்திற்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறினேன்.” – Munirih Khanum, Episodes in the life of Munirih Khanum, Marriage of Khadijah to the Bab, pp. 32-33.

திருமணத்திற்கு முன் ஒரு சாதாரன பெண்ணாக வாழ்த்து வந்த கத்திஜா பேகத்தின் மனதில் தமது வருங்கால கணவர் குறித்து பலவித எண்ணங்கள் தோன்றியிருக்கும். தமக்கு ஏற்கனவே அறிமுகமான பாப் பெருமானாரின் அற்புத குணங்களை அறிந்திருந்த அவர் தமது எதிர்கால வாழ்க்கை குறித்து என்னென்னவோ கனவுகள் கண்டிருப்பார்.

விரைவில் 23 வயதான பாப் பெருமானாருக்கும், 20 வயதாகியிருந்த கத்திஜா பேகத்திற்கும் 25 ஆகஸ்ட் 1842-இல் திருமணம் நடைபெற்றது; இருவரும் ஒருவர் மற்றவர் மீது கொண்ட அன்பில் இலயித்திருந்தனர். ஆனால், திருமணம் நடைபெற்ற சில காலத்திற்குள் கத்திஜா பேகம் ஓர் அச்சுறுத்தும் கனவு ஒன்றைக் கண்டார். அக்கனவில், ஒரு பயங்கரமான சிங்கம் அவரது வீட்டு முற்றத்தில் தோன்றியது. கத்திஜா பேகம் அதன் கழுத்தை தமது கரங்களால் இருகப் பற்றிக்கொண்டார். அந்த சிங்கம் அவரை இரண்டரை முறை அம்முற்றத்தைச் சுற்றி இழுத்து வந்தது. அடுத்த நாள் விடிந்தவுடன் தமது கனவரிடம் அப்பயங்கர கனவு பற்றி கூறினார். பாப் பெருமானார் அக்கனவின் அர்த்தம் குறித்து விளக்கினார் – அவர்களின் இல்லற வாழ்க்கை இரண்டரை வருடங்களுக்கு மேல் நீடிக்காது. இவ்வாறாக, வரப்போகும் பல இன்னல்களுக்கு அத்தம்பதியர் தயாராகினர்; அவர்களின் வாழ்க்கையில் அதிலிருந்து ஒரு திருப்பமும் ஏற்பட்டது.

ஒரு வருடத்திற்குப் பிறகு கத்திஜா பேகம் கர்ப்பமுற்றார், அவரது தலை பிரசவகாலம் நெருங்கியது. பிரசவத்தின் போது கத்திஜா பேகம் பிரசவ வேதனையால் பெரிதும் அவதியுற்றார்; அது அவருக்கும் அவர்களின் குழந்தைக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக இருந்தது. அச்சமுற்ற பாப் பெருமானாரின் தாயார் தம் மகனிடம் சென்று முறையிட்டு, தாய் சேய் இருவரையும் காப்பாற்றும்படி அவரை வேண்டினார். பாப் பெருமானார் ஒரு கண்ணாடியை எடுத்து அதில் ஒரு பிரார்த்தனையை எழுதினார். அக்கண்ணாடியை தமது மனைவி கத்திஜாவின் முகத்திற்கெதிரே காண்பிக்கும்படி கூறினார். விரைவில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு அஹமத் எனப் பெயரிட்டனர். ஆனால் , பிரசவத்திற்குப் பின் சில காலத்திற்குள் அக்குழந்தை இறந்துவிட்டது.

பாப் பெருமானாரின் மகன் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்தை படத்தில் காணப்படும் மரம் குறிக்கின்றது

தாயையும் சேயையும் ஒன்றாகக் காப்பாற்றவில்லை என பாப் பெருமானாரின் தாயார் அவர்மீது மிகவும் கோபமுற்றார். அதற்கு பாப் பெருமானார், தமக்கு பிள்ளைப் பேறு கிடையாது என்பது இறைவனால் விதிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

அதன் பின்னர், தமது இளம் மனைவியின் மீது அபரித அன்புடைய பாப் பெருமானார், ஆறுதலளிக்கும் இச்சொற்களை அவருக்கு எழுதினார்:

“நல்லன்புக்கு உரியவரே! அதிவிழுமிய நினைவுகூர்தலின் அருளுக்குப் பெரிதும் மதிப்பளிப்பீராக, ஏனெனில் அது அன்புக்குரியவரான கடவுளிடமிருந்து வருகின்றது. நீர் அதிபெரும் உண்மையான, உண்மை சமயத்திற்குக் கீழ்ப்படிவீராயின் நீர் மற்ற பெண்களைக் போல் இருந்திட மாட்டீர். நாள்களுக்கெல்லாம் புராதனமானவரினால் உமக்கு வழங்கப்பட்டுள்ள பெரும் அருட்கொடையை உணர்ந்து, கடவுளால் நேசிக்கப்படும் நல்லன்புக்குரியவரின் துணைவியாக இருப்பதில் பெருமை கொள்வீராக. சர்வ ஞானியும், முற்றிலும் புகழப்படுபவரான கடவுளிடமிருந்து உமக்கு வரும் இந்த மகிமையே உமக்குப் போதுமானது. பாப் பெருமானாருக்கும் அவரது குடும்பத்திற்கும் ஆண்டவர் விதித்துள்ளவற்றின்பால் பொறுமையுடன் இருப்பீர். மெய்யாகவே, உமது மகன் அஹமத், பரிசுத்த சொர்க்கத்தில் அதிவிழுமியவரான பாத்திமாவிடம் இருக்கின்றான்.” – H.M. Balyuzi, The Bab, p. 47

ஆன்மீக முதிர்ச்சியும் அறிவொளியும் பெற்றிருந்த கத்திஜா பேகம், தமது கணவர் மற்ற மனிதரைப் போன்ற ஒரு மனிதரல்ல என்பதை அவதானித்திருந்தார். ஆனால் எந்த அளவுக்கு என்பதை ஒரு மறக்கமுடியாத இரவுவரை அவரால் அறிந்துகொள்ள முடியவில்லை. பாப் பெருமானார் தமது அருட்பணியைப் பிரகடனம் செய்வதற்குச் சில காலத்திற்கு முன், கத்திஜா பேகத்திற்கு தமது கணவரால்  ஓர் அற்புத நிகழ்வு உண்டாயிற்று. ஒரு நாள் பின்மாலை நேரத்தில் பாப் பெருமானார் அவர்களின் படுக்கையை விட்டு எழுந்து சென்று வெகு நேரம் ஆகியும் திரும்பிவரவில்லை. கவலையுற்ற கத்திஜா பேகம், அவரைத் தேடுவதற்கு ஆரம்பித்தார். “இரட்டை தெய்வீக மரங்கள்” என்னும் நூலில் பின்வருமாறு விவரிக்கப்படுகின்றது:

… வீட்டின் உப்பரிகையிலுள்ள அறை ஒளியில் மூழ்கியிருப்பதை அவர் கண்டார். இந்த ஒளியின் மூலாதாரம் எது, மற்றும் விளக்குகள் எங்கிருந்து வந்தன, என அவர் தம்மைத் தாமே கேட்டுக்கொண்டார். ஆனால் இது கண்களால் பார்க்கக்கூடிய ஒளியல்ல; அது தெய்வீக ஒளி; அதை அவர் தமது வெளிக்கண்களால் பார்க்கவில்லை, அதைத் தமது அகப்பார்வையினால் உணர்ந்தார். … அங்கு உலகைப் பிரகாசிக்க செய்யும் சூரியன், ஒளிவீசும் சந்திரன் அறையின் நடுவில், கரங்களை உயர்த்தியவாறு நின்றுகொண்டிருந்தது. அவரிலிருந்து வெளிப்பட்ட கண்களைக் கூசச் செய்யும் ஒளியின் மீது கத்திஜா பேகத்தின் பார்வை குத்திட்டிருந்த அதே வேளை, பிரமிப்பும் பயமும் கலந்த ஓர் உணர்வு அவரை ஆட்கொண்டது. அவர் படுக்கையறைக்குத் திரும்ப நினைத்தார், ஆனால் நகர முடியவில்லை. அவரது பிரமிப்பின் அதிகரிப்பானது அவரை ஸ்தம்பிக்கச் செய்தது. – quoted by Baharieh Rouhani Ma’ani, Twin Divine Trees, p. 34.

அடுத்த நாள் காலை, பாப் பெருமானார் அவரிடம் பின்வருமாறு கூறினார்:

எல்லாம் வல்ல இறைவன் எம்மில் வெளிப்பாடு காண்கின்றார் என்பதை அறிவாயாக. இஸ்லாமிய மக்கள் ஆயிரம் வருடங்களாக எதிர்ப்பார்த்து வந்த அந்த அந்த ஒருவர் யானே. கடவுள் எம்மை ஒரு மாபெரும் அருட்பணிக்காகப் படைத்துள்ளார்; அந்த தெய்வீக வெளிப்பாட்டை நீ கண்ணுற்றாய். அந்த நிலையில் எம்மை நீ கண்ணுறுவதை யான் விரும்பவில்லை எனினும், உனது உள்ளத்தில் சந்தேகத்திற்கும் தடுமாற்றத்திற்கும் சிறிதும் இடமில்லாமல் இருந்திட வேண்டுமென கடவுள் விதித்துள்ளார். – Ibid., p. 35

பாப் பெருமானார் உச்சரித்த இந்தச் சொற்களை செவிமடுத்தவுடனேயே அவரில் தாம் நம்பிக்கை கொண்டுவிட்டதாக கத்திஜா பேகம் விவரித்தார் … அவர் இதயம் அமைதியும் உறுதியும் அடைந்தது. பின்னர், பாப் பெருமானார், தாம் இல்லாத போதோ தமது பாதுகாப்பு குறித்து பயப்படும்போதோ கூறுவதற்குத் தமது அன்பிற்கினிய கத்திஜாவுக்கு ஒரு விசேஷப் பிரார்த்தனையை வெளிப்படுத்தினார். அதில் அவர்:

நீ குழப்பமடைந்துள்ள நேரத்தில், துயில்கொள்வதற்கு முன் இப்பிரார்த்தனையைக் கூறுக. யானே உனக்குப் பிரசன்னமாகி உனது குழப்பத்தைப் போக்குவேன், என குறிப்பிட்டிருந்தார். – Nabil, The Dawn Breakers, p. 143

பாப் பெருமானாரும் அவரது மனைவியான கத்திஜாவும் “விடியலின் நேரம்” – ஒரு புதிய உலக சமயத்தின் ஆரம்பம் – என அறியப்படும் ஒரு நேரத்தில் பெரும் தியாகம் நிறைந்த ஒரு வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டனர். மதம் சார்ந்த கடுமையான துன்புறுத்தல், கட்டாயமான பிரிவு, புதிதாகப் பிறந்த மகவின் பேரிழப்பு ஆகியவற்றினூடே அவர்கள் இருவரும் ஒருவர் மற்றவர் மீதும் கடவுளிடமும் நிலையான பற்றுறுதியுடன் இருந்து வந்தனர். அத்தம்பதி பிரிவை எதிர்நோக்கும் போது உணர்ந்த துக்கத்தை பாப் பெருமானார் வர்ணிக்கின்றார்:

என் இனிய அன்பே … (நாம்) பிரிந்த நேரம் முதற்கொண்டு வர்ணிக்க முடியாத அளவிற்குத் துக்கம் கடுமையாகியுள்ளது… – H.M. Balyuzi, Khadijih Bagum: Wife of The Bab

சிறிது காலமே திருமணமாகி, ஒருவர் மற்றவர் மீது ஆழ்ந்த அன்புகொண்டிருந்த அந்த இளம் ஜோடி இவ்வுலகில் சிறிது காலமே ஒன்றாக இருந்தனர். ஆனால், அந்தக் குறுகிய காலத்தில் அவர்கள் தங்களுக்குக் கிடைத்த ஒவ்வொரு நாளையும் ஆராதித்து, எதிர்ப்பட்ட ஒவ்வொரு இன்னலையும் வெற்றிகொண்டனர். அவர்களின் அன்பு நித்திய காலமும் நீடிக்கும். அவர்கள் கடவுளின் எல்லா உலகங்களிலும் ஒன்றிணைந்திடுவர்

பாப் பெருமானார் தீர்க்கதரிசனமாக கூறியது போன்று, கத்திஜா பேகம் கண்ட கனவிற்கு இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பாப் பெருமானார் ஷிராஸ் நகரைவிட்டு நாடுகடத்தப்பட்டார். அப்போது கத்திஜா பேகத்திற்கு 23 வயதுதான் ஆகியிருந்தது.

1850-ஆம் வருடம் பாப் பெருமானார் தியாகமரணமுற்றார். ஆனால் தாம் விதவையாகிவிட்டோம் என்னும் எண்ணம் சிறிதுமின்றி தமது நாயகரின் சமயத்திற்கு தம்மால் முடிந்த அனைத்தையும் செய்து, பஹாவுல்லாவினால், கைரூ’ன் நிஸா (பெண்களுள் அதி சத்தியவதி) என்னும் பெயர் வழங்கப்பட்டு, அப்பெயரை, வேறு எவருமே–பாப் பெருமானாரின் தாயைத் தவிர– பயன்படுத்தக்கூடாது எனவும் தடைவிதிக்கப்பட்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: