பெண்கள் விடுதலை வீராங்கனை அஜர்பைஜானில் கொண்டாடப்படுகிறார்


26 ஜூலை 2018

பாரசீக மன்னரான நஸிரிட்டின் ஷா, தாஹிரியைச் சந்தித்தபோது, அவர் தமது நம்பிக்கையைத் துறந்தால் அவரைத் திருமணம் செய்து கொள்ள முன்வந்ததை இந்தக் காட்சி சித்தரிக்கிறது. தஹிரி ஒரு கவிதையுடன் இந்த வாய்ப்பை நிராகரித்தார்: “உனக்கான ராஜ்யம், செல்வம் மற்றும் அதிகாரம் / பிச்சை, நாடுகடத்தல் மற்றும் எனக்கு இழப்பு / முந்தையது நன்றாக இருந்தால், அது உங்களுடையது / பிந்தையது கடினமாக இருந்தால், அது என்னுடையது.”

பாக்கு – அஜர்பைஜான் – பாரசீக மன்னரின் போற்றும் பார்வையில் கதாநாயகி, அவருடைய முன்மொழிவைக் கேட்கிறார். உங்கள் சமய நம்பிக்கையை விட்டுவிட்டு, என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள், எனக்குப் பிடித்த ராணியாக ஆடம்பர வாழ்க்கையை வாழுங்கள், அதுவே மன்னனின் கோரிக்கையாகும்.

இந்தக் காட்சியை 450 பேர் கொண்ட பார்வையாளர்கள், என்ன நடக்கும் என்பதை அறிய ஆவலுடன் பார்க்கின்றனர்.

கிருபை, ஞானம் மற்றும் தைரியத்துடன், தஹிரி அந்த வாய்ப்பை நிராகரிக்கிறார். உலகை மாற்றியமைக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க அவர் தேர்வு செய்கிறாள்.

அஜர்பைஜான் மாநில கல்வித்துறையின் தேசிய நாடக அரங்கத்தில் ஜூலை  8-ஆம் தேதி செல்வாக்கு மிக்க கவிஞர், அறிஞர் மற்றும் பெண் விடுதலைக்கான சாதனையாளராக விளங்கிய தஹிரியின் வாழ்க்கையைப் பற்றிய புதிய நாடகமான ‘சூரிய புத்திரி’ அரங்கேற்றப்பட்டது.

அந்தத் தொடக்க இரவு கலைஞர்களையும் பார்வையாளர்களையும் ஒரே மாதிரியாகக் கவர்ந்தது.

“தாஹிரி ஒரு மதத்திற்கு மட்டுமல்ல, மனிதகுல அனைவருக்கும் ஒரு வீராங்கனை” என அஜர்பைஜான் எழுத்தாளர்கள் சங்கத்தின் தென் அஜர்பைஜான் இலக்கியத் துறையின் தலைவரும் கவிஞருமான சைமன் அருஸ், நாடகத்திற்குப் பிறகு பார்வையாளர்களிடம் கூறினார். “அவர் முழு மனிதகுலத்திற்கும் தெய்வீக மற்றும் ஆன்மீக விழுமியங்களுக்காக வாழ்ந்து இறந்தார். கிழக்கின் வரலாற்றில் அவருக்கு யாருமே இணை இல்லை. லட்சக்கணக்கானோரின் சுதந்திரக் குரல் அவர்.”

அஜர்பைஜான் சமூகத்தில் தாஹிரியின் வாழ்க்கை மீண்டும் கவனத்தை ஈர்த்து, ஆர்வத்தைத் தூண்டும் நேரத்தில் இந்த நாடகம் வருகிறது.

தாஹிரியின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் பற்றிய புத்தகம் 2016-இல் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது, இஃது அஜர்பைஜான் மக்களிடையே பெண்களின் விடுதலை சின்னமான சாதனையாளரின் வாழ்க்கையைப் பற்றி வளர்ந்து வரும் ஆர்வத்தை ஊக்குவிக்கிறது. தாஹிரியைப் பற்றி அறிந்த பத்திரிகையாளர் கமலே செலிம் முஸ்லிம்கிஸி மிகவும் ஈர்க்கப்பட்டார்; அவர் ‘சூரிய புத்திரியின்’ தயாரிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

“தாஹிரி உண்மைக்காக வாழ்ந்து இறந்தார்” என திருமதி. முஸ்லீம்கிஸி கூறுகிறார். “இந்தத் திட்டம் என் வாழ்க்கையை மாற்றியது. முன்பு எனக்கு யோசனைகளும் கனவுகளும் மட்டுமே இருந்தன, ஆனால் இப்போது மாற்றங்களைச் செய்ய எனக்கு ஆன்மீக சக்தி உள்ளது. பொது நலனுக்காக செயல்பட தஹிரி எனக்கு தைரியத்தை அளித்தார்.”

தாஹிரி 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஈரானில் உள்ள கஸ்வினில் ஒரு முக்கிய மதக் குடும்பத்தில் பிறந்தார். அந்த நேரத்தில், பெண்களின் திறனுக்கு அப்பாற்பட்டதாகவும், அவர்கள் பின்பற்றுவதற்குப் பொருத்தமற்றதாகவும் கருதப்பட்ட விஷயங்களில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவருக்கு முன் தடைகள் இருந்தபோதிலும், தாஹிரி ஒரு புகழ்பெற்ற கவிஞராகவும் அறிஞராகவும் ஆனார்; அவருடைய காலத்தில் ஆழமாக உணரப்பட்ட அவரது செல்வாக்கு ஒன்றரை நூற்றாண்டு கடந்தும் குறையவில்லை.

1844-ஆம் ஆண்டில், பஹாவுல்லாவின் முன்னோடியான பாப் பெருமானாரின் போதனைகளை ஏற்றுக்கொண்ட முதல் பெண்மணியான தாஹிரி, பாரசீக மற்றும் அதற்கப்பால் சென்று, சில வருடங்களில் பல்லாயிரக்கணக்கான நம்பிக்கையாளர்களைக் கொண்டு வந்த முன்னணி நபர்களில் ஒருவரானார்.

“தாஹிரி” என்ற பட்டம் அவருக்கு பஹாவுல்லாவால் வழங்கப்பட்டது; அவரை 1848-இல் பதாஷ்ட்டின் வரலாற்று மாநாட்டில் அவர் சந்தித்தார். இந்தச் சொல் “புனிதமானது” என பொருள்படும்.

அந்த முக்கியமான மாநாட்டில்தான் தஹிரி தன் முக்காட்டைக் கழற்றினார்.          19-ஆம் நூற்றாண்டில் பெர்சியாவில், பொதுத் துறையில் பெண்களுக்கு சிறிய பங்கு இருந்த, ஓர் ஆணாதிக்க சமூகத்தில் இந்தச் செயல் நினைத்துப் பார்க்க முடியாததாகக் கருதப்பட்டது. அந்த வரலாற்றை மாற்றும் தருணத்தில், பெண்களுக்கும் ஆணுக்கும் இடையே சமத்துவம் கொண்டுவரப்பட்டது என்றும், பாப்-இன் போதனைகள் கடந்த கால மரபுகளிலிருந்து முறிவைக் குறிக்கிறது என்றும் – ஷோகி எஃபெண்டி விவரித்தபடி, அது ஒரு “அதிர்ச்சியூட்டும் எக்காளச் சத்தம்”.  

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, பாரசீக அரசாங்கம் பாப்-இன் ஆதரவாளர் மீது கொடூரமான துன்புறுத்தலை மேற்கொண்டதால், தாஹிரியும் தெஹ்ரானில் சிறைபிடிக்கப்பட்டார். அவருடைய நம்பிக்கையைக் கைவிட மறுத்ததால், அவர் தூக்கிலிடப்பட்டார்; அதைத் தொடர்ந்து நூற்றாண்டு முழுவதும் அவரது மரணத்திற்கு முன்பான வார்த்தைகள் ஒலித்தன: ” உங்கள் விருப்பப்படி என்னைக் கொல்லலாம், ஆனால் பெண்களின் விடுதலையை உங்களால் தடுக்க முடியாது.”

சூரிய புத்திரி, தாஹிரியின் ஒப்பிடமுடியாத தைரியத்தை எடுத்துக்காட்டுகிறது; இது தலைமுறை தலைமுறையாக மக்களை ஆதிக்கம் செலுத்திய ஒரு குணம். தஹிரியாக நடிக்கும் முன்னணி நடிகரான நிகர் அலியேவா விளக்குகிறார்:

தஹிரியின் உறவினராக நடிக்கும் ஒரு நடிகர், அவரைச் சமூகத்தில் உள்ள அறிவுசார் மற்றும் மத சிந்தனை இயக்கங்களுடன் இணைப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர், நாடகத்தின் ஒரு காட்சியில் தஹிரியின் மற்ற இரண்டு உறவினர்களுடன் பேசுகிறார்.

“நாடகத்தில் தஹிரி கூறினார், ‘நான் ஸார்ரின் தாஜ் ஆகப் பிறந்தேன், ஆனால் தாஹிரியாக வாழ்ந்தேன்.’ தாஹிரி கதாபாத்திரத்தில் நடிக்கும்போது நான் மாறிவிட்டதாக உணர்ந்தேன். நான் முன்பு போல் இல்லை. இப்போது என் வாழ்க்கையின் பல்லவி: ‘நான் நிகராகப் பிறந்தேன் ஆனால் தாஹிரியாக வாழ்வேன்.”

இந்தப் படைப்பில், கதையின் பகுதிகளுக்கிடையே அவரது கவிதைகளிலிருந்து சிலவற்றை வாசித்தவாறு, தாஹிரியின் வாழ்க்கைக் காட்சிகள் நாடகமாக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்குப் பிறகு பார்வையாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்: “நாம் எவ்வளவு தைரியமாக இருக்க வேண்டும் என்பதையும், அடக்குமுறை மற்றும் கொடுங்கோன்மைக்கு எதிராக நாம் எப்படி குரல் எழுப்ப வேண்டும் என்பதையும் நான் இப்போது உணர்கிறேன்.”

தாஹிரி நீண்ட காலமாக கற்றோர்களிடையே ஆர்வத்தை ஈர்த்துள்ளார். 19-ஆம் நூற்றாண்டின் மேற்கத்திய மொழிப்புலமையாளர் (Orientalists) இலக்கியம் மற்றும் பாலின சமத்துவத்தின் மீதான அவரது செல்வாக்கு பற்றி எழுதினார்கள். சமீபத்திய ஆண்டுகளில், அவரைப் பற்றிய ஏராளமான கல்விக் கட்டுரைகள், புத்தகங்கள் மற்றும் அவரது மூன்று கவிதைத் தொகுப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளப்பட்டன.

நாடக ஆசிரியர்கள், நாவலாசிரியர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் அவரது வாழ்க்கை மற்றும் கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்ட படைப்புகளை உருவாக்குவதன் மூலம், கலைஞர்கள் மனிதகுலத்தின் மீதான அவரது முக்கிய செல்வாக்கைச் சித்தரிக்க முயன்றனர்.

தாஹிரி பாரசீக, அரபு மற்றும் அஸெரி ஆகிய மொழிகளில் எழுதினார், இது கஸ்வின் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாகப் பேசப்படும் மொழியாகும். அஜர்பைஜானின் முக்கிய மொழி அஸெரிதான்.

இந்த நாடகம் பாக்கு-வில் அதன் ஓட்டத்தைத் தொடரும் மற்றும் வரும் மாதங்களில் நாடு முழுவதும் உள்ள மற்ற நகரங்களில் மேடைக்குச் செல்லும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1276/